Advertisement

இளஸ்... மனஸ்... (157)

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, இன்ஜினியரிங் கல்லூரி மாணவி எழுதுவது. உங்களிடம் என்னுடைய ரகசியங்கள் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்... என்னை திருத்துங்க ஆன்டி...
சிறு வயதில் இருந்தே, பொய், திருட்டில் ஈடுபட்டு, அது, பெரிய அளவில், இன்று பிரச்னையாகி உள்ளது.
நான்காம் வகுப்பில், பெற்றோர் திட்டியதற்காக, வீட்டை விட்டு ஓடி, 'என்னை கடத்தி விட்டனர்...' என்று பொய் சொன்னேன்.
ஏழாம் வகுப்பிலேயே, ஆபாச படங்களை பார்த்து, பெண்கள் மீது மட்டுமே ஆசை வருகிறது. இதனால், பக்கத்து வீட்டு ஆன்டியிடம் தவறாக நடந்தேன். அவர்கள், என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஆத்திரம் அடைந்த நான், அவர்களைப் பழி வாங்க, அவரது கணவரின் இரு சக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தினேன்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பெற்றோர் திட்டியதால், கொடிய முறையில் என்னை மாய்த்துக் கொள்ள முயன்றேன்; நிறைய செலவு செய்து, காப்பாற்றினர்; இத்தனைக்கும் மிக மிக நன்றாக படிக்கும் மாணவி நான்.
கல்லூரியில், ஆங்கில ஆசிரியை நன்றாக பேசுவார். என் மீது வெறுப்படைந்து, வாட்ஸ் ஆப்பில், என் நம்பரை, 'ப்ளாக்' செய்து விட்டார். ஆத்திரம் அடைந்த நான், அவர்கள் பெயரில், முகநுால் உருவாக்கி, 'லெஸ்பியன் பாட்னர்' என்று போட்டு, அவர்களது கைபேசி எண்ணையும் போட்டு விட்டேன்.
இதனால், தினமும், பல தொலைபேசி அழைப்புக்கள் வர, புகார் கொடுத்து, என்னை கண்டுபிடித்து, ஒரு மாதம், 'சஸ்பெண்ட்' செய்தது கல்லுாரி நிர்வாகம்.
ஜெயிலில் போடாமல், மன்னித்து விட்டார் அந்த ஆசிரியை; எல்லாருமே என்னை வெறுக்கின்றனர். தோழிகளே கிடையாது; வீட்டிலும் வெறுக்கின்றனர். இன்னும், 18 வயது கூட ஆகவில்லை; அதற்குள், இவ்வளவு பிரச்னை; மன உளைச்சலில் உள்ளேன்.
திருந்தி வாழ, வழி சொல்லுங்க ஆன்டி ப்ளீஸ்...

அன்பு மகளுக்கு, வணக்கம்!
உன் கடிதத்தை படித்ததும், அதிர்ச்சியில் உறைந்தேன். இப்படிப்பட்ட, மூர்க்கமான, மன்னிக்காத, பழி வாங்கும் குணம் உனக்கு எங்கிருந்து வந்தது... உன் பெற்றோர் வழியில், யாராவது இந்த குணத்தை உடையவராக இருப்பர். அவர்கள் வாழ்க்கை, நிச்சயமாக வெற்றியான வாழ்க்கையாக இருந்திருக்காது.
மகளே... நீ செய்த எல்லா தவறுகளையும், மறைக்காமல், பாவ மன்னிப்பு கேட்பது போல், தைரியமாக, என்னிடம் கூறி விட்டாய். அத்துடன், திருந்தி வாழ நினைக்கும் உன்னை பாராட்டுகிறேன்!
இத்துடன், இந்த கொடிய பாவ வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடு.
'இப்படி செய்து விட்டோமே... ஏன், இப்படிச் செய்தோம்' என்ற மன உளைச்சலுக்கு இடம் கொடுக்காதே... 'இனி, நல்லவளாக வாழ்வது எப்படி' என்பதை பற்றி மட்டும் யோசி.
பழி வாங்குதல், பிறரை மன்னிக்காத குணங்கள் இவை எல்லாம், உன் வாழ்க்கையை அழித்து விடும்.
துஷ்டனாய் வாழ்கிறவனுக்கு, மனதில் நிம்மதியே இருக்காது. அது மட்டுமல்ல... மற்றவர்களுக்காக அவன் வெட்டும் குழியில், ஒரு நாள், அவனே விழுந்துடுவான்.
உன் பெற்றோர், உன்னை நினைத்து எவ்வளவு வேதனைப்படுவர் என்று யோசித்துப் பார். அடிக்கடி கண்டித்தும், உன்னை திருத்திக் கொள்ளாமலே இருந்தால், திடீரென்று அழிவு வரும். நீ, இவ்வளவு துன்மார்க்கமாய் நடந்தால், யாருமே உன்னை நேசிக்க மாட்டார்கள்.
இறைவன் உனக்கு நல்ல அறிவை கொடுத்திருக்கிறார்; எனவே, படித்து முன்னேறி, எல்லாரும் உன்னை நேசிக்கும்படி வாழ்ந்து காட்டு. யாரையும் பழி வாங்க நினைக்காதே. அப்படிச் செய்தால், நீ மாட்டி, அவமானப்படுவாய் என்பதை மறந்து விடாதே. அதை இறைவனிடம் விட்டு விடு... அவர் பழி வாங்கும் போது, அது மிக மிக பயங்கரமாக இருக்கும்.
உன்னிடம் உள்ள நல்ல குணங்களை வெளியே கொண்டு வரப் பார்; நீ எப்போது, என்னிடம் சொல்லி மனம் வருந்தினாயோ, அப்போதே அவை உன்னை விட்டு போய் விட்டது.
இப்போது, நீ புதிய மனுஷி; படிப்பாளி; உண்மையை பேசுகிறவள்; பொறுமைசாலி; மன்னிக்கிற குணம் உள்ள குணவதி... சரியா...
இவற்றை உன் மனதில் ஏற்றிக் கொள்; ஒரு மாதம் இவற்றை பயிற்சி செய்து விட்டு, எனக்கு கடிதம் எழுது. நிச்சயம் உன்னால் முடியும் மகளே...
நீ நல்லவளாக மாற வாழ்த்துகள்!
-அன்புடன்,
ஜெனிபர் பிரேம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement