Advertisement

முகத்தை மூடாதே!

நம்பியும் எழிலும் நண்பர்கள். இருவரின் தந்தையரும் வெளிநாட்டில் வேலை செய்தனர். எனவே, உண்டு, உறைவிடப் பள்ளியில், இருவரையும் சேர்த்து படிக்க வைத்தனர்.
குழந்தைகள், நல்ல சூழ்நிலையில் வளர்ந்தால் தான், எதிர்காலம் சிறப்பாக அமையும்.
சிறுவர்கள் நன்கு படித்ததுடன், ஒழுக்கத்தையும் கற்றனர். தங்களால் முடிந்த உதவியை செய்து வந்தனர். ஏழை, எளியோரை நேசித்தனர். இதனால், பள்ளியில் நல்ல பெயர் கிடைத்தது.
'பிறரிடம், அன்புடன் காட்டினால், நல்ல பெயர் கிடைக்கும்' என்பதை அறிந்தனர்.
இரவில், மாணவர்கள் அனைவரும் ஒன்றாக துாங்குவர்.
துாங்கும் போது எழில், போர்வையால், முகம் முழுவதும் மூடியிருந்தான். இதைப் பார்த்த நம்பி, ''நீ எப்பவும் முகத்த மூடித்தான் துாங்குவியா...'' என, கேட்டான்.
''ஆமாம்... அப்போதான், நல்லா துாக்கம் வரும்...''
''அது சுகாதாரக் கேட்டை அல்லவா தரும்...''
''நீ என்ன சொல்ற... விவரமா சொன்னா, நல்லா இருக்கும்...''
''எழில்... நாம் எந்த காற்றை சுவாசிக்கிறோம்...''
''ஆக்சிஜன்... இது கூடவா தெரியாது...''
'பொறு... பொறு... என்ன காற்றை, வெளியே விடுறோம்...'
'கரியமில வாயுவை... இது கெட்ட வாயு; இதைத்தான் தாவரம் உள்ளிழுத்து, ஆக்சிஜன் என்ற பிராண வாயுவை வெளியே விடுது. ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால, அரசு மருத்துவமனையில், எத்தனையோ குழந்தைகள் இறந்து போயிருக்காங்க... என, பத்திரிகையில படித்தோமே...'
'சரியா சொல்றே; ஆனா, போர்வையால் முகத்தை இறுக்க மூடுறதால, நீ வெளியிடும் கெட்ட வாயுவை தானே, மீண்டும் சுவாசிக்கிறே... அப்படின்னா, உடலுக்கு தேவையான பிராண வாயு, எப்படி கிடைக்கும்...'
'அட ஆமா... அந்த நினைவே இல்லாம போச்சே...'
'நல்ல காற்றை சுவாசித்தால் தானே பலன் கிடைக்கும்; நோய், நொடிகள் அண்டாதபடி, நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்...'
'ரொம்ப... ரொம்ப சரி...'
'இதுக்குத்தான் பெரியவர்கள், நல்ல நண்பர்களுடன் பழக சொல்கின்றனர்; நல்ல நண்பர்கள் தான், தவறுகளை சுட்டிக் காட்டி, துணிந்து திருத்துவர்...'
'உண்மைத் தான்! நான் முகத்தை மூடி, துாங்குவது கேடு தரும் என இடித்துரைத்தாய்; இனி, நிச்சயமாக முகத்தை மூடி துாங்க மாட்டேன்; எப்படி நன்றி சொல்வதேன்றே தெரியவில்லை...'
'எனக்கு எதுக்கு நன்றி...'
'சுகாதாரமாக துாங்க அறிவுறுத்தினாயே... அதுக்குத்தான்...'
'இதுக்கு எல்லாம் எதற்கு நன்றி; நண்பனை, ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதும், கடமை தானே...' என்றான், நம்பி.
'நண்பா... இனி முகத்தை மூடி துாங்குபவர்களை கண்டால், அறிவு புகட்டுவோம்; சரியா...' என்றான், எழில்.
இருவரும் தோளில் கை போட்டு, அணைத்தபடி துாங்கினர்!
குட்டீஸ்... நீங்களும் இது போல் நல்ல நண்பர்களை கண்டுபிடித்து நட்புக்கொள்ளுங்கள்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement