Advertisement

எருது பால்!

ஒரு நாள், பீர்பாலை அழைத்து, ''ஒரு கோப்பை எருது பால் தேவை...'' என்றார் அக்பர்.
சிரித்தார் பீர்பால். மறுத்து கூற விரும்பாமல், ''ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்; வாங்கி வர முயற்சிக்கிறேன்...'' என்றார். அக்பர், அனுமதி கொடுத்தார்.
மாலை வீடு திரும்பிய பீர்பால், 'சக்கரவர்த்திக்கு, ஒரு வராத்தில், எருது பால் வாங்கி வருவதாகக் கூறினோமே; இது நடக்கும் காரியமா' என்ற சிந்தனையுடன் அமர்ந்திருந்தார்.
மவுனமாக இருந்த கணவரைக் கண்ட மனைவி, கவலையுடன் விவரம் கேட்டாள். எருது பால் விவரத்தை கூறியதும் சிரித்தாள்.
''கவலைப்படாதீங்க... ஒரு வாரம் வீட்டிலேயே இருங்க... சக்கரவர்த்தி கேட்ட பாலைக் கொடுக்க, ஏற்பாடு செய்கிறேன்...'' என்றாள்.
மனைவி கூறிபடி, வீட்டிலேயே தங்கினார் பீர்பால்.
ஐந்து நாட்கள் கடந்தன; ஆறாம் நாள் நள்ளிரவு, அழுக்கு துணி மூட்டையுடன், அரண்மனை அருகே உள்ள குளத்துக்கு போனாள் பீர்பால் மனைவி. அங்குள்ள படிக்கட்டில், துணி மூட்டையை அவிழ்த்தாள். உரத்த குரலில், 'உஷ்... உஷ்...' என்றபடி துணியை பலமாக அடித்து துவைத்தாள்.
'நள்ளிரவில், துணி துவைப்பது யார்' என்பதை தெரிந்து கொள்ள, அக்பர் எழுந்து வந்தார். பீர்பாலின் மனைவியிடம், ''நடு ஜாமத்தில், துணி துவைக்கிறாயே ஏன்...'' என்றார்.
''பாதுஷா... ஆறு நாட்களுக்கு முன், என் கணவருக்கு ஒரு குழந்தை பிறந்தது; வேலைக்காரி, இரண்டு நாட்களாக வரவில்லை; நானே துணி துவைக்க வேண்டியதாயிற்று. எல்லாம் என் தலைவிதி...'' என்று, சலிப்புடன் கூறினாள்.
''ஓ... பெண்ணே... என்ன சொல்கிறாய்... ஆண் எங்காவது, பிள்ளை பெற முடியுமா...''
''சக்கரவர்த்தி... இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது... எருது பால் வாங்கி வர, நீங்கள் கட்டளையிடும் போது, ஒரு ஆணுக்கு குழந்தை பிறக்காதா...''
அவள் பதிலைக் கேட்டதும் திகைத்தார். தன் கட்டளையை நினைத்தார். அவருக்கு, புத்தி புகட்டவே, பீர்பால் மனைவி இப்படி செய்தாள் என்பதை அறிந்து, பரிசுகளைக் கொடுத்து அனுப்பினார்.
குட்டீஸ்... அறிவை பயன்படுத்தி வாழ பழகிக் கொள்ளுங்க.
- சுவாமிமலை பதிப்பகம்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement