Advertisement

இங்கே என் கிராமம்!

நகருக்குப் போட்டியாக அடுக்கு வீடுகள், கார்கள், டூ வீலர்கள், தார்ரோடு, குழாய்நீர், டிவி, அலைபேசி என்று வரிசை கட்ட துவங்கியுள்ள இன்றைய கிராமங்களின் அடையாளமாக கடந்த நுாற்றாண்டில் இருந்தவை பலவும் மாறி விட்டன. சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் பகுதி கிராமங்களில் அதன் எச்சங்களை பல இடங்களில் இன்றும் காண முடிகிறது. திருப்புத்துார் அருகே என்.வைரவன்பட்டியில் காணப்படும் அவற்றில் சில...

இளவட்டக்கல்
பாண்டியர் ஆட்சியின் போது தென்மாவட்டங்களில் எடை துாக்கும் விளையாட்டு நடந்தது.
இளவட்டக் கல்லைத் தலைக்குமேல் துாக்கும் வாலிபருக்கு பெண்ணை மணம் முடித்திடும் வழக்கம் இருந்தது.
சுமார் 100 கிலோ எடையில் உருண்டையாக இருக்கும் இந்த கல்லை இளவட்டக் கல், இளந்தாரிக்கல், கல்யாணக்கல் என்று கூறுகிறார்கள்.புதுமாப்பிள்ளைக்கு கருப்பட்டி பணியாரம் செய்து கொடுத்து இளவட்டக்கல்லை துாக்க சொல்லும் வழக்கமும் இருந்துள்ளது.
கல்லை துாக்குவதற்கான விதிகளும் உண்டு. குத்துக்காலிட்டு உட்கார்ந்து கல்லை இரண்டு கைகளாலும் அணைத்து லேசாக முழங்காலுக்கு நகர்த்தி பின்னர்முழுதாக நிமிர்ந்து நின்று சிறிது, சிறிதாக கல்லை நெஞ்சின் மீது உருட்டி தோள்பட்டையிலிருந்து பின்புறம் விட வேண்டும்.
மேலும் சாதிக்க விரும்புபவர்கள் தோள்பட்டையில் கல்லுடன் கோயில் அல்லது குளத்தை வலம் வருவதுண்டு.தமிழரின் உடல்பலம், வீரத்தை நிரூபிக்க பயன்பட்ட இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்கு பல ஊர்களில் மண்ணில் புதைந்து கிடப்பதை பார்க்கலாம்.

சுமைதாங்கி கல்
நடந்தே பயணம் செய்பவர்கள் தங்கள் சுமையை இறக்கி வைத்து இளைப்பாற உதவியவை சுமைதாங்கிக் கல். இன்றும் சாலைகளின் ஓரத்தில் 'ப'வை தலைகீழாக கவிழ்த்த நிலையில் இரண்டு கற்துாண்கள் நிறுத்தப்பட்டு, அதன் மேல் ஒரு கல்துாண் இருப்பதை பார்க்கலாம். பெரும்பாலும் ஆலமரத்தின் கீழ் படுக்கை வசமாக இது இருக்கும். குளங்கள், கோயில்கள் அருகிலும் இருக்கும்.
அந்த சுமைதாங்கி கற்களின் பின்னால் உள்ள சோகக்கதையை கிராமத்தினர் கூறுகையில், கர்ப்பிணி பெண்கள் மரணம் அடைஞ்சா, அவர் நினைவாக சுமைதாங்கி கல்லை பெண்ணின் குடும்பத்தினர் நடை பாதைகளில் வைப்பர். குழந்தை சுமையை பூமியில் இறக்காமல் இறந்த கர்ப்பிணியை இழந்த சோகத்தை மறக்க, பயணிகளின் சுமையை இறக்கி வைக்க உதவும் சுமைதாங்கிக் கல்லை நட்டு உதவியுள்ளனர்' ஆனால் தற்போது அந்த வழக்கம் முற்றிலுமாக இல்லை.'

விழுதுகளில் இளங்கொடி
கிராமங்களுக்கு வெளியே உள்ள ஆலமர விழுதுகளில் பனை ஓலை பெட்டி, பைகள் கட்டப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம்.பசுக்கள் கன்று ஈன்றவுடன் அதன் இளங்கொடியை பையில் கட்டி ஊருக்கு வெளியே உள்ள ஆலமர விழுதுகளில் கட்டி விடுவார்கள்.
கிராமத்தினர் கூறுகையில் பால்வடியும் ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களில் கன்று ஈன்றவுடன் இளங்கொடியை பையில் வைத்து கட்டினால் தாய் பசுவிற்கு நன்றாக பால் சுரக்கும்' என்கின்றனர். தற்போது குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தத்தையும், கொடியின் திசுக்களையும் சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் வந்துள்ளது. எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வரும் நோய்களிலிருந்து காப்பாற்ற இது உதவும். இது போன்றே பசுக்களின் இளங்கொடியை நமது முன்னோர்கள் மரங்களில் சேமித்துள்ளனர். ஆனால் அதன் உண்மையான பயன்பாடு தற்போது யாருக்கும் தெரியவில்லை.

இது போன்று பனை மரங்கள், கள்ளி, கற்றாழை வேலிகள், ஊரணிகள், பெட்டகத்துடன் கூடிய சவுக்கை, முளைப்பாரி பொட்டல், அய்யனார் கோயில் புரவிகள், பெரிய அரிவாள்களுடன் கூடிய கருப்பர்கோயில்... என்று பல அடையாளங்கள் திருப்புத்துார் பகுதி கிராமங்களில் அழியாமல் இருப்பதை காண முடிகிறது. நீங்களும் கிராமங்களுக்கு செல்லும் போது இவற்றை பார்க்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement