dinamalar telegram
Advertisement

வீரமங்கை வேலுநாச்சியார்!

Share

நவம்பர், 1780ல், போர் கவசங்கள் அணிந்து, வாளை உயரே துாக்கியவாறு, குதிரையில் பறந்து கொண்டிருந்தார் வேலுநாச்சியார்.
கணவரை, நயவஞ்சமாக கொன்ற ஆங்கிலேயரை வீழ்த்த, வீறு கொண்டு எழுந்தவர். முழக்கமிட்ட வீரர்களுக்கு, தலைமை தாங்கி, தென்னிந்தியாவில் கர்நாடக பகுதியை ஆண்ட, ஆற்காடு நவாப்பையும், ஆங்கிலேயரையும் எதிர்த்து போரிட்டார்.
ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - முத்தாத்தாள் நாச்சியாருக்கு, 1730ல் பிறந்தார் வேலுநாச்சியார். குதிரையேற்றம், வில், வாள் வித்தை என, போர் கலைகளிலும், கல்வியிலும் தேர்ச்சி பெற்றார்.
சிலம்பாட்ட போட்டியில், துணிச்சலாக விளையாடி, சிலம்பம் கற்றுக் கொடுத்த குருவையும் தோற்கடித்தார். குதிரை சவாரி, வேலுநாச்சியாருக்கு பொழுபோக்கு.
ஒரு நாள் தந்தையிடம், 'அப்பா... நம்மிடம் உள்ள குதிரைகளுக்கு வேகம் இல்லை; வீரமும், வேகமும் நிறைந்த குதிரையை ஓட்ட விரும்புகிறேன்...' என்றார்.
மகளின் ஆர்வத்தைக் கண்ட மன்னர், பெரிய குதிரையை பரிசளித்தார்.
பலசாலி ஆண்களே ஏறத் தயங்கும், அந்த குதிரையைக் கண்டு வேலுநாச்சியார் பயப்படவில்லை. அதில் தாவி ஏறினார். காட்டுக்குள் ஓடிய குதிரை, அவரை கீழே தள்ள முயன்றது. அதை அடக்கி திறமையாக ஓட்டினார் வேலுநாச்சியார்.
தமிழ், பிரெஞ்சு உட்பட, பல மொழிகளை கற்று தேர்ந்தார்.
சிவகங்கை இளவரசர், முத்துவடுக நாதரை, 1746ல் திருமணம் செய்தார். திருமணம் முடிந்தவுடன், குற்றால அருவியில் குளித்து மகிழ, காட்டு வழியே, கணவருடன் சென்று கொண்டிருந்தார்.
திடீரென்று பாய்ந்த புலி, முத்துவடுக நாதரின் கழுத்தை பிடித்தது. வேலுநாச்சியார் சிறிதும் அஞ்சவில்லை. புலி மீது பாய்ந்து, வாலை முறுக்கி, வாயைப் பற்றினார். புலியை, கைகளாலேயே அடித்துக் கொன்றார்.
முத்து வடுகநாதர், சிவகங்கைச் சீமைக்கு, 1750ல் அரசரானார். உடனே, கோட்டையை வலுப்படுத்தி, படையை பலப்படுத்தினார்.
ஆற்காடு நவாப் துணையுடன், ஆங்கிலேய அரசு, தமிழகத்தில் குறுநில மன்னர்களை கட்டுப்படுத்தி, வரி வசூலித்தது. படைகளை அனுப்பவும் வற்புறுத்தினர். தம் படைக்கு, உணவு, தங்கும் வசதி செய்ய கட்டளையிட்டனர்.
அதற்கு அடிபணிய மறுத்தவர்கள் மீது போர் தொடுத்தனர். அப்படி பணிய மறுத்தவர்களில், முத்துவடுகநாதரும் ஒருவர். அவரை தாக்க, தருணத்தை எதிர்நோக்கியிருந்தனர் ஆங்கிலேயர்.
ஒரு போரின் போது, சிவகங்கை படையை எதிர்க்க முடியாமல், ஆங்கிலேயப் படை பின் வாங்கியது.
அந்த நேரம், 'சமாதானமாகப் போகலாம்' என்று, அழைத்து, சூழ்ச்சியால் தோற்கடிக்க ஆங்கிலேயர் திட்டம் தீட்டினர்.
இதை அறியாத முத்து வடுகநாதர், இறைவனை வழிபட, காளையார் கோவிலுக்குச் சென்றார். அப்போது சூழ்ச்சியால் கொன்றனர்.
இதை அறிந்த வேலுநாச்சியார், துடித்து போனார். கணவருடன் இறந்து விட எண்ணினார். அவரது பெண் குழந்தை அனாதையாகும்; நாடும் சீரழிந்து விடும் என, எண்ணி, அந்த முடிவை கைவிட்டார்.
கணவரைக் கொன்றவர்களை ஒடுக்க உறுதி பூண்டார். நவாப்பும், ஆங்கிலேயரும் வேலுநாச்சியாரை அழிக்க முயன்றனர். வேலுநாச்சியாரை, உயிர் கொடுத்து காத்தாள், உடையாள் என்ற பெண்.
நவாப்பின் மகன் சிவகங்கை சீமை மன்னனாக முடி சூடி, கொடுங்கோல் ஆட்சி புரிந்தான். கடுமையாக வரி விதித்தான்; மக்கள் நிம்மதி இழந்தனர். சிவகங்கை சீமையில், கலவரம் ஏற்பட்டது.
நவாப்பையும், ஆங்கிலேயரையும், மைசூர் மன்னர், திப்பு சுல்தான் எதிர்த்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், வேலுநாச்சியார், திப்புவின் உதவியை பெற கடிதம் எழுதினார். திப்புவிடமிருந்து பதில் இல்லை.
வேலுநாச்சியார் பொறுமை இழக்கவில்லை. நம்பிக்கைக்கு உகந்தவர்களுடன், ஆண் வேடம் பூண்டு திப்புவைச் சந்திக்க புறப்பட்டார்.
தைரியமாக திப்பு சுல்தான் முன், உருது மொழியில் பேசினார். அவரது வீரத்தையும், உறுதியையும் கண்டு அசந்த திப்புசுல்தான், உதவ முன் வந்தார்.
திண்டுக்கல்லில் தங்கி, படைக்குப் பயிற்சி அளித்தார் வேலுநாச்சியார். அப்போது, அவருக்கு உற்ற தோழியாக, குயிலி இருந்தார்.
குயிலி தலைமையில் பெண்கள் படை ஒன்று தயார் செய்யப்பட்டது. தனக்காக உயிரை விட்ட, உடையாள் என்பவர் பெயரை அப்படைக்கு சூட்டினார் வேலுநாச்சியார்.
நவாப் ஆட்சியில் குழப்பம் பெருகியது. மக்கள், வேலுநாச்சியார் அரசியாக வருவதை விரும்பினர். பணமும், பொருளும் கொடுத்து ஆதரித்தனர்.
எட்டு ஆண்டுகள், மிக கவனமாக திட்டமிட்ட வேலுநாச்சியார், ஆங்கிலேயரை எதிர்க்க, பெரும் படையுடன் புறப்பட்டார். எதிரிகள் பீரங்கி படையால் அச்சுறுத்தினர். தளரவில்லை வேலுநாச்சியார். தாக்குதலை எதிர்க் கொள்ள முடியாமல், ஆங்கிலேயப்படை தடுமாறி ஓடியது.
சிவகங்கை கோட்டையை அடைந்தது, வேலுநாச்சியார் படை.
கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு இருந்தது; நுழைவது எளிதாக இல்லை.
வேலுநாச்சியார் புத்திசாலித்தனமாக செயல்பட்டார். விஜயதசமி அன்று, கோட்டையில், ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் வழிபட பெண்களுக்கு அனுமதி உண்டு. அன்று மாறுவேடத்தில் பெண்களை கோட்டைக்குள் அழைத்து சென்று, பெரும் தாக்குதல் நடத்தினார். வெடி மருந்து கிடங்கை தீ வைத்து அழித்தார்.
பின், அரசியாக முடிசூடிக் கொண்டார். மக்கள் அன்பையும், ஆதரவையும் பெற்று, நல்லாட்சி புரிந்தார்.
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார். இது, வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement