Advertisement

நண்பர்கள் கிடைச்சாச்சு!

''நல்லா, பழுத்துக் கிடந்த, நம்ம தோட்டத்து கொய்யாப் பழத்தை, யாரோ பறிச்சிட்டு போய்ட்டாங்க...'' அம்மா, சொன்னதைக் கேட்ட குட்டிக் குரங்கு டிங்குக்கு, அதிர்ச்சியாக இருந்தது. தோட்டத்திற்கு ஓடிச் சென்று பார்த்தது; அந்த பெரிய கொய்யாப் பழத்தை காணவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், தோட்டத்தில் பூத்திருந்த, சில ரோஜாப் பூக்களை யாரோ திருடி விட்டனர்; இன்று, கொய்யாப் பழம் பறி போய் விட்டது.
குட்டிக் குரங்கு டிங்குவின் குடும்பம், சில மாதங்களுக்கு முன் தான், அந்தக் காட்டு பகுதிக்கு குடியேறியிருந்தது. அந்த இடம் ரொம்பவே பிடித்தது; ஆனாலும், ஒரு மனக்குறை... அந்தப் பகுதியில், அதனுடன் விளையாட, நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை.
இதற்கு முன், டிங்குவின் குடும்பம், வேறொரு காட்டில் வசித்தது. அங்கே, டிங்குவுக்கு பல தோழர்கள் இருந்தனர். எப்போதும், முயல், கிளி, அணில் என்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருக்கும்.
திடீரென்று, அப்பகுதியில், காட்டுத் தீ பரவியதால், டிங்குவின் குடும்பம், இங்கு வந்தது.
ரொம்பவே தனிமையாய் உணர்ந்தது டிங்கு. மகனின் தனிமையை உணர்ந்த அப்பா குரங்கு, 'டிங்கு... நாம இங்கே அழகான தோட்டம் போட்டு, அதில், பூச்செடிகளும், பழ மரங்களையும் நட்டு வைக்கலாமா...' என்றது.
'சரிப்பா... இப்பவே போய், அழகான, பூச்செடிகளையும், நல்ல மரக்கன்றுகளும் தேடி வரலாம்...' என்று, உற்சாகமாய் புறப்பட்டது டிங்கு குரங்கு.
ரோஜா, செம்பருத்தி, கொய்யா, சப்போட்டா, கேரட், முள்ளங்கி எடுத்து வந்து, தோட்டம் போட்டன; டிங்குவின் தாயும், உதவி செய்தது.
அருகிலேயே, அழகான நீரோடை இருந்ததால், தினமும் காலையில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது டிங்குவின் வேலை! அவ்வப்போது, ஆற்றங்கரையிலிருந்து, வண்டல் மண் எடுத்து, செடிகளுக்கு உரம் போட்டன; மூங்கில்களை நட்டு வைத்து, வேலியும் அமைத்தன.
பூச்செடிகள் எல்லாம், ஒரு மாதத்திற்குள் நன்றாக வளர்ந்து, பூக்கத் துவங்கி விட்டன;
தோட்டத்து செடிகளையும், மரங்களையும் பராமரிப்பதில் டிங்குவுக்கு நேரம் போவதே தெரியவில்லை; பூக்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்து பெருமிதம் அடைந்தது.
சில மாதங்கள் வரை, எல்லாம் நன்றாகத்தான் சென்றது. ஆனால், சமீபகாலமாத்தான் பிரச்னை ஆரம்பமாகியது; டிங்குவின் தோட்டத்திலுள்ள ரோஜாப்பூக்கள் ஒன்றிரண்டை, யாரோ பறித்து போய் விட்டனர்.
கொய்யாப் பழம் ஒன்று, பழுத்து வந்திருந்தது. இன்னும், ஓரிரு நாட்களில் நன்றாகப் பழுத்து விடும். பின், அதைச் சாப்பிடலாம் என்று நினைத்திருந்தது டிங்கு. ஆனால், இன்று காலை அதையும், யாரோ ஒருவர் பறித்துச் சென்றதை நினைத்து, டிங்குவுக்கு வருத்தமாயிருந்தது.
''அப்பா... பூக்களும், பழங்களும் திருடு போவதைத் தடுக்க, நான் சொல்வது போல் செய்து பார்க்கலாமா...''
''என்ன செய்யலாம் டிங்கு...''
''பூவோ, பழமோ வேண்டுமென்றால், நம்மிடமே வந்து கேட்கச் சொல்லலாமா...'' ஒரு பனை மரப்பாளையை எடுத்து, அதன் மீது 'எங்கள் தோட்டத்துப் பூக்களையோ, பழங்களையோ பறிக்காதீர்; உங்களுக்கு வேண்டுமென்றால், எங்களிடம் வந்து கேளுங்கள்...' என்று எழுதி, ஒரு மரத்தில் மாட்டி வைத்தது.
மறு நாள் -
''ஆன்ட்டி... ஆன்ட்டி...'' வாசலில் குரல் கேட்க, டிங்குவும், தாய் குரங்கும் வந்து பார்த்தன.
''ஆன்ட்டி... என் கொண்டையில் வைக்க, ஒரு ரோஜாப் பூ தருவீங்களா...'' என்று கேட்டப்படி, ஒரு மயில் வந்து நின்றது; அதைப் பார்த்த டிங்குவுக்கு, மகிழ்ச்சியாக இருந்தது.
''இதோ... பறித்து தர்றேன்...'' என்று கூறிய டிங்கு, அழகான சிவப்பு ரோஜா ஒன்றைப் பறித்து, மயிலிடம் கொடுத்தது.
அந்த மயில், அப்பகுதியில் உள்ள மலை ஒன்றில் வசிக்கிறது. பெயர், ஜிங்கு என்றும் கூறியது. அதன்பின், டிங்குவின் விளையாட்டுத் தோழியாகி விட்டது.
மறு நாள் -
சற்று தொலைவிலுள்ள, ஒரு புதரில் வசிக்கும் முயல் வந்து, கேரட் கேட்டது. மகிழ்ச்சியாக, கேரட்டைப் பிடுங்கி, கொடுத்தது டிங்கு.
இப்போது, முயலும், டிங்குவுக்கு நண்பனாகி விட்டது. அடுத்தடுத்த நாட்கள் கொய்யாப்பழம் கேட்டு வந்த அணில், சப்போட்டா பழம் கேட்டு வந்த கிளி என்று டிங்குவுக்கு மட்டுமல்ல, அப்பாவும், அம்மாவுக்கும் கூட, பல நண்பர்கள் கிடைத்து விட்டனர்.
அதன்பின், அவர்கள் அனைவரும் சேர்ந்து, தோட்டத்தில் உழைத்தனர்; அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டு, இன்பமாக வாழ்ந்தனர்.
குட்டீஸ்... பிறருக்கு உதவி செய்ததால், டிங்குவுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்ததுடன், எல்லாரும் சேர்ந்து, ஒற்றுமையாக உழைத்து, இன்பமாக வாழ்ந்ததை பார்த்தீர்களா... நீங்களும், நண்பர்களுடன் ஒற்றுமையாக இருங்க!
- அருணா பதிப்பகம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement