dinamalar telegram
Advertisement

அதிமேதாவி அங்குராசு!

Share

உதவியிலேயே சிறந்தது!
சாதாரண காயம் முதல், பெரும் விபத்தில் சிக்குவோர் வரை, முதல் உதவி செய்வது அவசியம். இதற்கு, தேவையான, மருத்துவ பொருட்களை, பாதுகாப்பது, 'முதலுதவி பெட்டி' என, அழைக்கப்படுகிறது.
இது, அனைத்து வீடுகளிலும், அலுவலங்களிலும் இருக்க வேண்டும்.
இதில், சுத்தமான கையுறை, டிஸ்போசபிள் பேஸ் மாஸ்க், சுத்தமான பஞ்சு, டிரஸ்சிங் துணி, நுண் துளையுள்ள ஒட்டும் மருத்துவ நாடா, ஆன்டி செப்டிக் லோஷன், ஆயின்மென்ட், துருப் பிடிக்காத கத்தரிக்கோல், குளுக்கோஸ், எலெக்ட்ரால் போன்ற நீர்ச்சத்து பவுடர்கள், வலி நீக்கும் மாத்திரைகள் இருக்க வேண்டும்.
வீட்டில், முதல் உதவி பெட்டியை அமைத்து பேணுங்கள். அவற்றை முறையாக பயன்படுத்தி உதவுங்கள்.
* உதவுவதாக நினைத்து, காயமடைந்தவருக்கு வலியை கொடுத்து விடக் கூடாது. இருசக்கர வாகன விபத்தில், சிக்கியவரின் தலைக்கவசத்தை கழற்றும் போது, மிக கவனம் தேவை. ஏனெனில், அவர் கழுத்தில் அடிப்பட்டிருக்கலாம். அவசரமாக கழற்றினால் பாதிப்பு அதிகரிக்கக் கூடும்
* உயரமான கட்டடத்தில் இருந்து விழுந்தவரை கழுத்து பகுதி அசையாமல் தாங்கி பிடித்து, மெதுவாக துாக்கி செல்ல வேண்டும்
* நெருக்கடி நேரங்களில், சமயோசித அறிவும், பொது அறிவும் வேலை செய்ய வேண்டும். சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கும் வசதிகளை பயன்படுத்தி உதவுவதே விவேகம்
* குழந்தைகள் விளையாடும் போது, காயம் ஏற்பட்டால், காயம் பட்ட இடத்தை சோப்பு போட்டு கூட கழுவி சுத்தப்படுத்தலாம். ரத்தம் அதிகம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்தி கட்டு போடலாம். சந்தனம், மஞ்சள், காபித்துாள் என, எந்த பொருளையும், காயத்தில் வைக்க கூடாது
* டெட்டனஸ் டெக்ஸாய்டு என்ற டி.டி., தடுப்பூசி, ஏற்கனவே போட்டிருந்தால், காயத்துக்கு தனியாக ஊசி போட வேண்டிய தேவையில்லை; 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 'டி.டி., தடுப்பு ஊசி' போட்டால் போதுமானது
* முதலுதவி அளித்ததும், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்
* பிளேடு அல்லது கத்தியால் வெட்டுபட்டு, ரத்தக் கசிவு ஏற்பட்டால், சுத்தமான துணியால் அழுத்தி கட்டுப்படுத்த வேண்டும்
* மூக்கில் ரத்தம் வந்தால், முன் நோக்கி குனிய செய்து, மூக்கின் முன் பகுதியை, விரல்களால் பிடித்தபடி, வாயால் மூச்சு விட செய்ய வேண்டும். மூக்கில் இருந்து வரும் ரத்தத்தை விழுங்கக் கூடாது. ரத்தம் வாய்க்குள் சென்று, நுரையீரலில் புகுந்து விடும். எனவே, நிமிரவும், மூக்கு சிந்தவும் கூடாது
* காதில் ரத்தம் கசிந்தால், சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்; காதுக்குள் எதையும் போட்டு சுழற்ற கூடாது
* கை, கால், விரல் துண்டிக்கப்பட்டால், அந்த உறுப்பை, சுத்தமான ஈரத்துணியில் சுற்றி, ஒரு பாலித்தீன் பையில் போட்டு, ஐஸ் கட்டிகள் நிரம்பிய பெட்டியில் மருத்துவமனைக்கு, எடுத்து செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவரையும் உடன் அழைத்து செல்ல வேண்டும்.துண்டிக்கப்பட்ட உறுப்பை, நேரடியாக, ஐஸ் பெட்டிக்குள் வைக்கக் கூடாது. சுற்றிலும் ஐஸ் இருக்கும் பையில் வைத்து, விரைவில், மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும்
* காதுக்குள் பூச்சி புகுந்து விட்டால், டர்பன்டைன் எண்ணெய் சில துளிகள் விடலாம். பூச்சி உடனே இறந்து விடும். பின், அதுவே வெளியே வரவில்லை எனில், மருத்துவரிடம் காட்டவும்
* குழந்தைகள் விளையாடும் போது, தானியங்கள் மூக்கினுள் நுழைய வாய்ப்பு உண்டு. அதை எடுக்க முயற்சித்தால், உள்ளே சென்று, ஆபத்து ஏற்படுத்தும். எனவே, உடனே, மருத்துவரிடம் காட்ட வேண்டும்
* குழந்தை தொண்டையில், ஏதேனும் பொருள் சிக்கிக் கொண்டால், உடனடியாக, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்த வழி.
முதல் உதவி மிக முக்கியமானது; சரியான நேரத்தில், உயிரைக் காப்பாற்றுவது. அதை செய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும்!
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement