Advertisement

பாட்டியின் சாமர்த்தியம்!

மன்னம் என்ற ஊரில் முத்தம்மா என்பவள் வசித்து வந்தாள்; வயது முதிர்ந்தவள்; படு கெட்டிக்காரி. அவளுக்கு ஒரே மகள்; நல்ல இடத்தில் திருமணம் முடித்தாள்.
மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பரமன் என்று பெயர் சூட்டினர். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து, பள்ளி செல்லும் வயதை அடைந்தான்.
ஒரு நாள் -
மகளும், மருமகனும் வெளியூர் சென்றிருந்த போது, விபத்தில் பலியாயினர். பேரனை பராமரிக்கும் பொறுப்பு, பாட்டி தலையில் விழுந்தது.
இந்நிலையில், அங்குள்ள அரண்மனையில் துப்புரவு வேலையில் சேர்ந்தாள், பாட்டி.
பேரன் மீது பாசமழை பொழிந்து, படிக்க வைத்தாள். அவனுக்கு படிப்பு ஏறவில்லை.
'அப்பாவியாக இருக்கிறானே... எப்படி பிழைக்கப் போகிறானோ' என, கவலையடைந்த பாட்டி, கொஞ்சம் சொத்து சேர்த்து வைக்க எண்ணினாள். ஆனால், சம்பளம் வயிற்றைக் கழுவத்தான் போதுமானதாக இருந்தது.
தினமும் கருவூலக் கதவை, காவலர்கள் கதவைத்திறந்து விடுவர்; அங்குள்ள அறைகளைச் சுத்தம் செய்வாள் பாட்டி; பணி முடிந்து வெளியே வந்ததும், பூட்டி விடுவர்.
வழக்கம் போல், ஒருநாள் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்போது, ஒரு மரப்பெட்டிக்கும், சுவருக்கும் இடையே சில கற்கள் மின்னின; அவற்றை பார்த்த பாட்டி, வியப்படைந்தாள். அத்தனையும், விலை உயர்ந்த வைரக்கற்கள்!
பாதுகாப்பாக பெட்டியில் இருந்த வைரக் கற்கள் எப்படிச் சிதறின என, யோசித்தாள்.
அந்த மரப்பெட்டியில், சிறு ஓட்டை இருந்தது. அதன் வழியாக, எலிகள் வந்து சென்றன. அதன் மூலம் வைரக்கற்கள் சிதறியிருக்கலாம் என, நினைத்தாள்.
'சிதறிய வைரக்கற்களை, எடுத்து சென்று, பதுக்கி, வெளியூரில் விற்கலாம்...' என, முடிவு செய்தாள்.
வைரக்கற்களை சாண உருண்டைக்குள் புதைத்து, எடுத்து வந்தாள். அவற்றை, வீட்டின் உள்ளே, குழி தோண்டி புதைத்து வைத்தாள்.
பேரன் இதைப் பார்த்து விட்டான்.
'என்ன பாட்டி... எதைப் புதைக்கிறீர்...' என்று, கேட்டான்.
'ஒன்றுமில்லை... கண்ணாடி உடைந்து, சிதறி விட்டது; அந்த சில்லுகளைப் பொறுக்கி, குழியில் போட்டு மூடுகிறேன்...' என்று கூறி, சமாளித்தாள்.
அவன் நம்பவில்லை.
'பாட்டி எதையோ மறைக்கிறாள்' என, சந்தேகப்பட்டான்.
ஒரு நாள் -
அரண்மனைக் கருவூலத்தைச் சரி பார்க்கும் அதிகாரி, சோதனை போட வந்தார்.
வைரக்கற்கள் குறைவதைக் கண்டு அதிர்ந்தார். ஓட்டை வழியே, சிதறிய கற்களைத் தேடினார்; பணியாளர்களை விசாரணை செய்தார்; துப்புத் துலங்கவில்லை.
தீவிர சிந்தனைக்குப்பின், பாட்டி மீது சந்தேகம் ஏற்பட்டது.
ஒற்றனை, பாட்டி வீட்டுக்கு அனுப்பி, கண்காணிக்க கூறினார், அதிகாரி.
ஒற்றன், பாட்டி வீட்டுக்குச் சென்றான்; வீடு பூட்டிக் கிடந்தது.
முற்றத்தில் விளையாடிய பேரனிடம், 'ஒளி வீசும் கற்கள் ஏதாவது வீட்டில் இருக்கிறதா...' என, கேட்டான் ஒற்றன். வெகுளி சிறுவன், 'வீட்டுக்குள் சில கண்ணாடிச் சில்லுகளை பாட்டி புதைத்து வைத்திருக்கிறாள்...' என்று கூறினான்.
ஒற்றனுக்கு சந்தேகம் வலுத்தது. நள்ளிரவில், வீட்டை சோதனை போடும் முடிவுடன், அரண்மனைக்கு திரும்பினான்.
சிறிது நேரத்தில், வீட்டுக்கு வந்தாள் பாட்டி. அவளிடம் விவரத்தை கூறினான், பேரன்.
அதிர்ச்சியடைந்தவள், மாட்டிக் கொண்டால், சிறை தண்டனைக் கிடைக்குமே என, கவலை அடைந்தாள். அவளுக்கு நெஞ்சு அடைத்தது. தப்புவது பற்றி யோசித்து, செயலில் இறங்கினாள்.
வீட்டுக்குள் புதைத்திருந்த வைரக் கற்களை எடுத்து, வீட்டின் பின்புற குப்பைக்குழியில், மறைத்து வைத்தாள்.
இரவில், அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்தான் பேரன். அப்போது அடுப்பை பற்ற வைத்த பாட்டி, அதிரசம் சுட்டு, அடுக்கி வைத்தாள். நள்ளிரவில், அந்த அதிரசங்களை பேரன் படுக்கையை சுற்றி கொட்டினாள்.
பின், பேரனை எழுப்பி, 'கண்ணே... இந்த அறையில், அதிரச மழை பெய்கிறது; எழுந்து, அடுத்த அறைக்குள் சென்று படுத்துக் கொள்...' என்றாள்.
திடுக்கிட்டு எழுந்த பேரன், கண்களைக் கசக்கி, சுற்றும், முற்றும் பார்த்தான்; அங்கே அதிரசங்கள் சிதறிக் கிடந்தன; சிலவற்றை தின்றான். பின் அடுத்த அறையில், படுத்து கொண்டான்.
அதிரசங்களை ஒரு பானையில் போட்டு, மூலையில் வைத்து துாங்க சென்றாள் பாட்டி.
அதிகாலையில், திடீரென சிப்பாய்கள் வந்தனர். வீட்டை சோதனை போட்டனர்; எதுவும் கிடைக்கவில்லை. பாட்டியையும், பேரனையும் மன்னரிடம் அழைத்துச் சென்றனர்.
'எங்கே அந்த வைரக்கற்கள்...' என்றார் மன்னர்.
ஒன்றும் தெரியாதவள் போல், அப்பாவியாக விழித்தாள் பாட்டி.
'அய்யா... என் பேரன் மனநோயாளி... அவன் ஏதையாவது உளறிக் கொண்டேயிருப்பான்; நேற்று நள்ளிரவு என்ன சொன்னான் தெரியுமா... அவனிடமே கேளுங்கள்...' என்றாள்.
'இரவு என்ன நடந்தது...' என்றார் மன்னர்.
பேரன் மிரண்டு விழித்தபடி, 'நடு இரவில் அதிரச மழை எங்கள் வீட்டில் பொழிந்தது; சில அதிரசங்களை நான் தின்றேன்...' என்றான்.
இதைக் கேட்டு, மன்னர் உட்பட அனைவரும் சிரித்தனர்.
அப்போது பாட்டி, 'இவன் சொன்னதை நம்பி, என்னை, திருடனாக்கி விட்டீரே...' என்று, கண்ணீர் விட்டாள். பாட்டியிடம் வருத்தம் தெரிவித்த மன்னர். பொருளுதவியும் செய்தார்.
குட்டீஸ்... பாட்டி போல் திருடக் கூடாது; பேரனைப் போல், முட்டாளாக இருக்கவும் கூடாது. உழைத்து வாழவேண்டும் என்பதை உணருங்கள்!
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement