Advertisement

ரசிகர்களுக்கு பிடிக்கல்லன்னா...பிசினஸ் பண்ணுவேன்!

ஓவியா... தமிழ் திரைப்பட ரசிகர்களை கட்டிபோட்ட பெயர். அந்த கள்ளங்கபடமில்லாத சிரிப்பும், மனதில் தோன்றியதை பட்டென உடைக்கும் பக்குவமும் ஓவியாவுக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை தந்துவிட்டது. ஓவியாவின் பேட்டி என்றதும் 'யாருய்யா நம்ம ஓவியாவா'ன்னு நீங்கள் கேட்பது புரிகிறது. ஓவியாவே தான்... நமக்காக இனிக்க, இனிக்க பேசியிருக்காங்க! இதோ...

2019 புத்தாண்டு எப்படி தொடங்கியது?
சென்னையில் எனக்கு பிடித்த நண்பர்களுடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு தொடங்கி உள்ளது.

நடிக்கும் படங்கள் பற்றி...?
2018ல் '90 எம்,எல்', 'களவாணி 2', 'காஞ்சனா 3' படம் நடித்து முடித்துள்ளேன் இந்தாண்டு ரிலீசாகிறது. அடுத்த படங்களுக்கு கதை கேட்டு வருகிறேன். அதிக படங்களில் நடிக்க ஆசையில்லை ஆனால், நல்ல படங்கள் பண்ண வேண்டும். ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள படங்கள் நிறைய வருகிறது, பொறுமையாக பார்த்து தேர்வு செய்ய நினைக்கிறேன்.

'90 எம்.எல்' படம் என்ன ஸ்பெஷல்?
சமூகத்திற்கு பயப்படாமல், எதற்கும் கவலைப்படாமல் வாழும் ஒரு பெண்ணாக நடித்துள்ளேன். இது சராசரி படம் இல்லை, படத்தில் சரக்கு எல்லாம் அடித்திருக்கிறேன். அனிதா உதுாப் என்ற பெண் இயக்குனர் இயக்கி உள்ளார். சிம்பு சூப்பராக இசையமைத்துள்ளார். பசங்க எப்படி குடித்து, சண்டை போட்டு, கலாட்டா பண்ணுவாங்களோ அதைப்போல நானும் கலாட்டா செய்துள்ளேன்.

'களவாணி 2' படம் எப்படி வந்திருக்கு?
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாக வந்துள்ளது. விமலும் நானும் போட்டி போட்டு நடித்துள்ளோம். மகளிர் அமைப்பு தலைவியாக, தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறேன். அடுத்து 'காஞ்சனா 3' காமெடியாக வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்?
'ஓவியா ஆர்மி' அளவுக்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. நான் நானாகவே இருந்தேன் அது தான் உண்மை. 40 நாளில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது ஷாக்காக இருந்தது. எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் தான். தமிழ்நாட்டிற்கு வந்து 7 ஆண்டு ஆகிறது.
எல்லாரும் வெற்றிய மட்டும் பார்க்கிறார்கள் அதற்கு பின் என் கஷ்டம் நிறைய இருக்கிறது. இன்று மக்கள் என்னை விரும்பலாம், நாளை இந்த ஆதரவு இன்னொரு நடிகைக்கு கிடைக்கலாம். அதனால் எதையும் என் தலையில் ஏற்றிக் கொள்வது இல்லை. எப்பவும் போல் என் வேலையை பார்ப்பேன்.

இது குறித்து உங்கள் தந்தை கூறியது?
எனக்கென்று உள்ள தகுதிகளை யாருக்காகவும் இழக்க மாட்டேன். பொய் சொல்ல மாட்டேன். எதுவாக இருந்தாலும் நண்பர்களிடம் பேசுவது போல பெற்றோரிடம் சுதந்திரமாக பேசுவேன். சிறு வயதிலேயே சமூகம், நாட்டு நடப்பு பற்றி கற்று கொடுத்துள்ளார்கள். சின்ன தவறு செய்தாலும் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன். உண்மையாக இருந்ததால் தான் இந்த வெற்றி கிடைத்தது என அப்பா கூறுவார்.

சிலுக்குவார்பட்டி சிங்கம் குத்தாட்டம்?
இது தான் உண்மையான குத்தாட்டம், இதுவும் ஒரு அனுபவம். இப்போது நிறைய படங்களில் நடிப்பதால் குத்தாட்டம் தவிர்க்கிறேன்.

ஆரவ் உடன் 'ராஜபீமா' படம்?
இந்தப்படத்தில் நான் ஓவியாவாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன். ஆரவ் கூட ஒரு கனவு பாட்டு பண்றேன். அதில், ஓவியா ஆர்மி எல்லாம் வரும்.

எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை?
கதை பிடித்திருந்தால் எந்த இயக்குனராக இருந்தாலும் நடிப்பேன். ஒரே மாதிரி படங்களில் நடிக்க விரும்பவில்லை. ஆக்ஷன், காமெடி என படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

2019ல் என்ன திட்டம்?
திட்டம் எதுவும் இல்லை. ரசிகர்களுக்கு என்னை பிடிக்கும் வரை நல்ல படங்களில் நடிப்பேன். பிடிக்கவில்லை என்றால் ஏதாவது பிசினஸில் இறங்கிவிடுவேன்.

ஆரவ் பற்றி கேக்காம பேட்டியை முடிக்க முடியாதே?
நமக்காக இவர் இருக்கார் என்று ஆரவ் பற்றி சொல்லலாம். இரண்டு பேரும் நல்ல புரிதலோடு இருக்கோம். 'லிவ்விங் டூ கெதர்' எல்லாம் கிடையாது. யாருக்கும் பேட்டி கொடுக்காததால் சிலர் தவறாக எழுதலாம். அதற்காக நாங்கள் நேரத்தை வீணடிப்பது இல்லை. மற்றபடி கல்யாணம் எல்லாம் கிடையாது.

பொங்கல் கொண்டாட்டம்?
சென்னையில் தான் பொங்கல் கொண்டாட்டம். நட்புகளோடு ஜாலியா பொழுது போக்க வேண்டியது தான். எல்லோரும் பொங்கல் சாப்பிட்டு, பண்டிகையை சந்தோஷமா கொண்டாடுங்க.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement