Advertisement

கருமி இழந்த பணம்!

அத்திப்பாக்கம் கிராம மக்கள், கூட்டமாக ஆற்றில் குளித்தனர். அந்த ஊரில் வசித்த ராமு என்ற வாலிபன் மட்டும், தனியாக குளித்துக் கொண்டிருந்தான். தண்ணீரில் மூழ்கி எழுந்த அவன், கையில், ஏராளமாக, பண நாணயங்கள் இருந்தன.
மீண்டும், மீண்டும் நீரில் மூழ்கி, நாணயங்களைச் சேகரித்து, பையில் போட்டுக் கொண்டிருந்தான்.
ஆற்றில் சலவை செய்து கொண்டிருந்த சலவைக்காரர், இதை கவனித்தார். பேராசை பிடித்த அவர், மகா கருமி. இரக்கம் இல்லாதவர்.
ஏராளமானச் சொத்துக்கள் இருந்தும் யாருக்கும், எந்த உதவியும் செய்ய மாட்டார். உதவி கேட்பவரை விரட்டியடிப்பார்.
ஆற்றில் மூழ்கி, நாணயங்களை, ராமு எடுப்பதை பார்த்தவருக்கு, துணிகளை சலவை செய்யும் எண்ணம் ஏற்படவில்லை. உடனே ராமுவிடம் வந்து, ''நீ என்ன செய்கிறாய்?'' என்றார்.
திடுக்கிட்டு பார்த்த ராமு, ''ரகசியத்தை பாத்துட்டீங்களா... யாருக்கும் தெரியாமல், பாதுகாத்து வந்தேனே...'' என்றான்.
''இதோ பார் ராமு... நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்; நீ ரகசியம் என்கிறாய். ஆற்றில் மூழ்கி, நாணயங்களை எடுக்கிறாய்... எதுவுமே புரியவில்லை; புரியும்படி தெளிவாக சொல்...''
''இது சாதாரண விஷயமில்லை; மந்திர ரகசியம். இதை, யாருக்கும் தெரிவிக்க மாட்டேன்...''
''இதோ பாரப்பா... இதை சொன்னா என்ன வேண்டுமானாலும் தருவேன்...''
''உம்மை கருமி என்று ஊரார் சொல்கின்றனர்; நானும் அறிவேன். இந்நிலையில், பணம் கொழிக்கும் மந்திர ரகசியத்தை, தெரியப்படுத்த முடியுமா...''
''ராமு... என் மனதை, கண்டிப்பாக மாற்றிக் கொள்வேன். கருமியாக இருக்க மாட்டேன்...'' என்றான்.
சிறிது நேரம் யோசனைச் செய்தான் ராமு.
''ஐயா... பணம் கொழிக்கும் ரகசியத்தை பார்த்து விட்டீர்... இதுவே, பெரிய அதிர்ஷ்டத்தை தரப் போகிறது...'' என்றான் ராமு.
மகிழ்ச்சியடைந்த சலவைக்காரர், ''இதோ பார் ராமு... எவ்வளவு பணம் வேணுமானாலும் தருகிறேன்; அந்த ரகசியத்தை, கற்றுக் கொடு...'' என்றார்.
''சலவைக்காரரே... நான் கேட்கும் பணத்தைத் தந்தால், மந்திரத்தை கற்றுத் தருகிறேன். மந்திரத்தை கற்றால், ஆறு மாதத்தில் ஏராளமாக பணம் சம்பாதிக்கலாம்...''
''அப்படியானால், இப்போதே, வீட்டிற்கு வா... தருகிறேன்; பணத்தை வாங்கிய பின், மந்திரத்தைக் கற்று தந்தால் போதும்...''
சம்மதித்து, சலவைக்காரரிடம் பணத்தை, வாங்கினான் ராமு.
பின், ரகசியமாக,''பணம் கொழிக்கும் மந்திரத்தை, இப்போதே கற்று தருகிறேன். எப்போது வேண்டுமானாலும், ஆற்றில் இறங்கி, மந்திரத்தைக் கூறலாம். கையில், நாணயங்கள் வந்தபடியே இருக்கும்...'' என்றான்.
பய பக்தியுடன், ராமுவின் முகத்தை பார்த்தார் சலவைக்காரர்.
''ஜாகா... ஜாகா... பணம்... பணம்...'' என்று கூறினான்.
சலவைக்காரரும், ''ஜாகா... ஜாகா... பணம்... பணம்...'' என்று திரும்பக் கூறி, மனப்பாடம் செய்தார்.
பணத்துடன், வீட்டிற்கு வந்தான் ராமு. உடனடியாக, மனைவியை அழைத்து, மாமனார் வீடு சென்றான்; அங்கு பணத்தை மறைத்து, திரும்பினான். மாமனார் வீட்டிற்கு சென்று வந்ததை, ரகசியமாக வைத்திருந்தான்.
மறுநாள் -
சலவைக்காரர், அதிகாலையே ஆற்றுக்குச் சென்றார். நீரில் மூழ்கி, ராமு கற்றுக் கொடுத்த மந்திரத்தை கூறி, கையை விரித்தார். நாணயங்கள் எதுவும் வரவில்லை. எத்தனையோ முறை முயன்றும் ஏமாற்றமடைந்தார்.
வேகமாக ராமுவிடம் ஓடிய அவர், ''நீ கூறியபடி எதுவும் நடக்கவில்லை; கற்றுக் கொடுத்த மந்திரத்தை, பல முறை சொல்லிப் பார்த்தேன். எந்தப் பயனும் ஏற்படவில்லை; என்னை ஏமாற்றி விட்டாய்...'' என்றார்.
''சலவைக்காரரே... உமக்கு எப்போது, மந்திரம் கற்றுக் கொடுத்தேன்...'' என்றான். சலவைக்காரருக்கு மயக்கம் வந்து விட்டது.
''பணம் கொழிக்கும் மந்திரத்தை கற்றுத் தருவதாக, ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுத்தாயே; அதற்கு, ஏகப்பட்ட பணம் கொடுத்தேனே...'' என்றார். அதை, ராமு பொருட்படுத்தவே இல்லை.
ஏமாற்றப்பட்டத்தை, ஊராரிடம் சலவைக்காரர் சொன்னார். ஊர் மக்கள் சிரித்தனர்.
'யார்... நீயா... இவ்வளவு பணம் கொடுத்தாயா... உன்னிடம், ஒன்றுமே வாங்க முடியாதே... அந்த அளவு மகா கருமியாயிற்றே...' என்று கூறி, ஏளனம் செய்தனர்.
செய்வதறியாது திகைத்தார் சலவைக்காரர்.
குட்டீஸ்... பேராசைக்கு கிடைத்த பரிசை பார்த்தீர்களா... இது போன்ற துர் குணங்களை தவிர்த்து, வாழப் பழகுங்க!
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement