Advertisement

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

உயிர் பறவையும், உலோகப் பறவையும்!
'பறவை மோதி, விமானம் கீழே விழுந்து, பயணிகள் இறந்தனர்' என்ற செய்தி, ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும், பறவைகளால், நிறைய விமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
சென்ற ஆண்டு, 50 முறை, விமானங்களில், பறவைகள் சிக்கியதாக, இந்திய விமான நிலைய நிர்வாகம் குறிப்பிட்டிருக்கிறது.
முதலில், இப்படிப்பட்ட விபத்து, 1912ல், அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் நடந்தது.
கடல் காகம் என்ற பறவை மோதியதில், விமானம் பாதிப்படைந்து, விமான ஓட்டிகள் மற்றும் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
சமீபகாலமாக, பறவைகளும், விமானங்களும், மோதிக் கொள்வதற்கு, பல காரணங்கள் உள்ளன. அதில், விமானங்களின் எண்ணிக்கை, அதிகமாகி வருவதும் முக்கியக் காரணம்.
தவிர, பழைய விமானங்களில், 'பிஸ்டன்' இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை இயக்கும் போது, விமானத்தின், முன், பின்புறங்களில், அதிக சத்தம் உருவாகும்.
இதனால், தங்களை அணுகும் ஆபத்தை உணர்ந்து, பறவைகள் விலகிச் செல்ல வாய்ப்பு இருந்தது.
விமானத்தின் மீது, பறவை மோதினாலும், விமானத்தின், 'பிஸ்டன்' இன்ஜின் அருகே பொருத்தப்பட்டுள்ள, 'புரொபெல்லர்கள்' சுற்றியபடியே இருப்பதால், பறவையை வெட்டி விடும் அல்லது பறவையை அந்த இடத்திலிருந்து தள்ளி விடும்.
இதனால், விமானத்துக்கு, பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், ஜெட் இன்ஜின்கள் அறிமுகமான பின், காட்சிகள் மாறின. இவற்றின் வேகம் அதிகம்; எழுப்பும் ஒலியோ மிகக் குறைவு.
தவிர, ஜெட் இன்ஜின்கள், காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில், வடிவமைக்கப்பட்டவை. எனவே, இவை, காற்றோடு, பறவையையும் உள்ளே உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால், இன்ஜின், திடீரென செயலிழந்து விடும் ஆபத்து உருவாகிறது.
பொதுவாக, விமான நிலையங்களில், பறவைகள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால், விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதி, பெரும்பாலும், புறநகர் பகுதியாக இருக்கும்.
கடுமையான இடநெருக்கடி உள்ள நகரங்களை விட, புறநகர் பகுதிகளில் வசிப்பதையே, பறவைகளும் விரும்புகின்றன. தவிர, விமான நிலையங்களுக்கு அருகே, குளங்கள், கால்வாய்கள் போன்ற, நீர் நிலைகள் இருப்பதும் காரணம்.
மேலும், விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் சில பகுதிகள், குப்பை கொட்டப்படும் இடங்களாக இருக்கும். அதிலுள்ள கழிவுகள், இறைச்சித் துண்டுகள் அப்பகுதிகளுக்கு வந்து சேரும் பூச்சிகளை உண்பதற்காக, பறவைகள் அங்கேயே வட்டமடிக்கின்றன. ஆனால், இந்த பறவைகளை, அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதாது.
விமான நிலைய பகுதிகளில், குப்பைகளை கொட்டக் கூடாது; விமான தளங்களை, தொடர்ந்து, பைனாகுலர்கள் மூலம் பார்த்து, பறவைகள் தென்பட்டால் விரட்டலாம். பறவைகள், தங்கள் இரை தேடலை, தினமும், குறிப்பிட்ட நேரத்தில் தான் வைத்துக் கொள்ளும். அந்த நேரங்களில், விமானம் புறப்படவோ, வந்து சேரவோ இல்லாதபடி, அவற்றின் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement