Advertisement

எதில் ஆசை!

அன்று, தன் கடைசி மகனுடன் சபைக்கு வந்தார், அக்பர். பிள்ளையை மடியில் வைத்தபடி, சிம்மாசனத்தில் அமர்ந்தார்; அப்போது, பீர்பால் அவைக்கு வரவில்லை.
'உலகத்தில், மிகவும் ஆசைக்குரியது எது...' என்று சபையோரை நோக்கி கேட்டார் அக்பர்.
சக்கரவர்த்தி, மகிழ்ச்சியுடன் குழந்தையை மடியில் வைத்திருப்பதைக் கண்ட சபையினர், ஒரே குரலாக, ''பாதுஷா... மிகவும் ஆசைக்குரியது சொந்தக் குழந்தைகள் தான்...'' என்றனர்.
மகிழ்ச்சியடைந்தார் அக்பர்; சபையோரும், சக்கரவர்த்தி மகிழும் படியாக, சரியான பதிலைக் கூறி விட்டதாக எண்ணி, பெருமைப்பட்டனர்.
அப்போது, பீர்பால் சபைக்கு வந்தார்; அவர், தம் ஆசனத்தில் அமர்ந்ததும், ''மிகவும் ஆசைக்குரியது அவரவருடைய உயிர் தான்...'' என்றார்.
பீர்பாலை உற்றுப் பார்த்தார் சக்கர வர்த்தி. அவர் பார்வை, சபையினருக்கு ஏமாற்றமளித்தது போல தோன்றியது.
'பீர்பால் ஒழிந்தார்' என்று, மகிழ்ச்சி அடைந்தனர்.
''பீர்பால்... நீர் கூறியதை நிரூபிக்க முடியுமா...'' என்றார்.
''ஏன்... இப்போதே வேண்டுமானாலும் நிரூபிக்கிறேன்...'' என்று, சக்கரவர்த்தியையும், சபையினரையும் அரண்மனை தோட்டத்திற்குச் அழைத்துச் சென்றார். குளத்தின் அருகில், அனைவரையும் அமர்த்தினார்; வேலையாட்களை அழைத்து, குளத்து நீர் முழுவதையும் இறைக்கும்படி கட்டளையிட்டார்.
அவரது கட்டளைப்படி, குளத்து நீர் முழுவதும் இறைத்தாகி விட்டது. அப்போது, ஒரு வேலைக்காரனை அழைத்து, குட்டியுடன் கூடிய, ஒரு குரங்கைக் அழைத்து வந்து, குளத்தின் நடுவில் விடச் சொன்னார் பீர்பால்.
பின், குளத்தில், நீர் நிரப்ப கட்டளையிட்டார். வேலை ஆட்கள், அப்படியே செய்தனர்.
நீர், அதிகமாக துவங்கியதும், தாய் குரங்கு, குட்டியை மடியில் வைத்து நின்றது; தண்ணீர் மேலும் உயர்ந்ததும், குட்டியை தோளில் துாக்கி வைத்தது.
இதை கண்ட சக்கரவர்த்தி, ''பார்த்தீரா பீர்பால்! தாய் குரங்கு, தன் குட்டியை நேசிப்பதால், எப்படி தண்ணீரில் சிக்காமல் காப்பாற்றுகிறது...'' என்றார்.
''சக்கரவர்த்தியே... அவசரப்படாதீர்; இன்னும் சிறிது நேரம் பொறுத்திருங்கள்...'' என்றார்.
வேலையாட்கள், குளத்தில் மேலும் நீரை நிரப்பினர்.
தாய்க் குரங்கின் மார்பு வரை இருந்த தண்ணீர், கழுத்து வரை உயர்ந்தது; மேலும், சிறிது நேரத்தில், தாய்க் குரங்கின் கழுத்துக்கு மேல் உயர்ந்தது. அது, குட்டியை உதறி, தண்ணீரில் தள்ளி விட்டு, நீந்தி, கரையேறியது; குட்டியோ, தண்ணீரில் தத்தளித்தது; வேலைக்காரர்களை விட்டு, குட்டிக் குரங்கைக் காப்பாற்றச் சொன்னார் பீர்பால்.
''பாதுஷா... பார்த்தீரா... மனிதர்களுக்கு மாத்திரமன்று, எல்லா உயிரினத்திற்கும், குட்டிகளிடம் ஆசை இருக்கத்தான் செய்யும்...
''ஆனால், தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது, குழந்தையாவது, குட்டியாவது... அனைத்தையும் துாக்கி எறிந்து, தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே முயற்சி செய்வர்; எல்லாருக்கும், தம் உயிரின் மீது தான் அதிக ஆசை இருக்கும்...'' என்றார்.
சக்கரவர்த்தியுடன், சபையினரும் அந்த பதிலைக் கேட்டு திருப்தியடைந்தனர்.
- சுவாமிமலை பதிப்பகம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement