Advertisement

இளஸ்... மனஸ்... (147)

அன்புள்ள ஜெனிபர் ஆன்டிக்கு, வணக்கம்!
'இளஸ்... மனஸ்...' பகுதியில், நீங்கள் கூறும் கருத்துகள் அனைத்தும், பயனுள்ளது. தொடர்ந்து, இந்த பகுதியை விரும்பி படித்து வரும் வாலிபன். என்னுடைய பிரச்னைக்கும், உங்களிடம் தீர்வு கிடைக்கும் என்பதால், எழுதுகிறேன்.
என் வயது, 25; எனக்கு, நானே தனியாக பேசிக் கொள்கிறேன்; சிறு வயது முதல், இந்த பழக்கம் இருக்கிறது.
இதை தவிர்க்குமாறு, பெற்றோர் கூறியும், கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடைய தங்கை, கிண்டல் செய்கிறாள்; இந்த பழக்கத்தை மாற்றி கொள்வதற்கு, ஆலோசனை கூறுங்க ஆன்டி.

அன்பு மகனுக்கு, வணக்கம்!
கடிதத்தில், உன்னுடைய பிரச்னை குறித்து, விபரமாக எழுதவில்லை.
'எனக்கு, நானே தனியாக பேசிக் கொள்கிறேன்' என்று மட்டும் எழுதினால், உன் பிரச்னைக்கு, முழுமையான தீர்வை, நான் எப்படி கூற முடியும்... சிறு வயதில் இருந்தே, பெற்றோர், வேலைக்குச் சென்று விடுவதால், தனிமையில் வளரும் குழந்தைகள், இப்படி, தங்களுக்கு தாங்களே பேசிக் கொள்வர்.
இவர்களுக்கு, நண்பர்கள் இருக்க மாட்டார்கள். உறவினரிடம், பழக மாட்டார்கள். மனதிற்குள்ளேயே, எல்லா விஷயங்களையும் போட்டு, அழுத்திக் கொள்வதால், அது பீறிட்டு வெளிப்படும் போது, தங்களுக்கு தாங்களே பேசிக் கொள்வர். இத்தனைக்கும், உனக்கு தங்கை வேறு இருக்கிறார். அப்படி இருப்பவர்களுக்கு, இந்த பழக்கம் வர வாய்ப்புகள் குறைவு.
உனக்கு, தனிமையில் பேசும் பழக்கம் மட்டும் தான் உள்ளதா... மற்றபடி, உன் தினசரி காரியங்களான, குளிப்பது, சாப்பிடுவது, அலுவலகம் செல்வது, இவற்றில், எந்த பிரச்னையும் இல்லையென்றால், நீ கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இருப்பினும், பொதுநல மருத்துவரிடம், ஆலோசனை பெற்று, இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய். முடிந்தவரையில், தனிமையில் இருக்காதே; தங்கையுடன் பேசி, மகிழ்வாக இரு!
தனக்குத் தானே பேசிக்கொள்ளும் பழக்கத்துடன், காலை கடன்களை சரியாக செய்யாமல், வேலைக்கு ஒழுங்காக செல்லாமல், எல்லாரிடமும் பிரச்னை செய்வர்...
தனிமையில் இருப்பது, மற்றவர் கேட்கும் கேள்விகளுக்கு, நேரடி பதில் சொல்லாமல், சம்மதம் இல்லாத பதிலை சொல்வது போன்று இருந்தால், இது மனச்சிதைவின் முதல் கட்டம்!
இவர்கள், மனநல மருத்துவர்களை பார்க்க வேண்டியது, மிக மிக அவசியம்!
இதில், நீ எந்த வகை என்பதை உணர்ந்து, அதற்கேற்ற மருத்துவரை பார்; பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. விரைவில் இந்த பிரச்னையில் இருந்து நீ விடுபட வாழ்த்துகள்!
-- அன்புடன் , ஜெனிபர் பிரேம்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement