Advertisement

மட்டம் தட்டும் பட்டப்பெயர்கள்!

ஒருவருக்கு பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவது, பள்ளிகளில் மாணவப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பட்டப்பெயர்கள் ஒருவரது உருவத்தையும் செயல்களையும் கேலி, கிண்டல் செய்யப் பயன்படும் பெயராகவே இருக்கும். அதனாலேயே 'பட்டப்பெயர் கொண்டாட்டமா? புண்படுத்துமா?' என்று கேள்வியை எழுப்பி இருந்தோம். மாணவர்களின் கருத்தறிய உடுமலைப்பேட்டை, பெதப்பம்பட்டி, ஆர்.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆஜரானோம்.
ஆர்.சுஸ்மிதா (10ஆம் வகுப்பு)மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலான பட்டப் பெயர்கள் என்றால் அதை ஏற்கலாம். பட்டப்பெயர் மனவருத்தம் ஏற்படுத்தும் என்றால், அப்படி அழைப்பது தவறு. உதாரணமாக, நன்றாகக் கணக்குப் போடும் மாணவனை 'கணக்குப்புலி,' என்றும், தமிழில் சாதிப்பவரை 'புலவர்' என்றும் சொல்லலாம்.
திவ்ய தர்ஷினி (10ஆம் வகுப்பு)ஒருவரிடம் உள்ள குறைபாட்டை அல்லது தோற்றத்தை வைத்து பட்டப்பெயரிட்டு அழைப்பது தவறு. அது அவர்களை மட்டம் தட்டுவது போலிருக்கும். எல்லா மனிதர்களுக்கும் மனம் ஒன்றுதான். பட்டப்பெயர் வைத்து அழைக்கும்போது, மற்றவர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால் சம்பந்தப்பட்டவரின் மனம் வருந்துவதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.
ஆர்.நவீனாஸ்ரீ (10ஆம் வகுப்பு)பெயர் என்பதே ஒருவரை அடையாளப்படுத்துவதுதான். அதிலும் பட்டப்பெயர், நிச்சயம் பலரைக் கேலி செய்வதற்காகவே பயன்படுகிறது. அது சிலருக்குப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். பிடிக்காத பெயர் சொல்லிக் கூப்பிட்டு, எவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தக்கூடாது.
ஜி.செந்தமிழ்ச்செல்வன் (10ஆம் வகுப்பு)நண்பர்களுக்குப் பட்டப்பெயர் வைத்தாலும், அது அவர்களுக்குப் பிடிக்குமா என்பதைச் தெரிஞ்சுக்கணும். அவர்களுக்கு அந்தப் பெயர் பிடிக்காதுன்னு சொன்ன பின்பும் அதையே சொல்லிச் சீண்டறது தவறு, கூடாது. ஒருவருக்குக் கஷ்டத்தைக் கொடுத்துவிட்டு, அதை எப்படிக் கொண்டாட்டம் என்று சொல்ல முடியும்?!
எம்.ஜீவபிரகாஷ் (10ஆம் வகுப்பு)பட்டப்பெயர் வைத்து அழைப்பது மிகவும் தவறான செயல்தான். அந்தப் பெயர் அவர்களைத் தனிமைப்படுத்தும். சக மாணவர்களோடு, எளிமையாக இருக்க முடியாதபடி மனக்காயத்தை ஏற்படுத்தும். சில இடங்களில் வகுப்பறைக்குள் ஆசிரியர்களேகூட இப்படி மாணவர்களை அழைப்பதுண்டு. இதனால், அந்த மாணவர் விரக்தியடையலாம். மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும்கூட மாணவர்களை பட்டப்பெயர் வைத்து அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எஸ்.ஸ்ரீஹரன் (10ஆம் வகுப்பு)பட்டப்பெயர் என்பதே ஜாலியா, விளையாட்டாக வைத்துக் கொள்வதுதான். ரொம்பவும் நெருக்கமான நண்பர்களுக்குள்ள பட்டப்பெயர் வைப்பது விளையாட்டாகவே பார்க்கப்படும். அதையே பொதுவில் சொல்லி அழைக்கக்கூடாது. அது நட்புக்குள் வருத்தத்தை ஏற்படுத்தி உறவில் விரிசலை உண்டாக்கிவிடும். சம்பந்தப்பட்ட நபரே ரசிக்கும்படி, பட்டப்பெயர் வைத்தால், அதை ஜாலியாகச் செய்யலாம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement