Advertisement

பறக்கும் கம்பளம்! (15)

சென்றவாரம்: அக்னி அரக்கனின் கொம்புகளும், வாலும் காணாமல் போனதை அறிந்து திடுக்கிட்டான் கீர்த்தி. ஆனாலும் சுதாகரித்து, அது கொல்லப்பட்ட விதத்தை குந்தளவல்லியிடம் வர்ணித்தான். இனி -

இவர்கள், பேசி கொண்டிருந்த போது, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில், 'விஷ்...' என, சத்தம் கேட்டது. நீல வானத்திலே, நிலவு ஒளியில் ஏதோ ஒன்று, பறந்து செல்வதைக் கண்டாள் குந்தளவல்லி. அதுமட்டுமல்ல... அது, அரண்மனையின் பெரிய சாளரம் வழியாக, புகுவதையும் கண்டாள். அவளுக்கு வியப்பும், பயமும் ஏற்பட்டது.
அதே காட்சியை, கீர்த்தியும் கண்டான். ஆனால், அவன் வியப்போ, திகைப்போ அடையவில்லை. ஏனென்றால், அது மந்திர கம்பளம் தான் என்பதை, நொடியில் அறிந்தான்.
அது மட்டுமல்ல; அந்த கம்பளத்தில், தந்தை, தாய் மற்றும் இன்னொரு நபர் அமர்ந்திருப்பதை கண்டான்; அந்த இன்னொரு நபர், மங்களகிரி அரண்மனையின் பிரதான சமையல்காரன், நளசர்மாத்தான் என்பது, அதிபுத்திசாலியான, கீர்த்திக்கு விளங்கி விட்டது.
நடந்ததை யூகித்துவிட்டான் கீர்த்தி.
'இது என்ன அதிசயம்...' என்று விழிகளால் வினவினாள் குந்தளவல்லி.
'வியப்படையாதே, விளக்குகிறேன்...' என்று பார்வையாலேயே பதில் கூறினான் இளவரசன்.
அதே வேளை, மாணிக்கவர்மரிடம், ''விசித்திரபுரி மகாராஜா மந்தஹாசர் வருகை புரிந்திருக்கிறார்... உங்களை உடனே காண விரும்புகிறார்...'' என்றான் ஒரு சேவகன்.
''மந்தஹாசர் வந்திருக்கிறாரா... '' என, கலவரப்பட்ட மாணிக்கவர்மர், 'இளவரசர் இங்கிருப்பது தெரிந்து தான், திடீர் விஜயம் செய்திருக்கிறாரோ' என பதறி, 'அந்த பயல் நளசர்மாவின் வேலையாகத்தான் இருக்கும்...' என்று எண்ணி நடுங்கினார்.
''கலக்கமடையாதீர்... தைரியமாக மகாராஜாவுக்கு வரவேற்பு கொடுங்கள்... நானும் வருகிறேன்...'' என்று தெம்பூட்டினான் கீர்த்தி.
''ஆமாம்... வாருங்கள்... அதுதான் நல்லது...'' என்று கூறியபடி, அவசரமாக சென்றார் மாணிக்கவர்மர்.
மனோகர புன்னகையுடன், குந்தளவல்லியின் கரம் பற்றியபடி, சாவகாசமாக நடந்தான், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை பெற்ற கீர்த்திவர்மன்.
மந்தஹாச மகாராஜாவும், ராணி ரத்னாவதியும், மங்களகிரி அரண்மனை முன், விசாலமான வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். மாணிக்கவர்மர், அவசரமாக வந்து, மகாராஜாவை வணங்கினார்.
மகாராஜா, முன் அறிவிப்பின்றி, எதற்காக வந்திருக்கிறார் என, குழம்பிக் கொண்டிருந்த போது, புன்னகை பூசிய முகத்துடன், கீர்த்தி அங்கு வந்தான். அவனை கண்டதும், முகத்தை துாக்கி கொண்டார் மந்தஹாசர்.
''உங்கள் மூத்த மகன் கீர்த்திவர்மன் வணக்கம் செய்கிறான் அப்பா...'' என்று, வணங்கினான் இளவரசன். அரசர், முகத்தை திருப்பிக் கொண்டார்; கீர்த்தி சிரித்துக் கொண்டான்.
''அம்மா... உனக்கும் வணக்கங்கள்...'' என்றான் கீர்த்தி. ராணி ரத்னா தேவி, 'வெடுக்'கென்று முகத்தை, தோள் பட்டையில் இடித்து, திருப்பி கொண்டாள்.
கீர்த்தியிடம், தனி பாசங்கொண்டிருந்த ரத்னாவதிக்கு, என்ன வந்து விட்டது. அவளுக்கு பிடிக்காத, மந்திரஜாலங்களுக்கு, கீர்த்தி ஆட்பட்டு விட்டான் என்ற கோபம் தான். தந்தையும், தாயும் இளவரசனிடம் முகம் கொடுத்து பேசாததைக் கண்ட மாணிக்கவர்மர் உடல் நடுங்கியது.
'கீர்த்திக்கு புகலிடம் கொடுத்திருப்பதாக, குற்றம் சாட்டி, தண்டனை வழங்க வந்திருக்கிறாரோ...' என, எண்ணிய போது, தலை சுற்றியது.
குந்தளவல்லியும், கிட்ட தட்ட இதே நிலையில் தான் இருந்தாள். இளவரசரை ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத மன்னரையும், மகாராணியையும் கண்ட போது, அவளது ரோஜா வண்ண முகம் வெளுத்தது.
அவள் தவிப்பை கண்டான் கீர்த்தி. தான் அங்கு இருப்பதை, அப்பாவும், அம்மாவும் விரும்பவில்லை என்பதையும் புரிந்துக் கொண்டான். ஆகவே, குந்தளவல்லியின் பீதியை போக்கி, ஆறுதல் கூறும் முடிவுடன் அவளை நோக்கி நடந்தான். வாஞ்சையோடு அவள் கரம் பற்றி, அதே கூடத்தில், கொஞ்சம் தள்ளி இருந்த, ஒரு சாளரம் அருகே அழைத்துப் போனான்.
கீர்த்தி நகர்ந்ததும், நிலைமையை சமாளிக்க, மகாராஜாவிடம் சமாதானமாக பேசினார், மாணிக்கவர்மர். ஆனால், ராணியிடம் ஏதும் பேசவில்லை. ராணியின் குணம் அவருக்கு தெரியும். மந்தஹாசர் பதில் ஏதும் கூறவில்லை. ராணி இருக்கும் போது, அவர் அவசரப்பட்டு பேச மாட்டார்; ராணி தான் பேசினாள்.
''எனக்கு மந்திர மாயங்களில் நம்பிக்கை கிடையாது. ஆனால், ஜமுக்காளத்தில் பறந்து வந்ததை, நம்பவே முடியவில்லை...'' என்றாள்.
மாணிக்கவர்மரும் இதே குழப்பத்தில் தான் இருந்தார்... எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது...
இதற்குள், மன்னருக்கும், மகாராணிக்கும் தன் கைப்பட தயாரித்த பழரச பானங்களை, தங்க தாம்பாளத்தில் எடுத்து வந்தான் நளசர்மா. எந்த சூழ்நிலையிலும், சாப்பாட்டு விஷயத்தை ஒதுக்காத மந்தஹாசர், உற்சாகத்துடன் ருசித்தார். ஆனால், ராணி ரத்னாவதி, அதை தொடவில்லை.
''என்ன நடந்தது, நாங்கள் எப்படி இங்கு திடீர் பிரவேசம் செய்தோம் என்பதை அறிந்துக் கொள்ள ஆவலோடு இருக்கிறாய் இல்லையா...'' என்றார் மந்தஹாசர், பழ ரசத்தை உறிஞ்சியபடியே.
''ஆமாம் மகாராஜா... இம்மாதிரி, முன்னறிவிப்பின்றி, நீங்கள் வந்ததே கிடையாதே...'' என்றார், மங்களகிரி மன்னர் மாணிக்கவர்மர்.
''நேற்று இரவு சாப்பிட உட்காரும் போதே, கொஞ்சம் நேரமாகி விட்டது. எனக்கு நல்ல பசி வேறு. ஆவலோடு, ஒரு பிடி எடுத்து வாயில் போடும் போது, அறைக்கு வெளியே சத்தம் கேட்டது.
''உண்பதை நிறுத்தி, நிமிர்ந்து பார்த்தேன். அரண்மனை காவல் தலைவன் பரபரப்புடன் ஓடி வந்தான். வெளியில் ஒருவன் அக்கினி அரக்கனின் கொம்புகளையும், வாலையும் வைத்தபடி, பரிசுப் பொருளை கேட்டதாக கூறினான். எனக்கு பசி பறந்தது.
''ராணியுடன் வரவேற்பறைக்கு போனேன். அங்கே, கையில் ஒரு மூட்டையும், தோளில் கம்பளமுமாக உன் அரண்மனை பிரதான சமையல்காரன் நளசர்மா நின்று கொண்டிருந்தான்.
''என் முன், மூட்டையை பிரித்து, பரப்பினான். நம்பவே முடியவில்லை. மங்களகிரியை அடுத்துள்ள கானகத்தில், அக்கினி அரக்கனை போராடி கொன்றதாக கூறி, பரிசு தொகையை கேட்டான். நீ, என் அறிக்கையை பார்த்தாயா... அதை நானே தயாரித்தேன்...''என்றார், பெருமையோடு.
''ரொம்பவும் சிறப்பாக இருந்தது...'' என்றார் மாணிக்க வர்மர்.
''ம்... என்ன சொன்னேன்... ஆ... அவன் பரிசு கேட்டான்; நான் வாக்கு தவறாதவன். ஆனால், மஞ்சுளா தான், இணங்கி, வர மாட்டாள் போலிருக்கிறது; அவள், என் இரண்டாவது மகன் இன்பவண்ணனிடம் உயிரையே வைத்திருந்தவளாயிற்றே; அவன், திரும்பி வராததிலிருந்து, அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக இருக்கிறாள்.
''அது இருக்கட்டும். ராணி இருக்கிறாளே, இவள் ரொம்ப கெட்டிக்காரி. எதையும் ஆழ்ந்து ஆலோசிக்க கூடியவள். உன் சமையல்காரன் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை கண்டறிய அவனிடம், ஒரு கேள்வி கேட்டாள்.
''எனக்கு கூட அது தோன்றவில்லை. 'அக்கினி அரக்கனை கொன்ற அசகாய சூரனே... நீ ஒரு அயோக்கியன், ஏமாற்றுக்காரன், மோசக்காரன்...' என்றாள். நளசர்மா, வெலவெலத்துப் போனான்!
''ராணி கேட்டாள்... 'மங்களகிரி... இங்கிருந்து, 300 கி.மீ.,க்கு அப்பால் இருக்கிறது. அதையும் தாண்டியுள்ள காட்டில், அக்கினி அரக்கனைக் கொன்ற நீ, அங்கிருந்து இத்தனை விரைவாக, பளுவான, அக்கினி அரக்கனின் கொம்பு, வால் கொண்ட மூட்டையை துாக்கியபடி எப்படி வர முடிந்தது...' இப்படி கேட்டதும் தான், எனக்கும் அது நியாயமான வாதமாக தோன்றியது. நானும் கேட்டேன்...''

- தொடரும்...
- வாண்டுமாமா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement