Advertisement

இளஸ்... மனஸ்... (153)

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, அன்பு மகள் எழுதுவது... பிளஸ் 2 முடித்து, குடும்ப சூழ்நிலை காரணமாக, தையல் கற்று கடையில் வேலை செய்து வந்தேன்.
அதற்குள், ஒரு கம்பெனியில் நல்ல வேலை கிடைத்ததால், அங்கு சேர்ந்தேன்; அந்த வேலை பிடிக்கவில்லை.
'எனக்கு பிடித்த தையல் வேலையை செய்தே முன்னேறியிருக்கலாம்; அதை விட்டு விட்டு இங்கு ஏன் வந்தோம்...திரும்பவும் அந்த தொழிலுக்கே சென்று விடலாமா...' என தோன்றுகிறது.
யார் என்ன சொன்னாலும், உடனே அந்த வேலைக்கு போகலாமா என நினைக்கிறேன். இதனால், ஒரு இடத்திலும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே, என் ஆசை... என்ன செய்யணும் என்று சொல்லுங்க ஆன்டி.

அன்பு மகளே... நீ மட்டுமல்ல... இந்த காலத்து பிள்ளைகள் எல்லாருமே இப்படித் தான் இருக்கின்றனர். பொறுமை என்பது சிறிதும் இல்லை. எல்லாமே உடனுக்குடன் நடக்க வேண்டும்; பார்த்தவுடன் காதல், உடனே திருமணம், அடுத்து விவாகரத்து என, சட்டென்று முடிவெடுக்கின்றனர்; இதனால் இவர்கள் சாதித்தது என்ன...
உனக்கு நன்கு தெரிந்த, பிடித்த தொழில், தையல் என்றால், அதை ஏன் மாற்ற வேண்டும்.
இன்று, ஒரு, 'ப்ளவுஸ்' தைப்பதற்கு, அதிக கூலி கேட்கின்றனர்.
'பிளவுஸ் டிசைனிங்' என்ற பெயரில், புடவை விலையை விட, அதிகமாக வாங்குகிறீர்கள். இந்த தொழிலில், நன்கு முன்னேறலாம்.
திறமையாக கற்றுக் கொண்டால், நீயே கடை வைக்கலாம்; தொழில் நன்றாக சென்றால், பல கடைகள் ஆரம்பிக்கலாம். அப்படியே ஆடைகள் விற்க ஆரம்பித்து, 'பொட்டிக்' போன்றும் விரிவு படுத்தலாம்.
எல்லாமே உன் கடின உழைப்பில் தான் உள்ளது. இவை எல்லாம் கை கூடி வர கொஞ்ச நாட்களாகும். ஆனால், பொறுமையோடு முன்னேறினால், வெற்றி நிச்சயம்.
உனக்கொரு உண்மை கதை சொல்றேன்... ஒரு இளைஞன், எழத்தாளராக ஆசைப் பட்டு, நூலகம் சென்று, பல ஆண்டுகள் பல நுால்களை படித்து, எழுத ஆரம்பித்தான். 10 ஆண்டுகள் எழுதியும் எந்த கதையும் வெளிவரவில்லை.
ஆனாலும், தொடர்ந்து எழுதியபடியே இருந்தான். 11ம் ஆண்டு, இவனுடைய எழுத்துக்கள் வெளி வந்து, நாடக ஆசிரியர்களில் முதன்மையானவர் ஆனார்.
செல்வமும், செல்வாக்கும் அவரை தேடி வந்தது; அவர் தான், பெர்னாட்ஷா. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால், அவரால் இப்படி, சாதிக்க முடிந்தது.
நீயும், உன் தொழிலில் உறுதியாக இரு; வெற்றி நிச்சயம்!
- அன்புடன், ஜெனிபர் பிரேம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement