Advertisement

பொங்கல் பொங்கட்டும்... ஆனந்தம் தங்கட்டும்!

தொடித்தோளின் போகி!
பொங்கல் பண்டிகை, தமிழர்களின் தன்னிகரில்லா பெருவிழா. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வைபவம்.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகி. இது, வீட்டையும், சுற்றுப் புறத்தையும், சுத்தம் செய்யும் நாள்.
'பழயன கழிதலும், புதியன புகுதலும்' என்பதே போகி! இது, வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் மட்டுமல்ல; மனதிலும் நிகழ வேண்டும்.
மன அழுக்கை நீக்குவதே, போகி பண்டிகை! தொடித்தோள் செம்பியன் என்ற, சோழ மன்னன் ஆட்சி காலத்தில், போகி கொண்டாடப்பட்டதை, தஞ்சாவூரில், ஒரு புராதன கல்வெட்டு தெரிவிக்கிறது.

எம்.ஜி.ஆர்., பண்டிகை!
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள், ஜனவரி, 17; சினிமாவிலும், அரசியலிலும் வெற்றி வாகை சூடி, தமிழக முதல்வராக, பணியாற்றியவர். அவர் கொண்டாடிய ஒரே பண்டிகை, பொங்கல் தான். அன்று அதிகாலை எழுந்து, குளித்து, புத்தாடை அணிவார்; அவர் மனைவி ஜானகி அம்மாள், பொங்கல் வைக்க, பண்டிகை களைகட்ட துவங்கும்.
உடன் இருப்பவர்கள், வீடு, தோட்டத்தில் வேலை செய்பவர்கள் என, அத்தனை பேரையும் அழைத்து, வாழ்த்து தெரிவித்து, புத்தாடை, பரிசுகள் வழங்குவார்.
வெண் பொங்கல், கற்கண்டு சாதம், என, பல வகை உணவுகள் தயார் செய்யப்பட்டிருக்கும். பலகாரங்கள் நிரம்பி இருக்கும்; உணவு மேஜையில் அமர வைத்து, கனிவோடு, உணவு வகைகளை பரிமாறுவார். அன்று அவரது உதடுகள், புன்னகை பூத்தபடியே இருக்கும். எதற்காகவும் கோபித்துக் கொள்ள மாட்டார்.

செல்ல பசுவே!
மாட்டுப் பொங்கல் என்பது, பொங்கல் பண்டிகைக்கு மறுநாள், நடக்கும். விவசாய வாழ்வுடன் ஒன்றிய கால்நடைகளுக்கு, நன்றி தெரிவிக்கும் கொண்டாட்டம்.
அன்று, தொழுவத்தை, சுத்தம் செய்வர்; கால்நடைகளை குளிப்பாட்டி, சுத்தம் செய்வர். கொம்புகளை சீவி, பளபளக்கும் வண்ணம் பூசுவர்; கூரான கொம்பில், குஞ்சம் அல்லது சலங்கை கட்டுவர்.
கழுத்து வார் பட்டையில், 'ஜல்... ஜல்...' சலங்கை கட்டி, அழகு படுத்துவர். தொழுவத்திலேயே, பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு, கொடுப்பர்.

பசு, நெய்யின் சிறப்பை குறிக்கும் ஊர் பெயர்கள்!
கோவில்பட்டி அருகே பசுவந்தானை கிராமம் உள்ளது. வேலுார் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையில், போளூர் அருகே பால்வார்த்து வென்றான் கிராமம் உள்ளது. ஆம்பூர் அருகே, தயிர்க்காரன்பட்டி கிராமம் உள்ளது.
குடியாத்தம் அருவி அமைந்துள்ள இடம் மோர்தானா. தஞ்சை மாவட்டத்தில் வெண்ணெய்நல்லார் உள்ளது. சென்னிமலை அருகே நெய்க்காரன்பட்டி கிராமம் உள்ளது.

திருக்குறளில்...
பொங்கலை ஒட்டி திருவள்ளூவர் தினம் வருகிறது. திருக்குறளை பற்றி அறிந்திருக்க வேண்டாமா...
* ஆங்கிலத்தில், 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்
* இதுவரை, 30 மொழிகளில் வெளிவந்துள்ளது
* தமிழ் எழுத்துக்கள், 37 இடம் பெறவில்லை
* பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து, 'ஔ'
* திருக்குறளில் இடம் பெற்ற...
ஒரே விதை குன்றிமணி.
ஒரே பழம் நெருஞ்சிப்பழம்.
இரு மலர்கள், அனிச்சம், குவளை.
மரங்கள், பனை, மூங்கில்.
மொத்த எழுத்துக்கள், 42,194.
தமிழர் வேதம் திருக்குறள்; தலையில் வைத்துக் கொண்டாடுவோம்!

பொங்கல் கூட்டு!
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு - 1
அவரைக்காய் - 6
கத்தரிக்காய் - 2
வாழைக்காய் - 1
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1
மிளகாய் வற்றல் - 4
கடலைப் பருப்பு - 50 கிராம்
பச்சை மொச்சை - 50 கிராம்
பரங்கிக்காய் - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் துாள் - 1 சிட்டிகை
மல்லி பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேஜைகரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - சிறிதளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு - தேவையான அளவு.

செய்முறை:
துவரம் பருப்பை, மஞ்சள் துாள், உப்பு சேர்த்து வேக விட்டு, குழைத்து வைக்கவும். காய்ககளை நறுக்கி, கடலைப்பருப்புடன், உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து வேக விடவும்.
காய்கறி குழைந்து விட கூடாது; நெத்தாக வெந்து இருக்க வேண்டும். துருவிய தேங்காயுடன் சிறிது நீர் சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில், சிறிது எண்ணெய் விட்டு, தாளித்து, வெந்த காய்கறி கலவையுடன் அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறி, குழைந்த பருப்பையும் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும், அடுப்பை நிறுத்தவும்.
ஒன்பது வகை காய்களுக்கு பதில், 11 வகை, 21 வகை என, ஒற்றை படையில் கலவை சேர்த்தும், இந்த வகை பொங்கல் கூட்டு தயார் செய்யலாம். மிகவும் ருசியானது; சத்தானதும் கூட!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement