Advertisement

இளஸ்... மனஸ்... (148)

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, 10ம் வகுப்பு மாணவி எழுதுவது. என்னுடைய பிரச்னைகளுக்கு, பதில் சொல்லுங்க ஆன்டி.
எனக்கு, எதற்கெடுத்தாலும் கோபம் வருது; அடக்கவே முடியவில்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்க ஆன்டி.
அத்துடன், என் கையெழுத்து மிகவும் மோசமாக உள்ளது. எவ்வளவு முயற்சி செய்தாலும், அழகாக்க முடியவில்லை.
மூன்றாவது, எனக்கு, கணித பாடம் மிகவும் பிடிக்கும். ஆனால், சீக்கிரம் மறந்து விடுவதால், அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லை. அதற்கும் வழி சொல்லுங்க ஆன்டி...

அன்பு மகளுக்கு வணக்கம்!
'எனக்கு நிறைய கோபம் வருது...' என்று எழுதியிருந்தாய். இந்த, 'டீன் - ஏஜ்' பருவத்தில், ஹார்மோன் சுரப்பிகளின் மாற்றத்தால் கோபம் அதிகமாக வருவது இயற்கை.
ஆனாலும், அதை கட்டுப்படுத்தா விட்டால், மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும்.
இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து, ஏற்கனவே இப்பகுதியில் எழுதி விட்டேன்.
சிறுவர்மலர், 'வெப் சைட்'டில், 'இளஸ்...மனஸ்...' பகுதியை போட்டு பார்த்து, அறிந்துக் கொள்.
ஒன்று மட்டும் சொல்கிறேன்... முட்டாள் தான், சட்டென்று கோபப்படுவான். இதை நினைவில் வைத்துக் கொண்டால் நிச்சயமாகவே கோபத்தை குறைத்து விடுவாய்.
இரண்டாவது, உன்னுடைய கையெழுத்துப் பிரச்னை...
தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டு, விற்கப்படுகிற இரண்டு வரி கையெழுத்து நோட்டுக்களை வாங்கி, அதே மாதிரி எழுதி எழுதி பழகு...
ஆங்கிலத்திலும், 'கர்சீவ் ரைட்டிங்' அதாவது, சேர்த்து சேர்த்து எழுதியுள்ள ஆங்கில வார்த்தைகள் உள்ள, நாலு வரி நோட்டுக்களை வாங்கி எழுதி எழுதி பழகு. ஆறு மாதத்திற்கு, விடாமல் பழகினால், கையெழுத்து அழகாகி விடும்.
பொதுத்தேர்வுகளில், மதிப்பெண் வாங்குவதற்கு, கையெழுத்து மிகவும் அவசியம் அல்லவா...
மூன்றாவது, கணித பாடத்தில், அதிக மதிப்பெண் வாங்க வேண்டுமானால், தினமும் பயிற்சி அவசியம்.
கணிதத்தை பார்க்கும் போது, எல்லாம் தெரிந்தது போல் இருக்கும்; ஆனால், நோட்டை மூடி விட்டு, போட்டு பார்க்கும் போது, எல்லாமே மறந்து போனது போல் இருக்கும்; பல சந்தேகங்கள் தோன்றும்.
தினமும் போட்டுப் பார்த்து, பயிற்சி எடுத்தால் ஒழிய, கணிதத்தில், நல்ல மதிப்பெண் வாங்க முடியாது.
உனக்கு, கணிதத்தில் ஆர்வம் இருப்பதால், தொடந்து போட்டுப் பழகு, வெற்றி நிச்சயம்!
அன்புடன், ஜெனிபர் பிரேம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement