Advertisement

மனசே மனசே குழப்பம் என்ன! - பகிர்ந்தால் குறையும் பாரம்!

பார்க்கின்சன்ஸ்' பாதித்தவர்களுக்கான, அமைப்பு இது. பாதிப்பு இருப்பவர்களுக்கு, இது தான் தேவை; இதைச் செய்தால் பாதுகாப்பாக உணர்வர் என, நாமாகவே முடிவு செய்யாமல், என்ன உதவி தேவை என்பதை அவர்களிடமே கேட்டு, அதைச் செய்து தருகிறோம்.
பொருளாதாரம் படித்து, அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில், வேலை செய்தேன். என் அப்பாவிற்கு, 2010ல், மூளையில் ரத்தக் கட்டி பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த அப்பாவைப் பார்க்க வந்தேன்; சாப்பிடுவது, நிற்பது, நடப்பது, பேசுவது எல்லாம் நின்று விட்டது.
முறையான சிகிச்சை கொடுத்தால், சரியாகி விடும் என்று நினைத்தேன்; நான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்தார்.
அப்பாவின் சிகிச்சை சமயத்தில், பார்க்கின்சன்ஸ் பாதித்த ஒருவரை சந்தித்துப் பேசினேன். இந்த பாதிப்பு இருப்பவர்களுக்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னார்; ஒரு குழு துவங்கலாம் என்று நினைத்து, அவரைப் பற்றி, 'அண்ணா நகர் டைம்'சில் எழுதினேன்.
இவரைப் போன்றவர்களுக்காக, ஒரு குழு அமைக்கும் யோசனை இருப்பதையும் அதில் தெரிவித்தேன். முதலில் தொடர்பு கொண்ட, 10 பேரை அழைத்த போது, பார்க்கின்சன்ஸ் என்றால் என்ன? அறிகுறிகள், சிரமங்கள், சிகிச்சை என்று அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஒத்த பிரச்னை உள்ளவர்கள், அனுபவங்களை பகிர்ந்து கொண்டது, அவர்களுக்குள் நேர்மறை உணர்வைத் தந்ததால், தொடர்ந்து இது போன்ற சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்கள்.
அப்பாவிற்காக, அமெரிக்க வேலையை விட்டு விட்டேன். முழு நேரமாக, இவர்களுக்கு உதவலாம் என்று முடிவு செய்தேன். குழு துவக்கி, மூன்று மாதங்களில், அப்பா இறந்து விட்டார்.
சென்னையில் இயங்கும், பிரான்ஸ் நாட்டு தனியார் கம்பெனியில், 'எக்கனாமிக் பாலிசி அனலிஸ்ட்'டாக, வேலை செய்து, இந்த அமைப்பையும் நடத்துகிறேன்.
சென்னையில் மட்டும், 200 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உறுப்பினர்களாக இருக்கின்றனர். மாதம் இரண்டு முறை சந்திப்புகள் நடத்துகிறோம். பாதிக்கப்பட்ட நபரால், வர இயலாத சூழலில், பாதித்த இன்னொரு நபரை அழைத்துக் சென்று நேரில் சந்திக்கிறோம்.
ஒரே கோளாறு உள்ள இருவர் சந்திக்கும் போது, சமூக ஆர்வலர், நர்ஸ் இவர்களிடம் பேசுவதைக் காட்டிலும், மனரீதியில் அதிக பலன் தரும்.
வாரம் ஒரு முறை, 'யோகவாசினி' அமைப்பின் உதவியுடன், தனி நபரின் தேவைக்கு ஏற்ப, ஒரு நபர், ஒரு பயிற்சியாளர் என்ற முறையில், ஆசனங்களைக் கற்றுத் தருகிறோம்.
இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு தரப்படும், யோகா பயிற்சியால் கிடைத்த பலன்களை அடிப்படையாக வைத்து, 'போஸ்டர்' ஒன்றை உருவாக்கி, 'வேர்ல்டு பார்க்கின்சன்ஸ் காங்கிரஸ்' என்ற சர்வதேச கருத்தரங்கில் சமர்ப்பித்தோம்.
எஸ்.ஆர்.எம்., குழுமத்தில் உள்ள பயிற்சியாளர்களால், பேச்சு பயிற்சி தரப்படுகிறது.
பார்க்கின்சன்ஸ் என்று உறதியானவுடன், உடல் செயல்பாடுகள் முடங்கி விடாது. தசை தொடர்பான கோளாறு என்பதால், முதலில் வெளி இயக்கங்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில், உள் உறுப்புகளின் செயல்பாடுகளில் சிரமம் வரும். பார்க்கின்சன்ஸ் கோளாறு, எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தராது.
கடைசியில் உணவு விழுங்குவதற்கே சிரமமாகி, நுரையீரலில் தொற்று ஏற்படலாம். பார்க்கின்சன்ஸ் பாதிப்பில் ஏற்படும், பின் விளைவுகளாலேயே இறப்பு ஏற்படும். இந்த கோளாறுகளோடு, 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்பவர்கள் இருக்கின்றனர்.
விபரம் தெரிந்தவர்கள், எங்களை தொடர்பு கொள்கின்றனர். சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள், இது போன்ற கோளாறு இருந்தால், எங்களை தொடர்பு கொண்டால், முடிந்த அனைத்தையும், தன்னார்வலர்களின் உதவியோடு, இலவசமாக செய்து தர தயாராக உள்ளோம்.

சுதா மெய்யப்பன், நிறுவனர், பரிவர்த்தன், சென்னை.
மொபைல்: 93810 35979
Email: sudha.parivarthan@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement