Advertisement

பெருசும் சிறுசும்!

ஒரு நீர்நிலை அருகே, எலிகள் கூட்டமாக வசித்து வந்தன; அங்கு, வேறு விலங்குகளின் நடமாட்டம் இல்லை. அதனால், பயம் இன்றி வாழ்ந்தன.
சற்று துாரத்தில் யானைக் கூட்டம் ஒன்று வசித்தது; அங்கு, நீர் நிலைகள் வற்றிப் போகவே, தவித்த யானைகள் இடம் பெயர்ந்தன. எலிகள் வசித்த இடம் அருகே, ஏரி இருப்பதைக் கண்டன; ஆவலுடன் சென்று தண்ணீர் குடித்தன.
அப்போது, யானைகளின் கால்களில் சிக்கி, ஏராளமான எலிகள் துடிதுடித்து இறந்தன. சுகமாக வாழ்ந்த எலிகளுக்கு, சோதனை ஏற்பட்டது.
'ஒருமுறை யானைகள் வந்து போனதற்கே, இத்தனை எலிகள் பலியாயிற்றே; தினமும் வந்து போனால், இனமே அழிந்து விடும்' என்று, எலிகள் வேதனையடைந்து ஆலோசனை செய்தன.
'யானை தலைவனிடம் முறையிட்டு, இந்த குறையைப் போக்கிக் கொள்ளலாம்...' என்று கூறியது எலித் தலைவன்.
மற்ற எலிகள் ஆமோதித்தன. எலிகள் கூட்டமாக வருவதைக் கண்ட யானைகள் வியப்புற்றன.
எலித்தலைவன், 'யானையாரே... நீங்கள் எங்களை விட, எத்தனையோ மடங்கு உருவத்தில் பெரியவர்கள்; உங்களை எதிர்க்கும் சக்தி, எங்களிடம் கிடையாது; வலிமையில்லாத எங்களுக்கு கேடு செய்யலாமா...' என்று, நயமாக கேட்டது.
யானைத் தலைவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
'எலியாரே... உங்களுக்கு எந்தக்கெடுதலும் செய்யவில்லையே...' என்றது.
'இவ்வளவு காலம் இல்லாமல், நாங்கள் வசிக்கும் ஏரிக்கு தண்ணீர் பருக வருகிறீர்கள்... உங்கள் காலடியில் சிக்கி, எங்களில் பலர் நசுங்கி, இறந்து விட்டோம்...
'நாங்கள், அந்த இடத்தில், நீண்ட காலமாக வசித்து வருகிறோம்; அது, எங்களுக்குப் பாதுகாப்பான இடம்; நீங்கள், அந்தப் பக்கம், நீர் பருக வர வேண்டாம் என்று விண்ணப்பிக்கவே வந்தோம்...' என்று, பயத்துடன் கூறியது.
'பயப்பட வேண்டாம்; மற்ற உயிர்களுக்கு தீங்கு ஏற்படும்படி நடக்க மாட்டோம்; தைரியமாகப் போங்கள்; இனி அந்தப் பக்கமே வர மாட்டோம்...' என்று, உறுதி கூறியது யானைத் தலைவன்.
'உங்கள் உருவத்தைப் போல, உள்ளமும் உயர்ந்ததாகவே இருக்கிறது; சின்ன மிருகம் என்று, ஏளனம் செய்யாமல், இரக்கம் காட்டினீரே... இந்த நன்றியை மறக்க மாட்டோம்; எந்த நேரத்திலும் உதவ தயங்க மாட்டோம்...' என்று கூறி, எலிகள் விடைப் பெற்றன.
அதன்பின் யானைகள், வேறு நீர் நிலைக்கு சென்றன. எவ்விதத் தொந்தவுரம் இன்றி, எலிகள் வாழ்ந்தன.
சில நாட்களுக்கு பின், அந்நாட்டு மன்னர், வேட்டையாட காட்டுக்கு வந்தார். அவர் பார்வையில், யானைகள் கூட்டம் தென்பட்டது. அவற்றைப் பிடிக்க திட்டமிட்டார். பெரிய பள்ளம் வெட்டினார். யானைகளில், சில அந்த பள்ளத்திற்குள் மாட்டிக் கொண்டன; அவற்றில், யானைத் தலைவனும் இருந்தான்.
அவற்றை காவலர்கள் பிடித்து, கயிறுகளால் மரத்தில் பிணைத்துக் கட்டியிருந்தனர்; விடுவித்து ஓட முடியாமல் தவித்தன யானைகள்.
அப்போது, எலித்தலைவனிடம் நடந்தவற்றை ஒரு யானை கூறியது. 'அப்படியா... இதோ வருகிறோம்; அந்த இடத்தைக் காட்டுங்கள்...' என்ற எலிகள், கூட்டமாக புறப்பட்டன.
கூரிய பற்களால், யானைகளைப் பிணைத்திருந்த கயிறுகளைத் துண்டித்தன; எல்லா யானைகளும், விடுவிக்கப்பட்டன.
யானைகளுக்கு, சந்தோஷம் தாங்க முடியவில்லை; பலமுள்ள பெரிய விலங்காக இருந்தும், சிறிய எலிகள் காப்பாற்றியதை எண்ணி நெகிழ்ந்தன.
எலித் தலைவனுக்கு, நன்றி தெரிவித்தான், யானைத் தலைவன்.
குட்டீஸ்... உருவத்தை பார்த்து, யாரையும் அற்பமாக எண்ணாதீர்; ஆபத்து நேரத்தில், அவர்கள் உதவி தேவையாக இருக்கும்.
-ஸ்ரீ செண்பகா பதிப்பகம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement