Advertisement

வறட்சிக்கு குட்பை!

தம் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றார்போல் வேலை கிடைக்க வேண்டும்; அதன்மூலம் கைநிறைய சம்பாதித்துக் கௌரவமாக வாழ வேண்டும். இதுவே இன்று, நம்மில் பலரது எண்ணம். சிலர்தான், தம் அறிவையும் ஆற்றலையும் சமூகத்துக்காகத் திருப்பித் தருகின்றனர்; அதில் உயர்ந்தபட்ச மகிழ்ச்சி இருப்பதாகக் கருதுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர்தான், சுபாஷ் காடம்.
மகாராஷ்டிர மாநிலத்தில், ஜெய்கான் என்ற கிராமத்திலிருந்து பிழைப்புத்தேடி மும்பைக்கு வந்தார் சுபாஷ் காடம். அப்போது அவருக்கு வயது 18. அன்றாடம் குறைவாகத் தூங்கி, பல மணிநேரம் டிரைவராகப் பணிபுரிந்து, தன் தங்கை திருமணத்துக்காகப் பணம் சேர்த்தார்.
23வது வயதில் சுபாஷ் காடமுக்கு ஆன்மிக இயக்கம் ஒன்றுடன் தொடர்பு ஏற்பட்டது. 'தினமும் ஓடிஓடி உழைக்கிறோம், இந்தச் சமூகத்துக்கு எதைத் திருப்பித் தருகிறோம்? திறமையுள்ள இளைஞர்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து விட்டால், சொந்தக் கிராமத்தில் பலவீனமான மக்கள் இருப்பார்களே, அவர்களுக்கு யார் உதவுவது?' என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.
இந்தச் சிந்தனை அவரை தூங்கவிடாமல் செய்தது. தம் சொந்தக் கிராம மக்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன், மீண்டும் கிராமத்துக்குத் திரும்பினார் சுபாஷ் காடம்.
ஜெய்கான் கிராமத்தில் கரும்பும் சோளமும் பயிரிடுவது தான் தொழில். இரண்டு பயிர்களுக்குமே தண்ணீர் தேவை அதிகம். கிராமத்தில் திடீர் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. நிலைமை மிகவும் மோசமாகி, குடிநீருக்கே லாரியில்தான் தண்ணீர் வாங்க வேண்டும் என்ற நெருக்கடி உருவானது.
மக்களிடம் தண்ணீர் சேமிப்பு பற்றி, பிரசாரத்தைத் தொடங்கினார் சுபாஷ் காடம். ஒற்றுமை, கூட்டுமுயற்சியின் சிறப்பை வலியுறுத்திப் பேசினார். சமூக உணர்வை, சகோதரத்துவத்தை மக்களிடையே விதைத்தார். அவரது, சமூக அக்கறையைப் பார்த்த ஜெய்கான் கிராம மக்கள், அவரைத் தேர்தலில் போட்டியிட வைத்தனர். தனது, 32வது வயதில் கிராமத் தலைவராக ஆனார் சுபாஷ் காடம்.
ஒரே ஒரு கிணறு மட்டுமே கொண்டிருந்த ஜெய்கான் கிராமத்தில், மக்கள் உதவியோடு 27 கிணறுகளை வெட்டினார் சுபாஷ். அதுமட்டுமன்றி,
20 சம உயர அகழி அணைகளை அமைத்து 4 லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமித்தார். இன்று 24 மணிநேரமும் கிராமத்துக்குத் தண்ணீர் சப்ளை கிடைக்கிறது. வறட்சி பாதிப்பால் தவித்த ஜெய்கான், உபரியான தண்ணீருடன் தன்னிறைவு பெற்றுள்ளது.
2017இல், தண்ணீர் சேமிப்பில் சிறப்பாகச் செயற்பட்டதற்காக, ஜெய்கானுக்கு, 'சத்யமேவத ஜெயதே வாட்டர்கப்' விருது கிடைத்தது.
“இது ஆரம்பம்தான். இன்னும் தொழிலிலும் கிராமத்தினர் தன்னிறைவு அடைய வேண்டும். அதற்கான வேலையைச் செய்து வருகிறோம். எதுவுமே உடனே மாறிவிடாது. உறுதியான தலைவரும், ஒத்துழைப்பு தரும் மக்களும் இருந்தால் தான் மாற்றம் சாத்தியம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் வாழ்வையே தியாகம் செய்தனர். இன்றைக்கு யாரும் உயிர்த்தியாகம் செய்யவேண்டியதில்லை. உங்கள் திறமைகளையும் பொருளாதாரத்தையும் செலவிட்டே, சமூகத்தை மேம்படுத்தலாம். நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் அர்ப்பணித்தாலே இது சாத்தியமாவதைக் காணலாம்.
உண்மையான மகிழ்ச்சியின் ரகசியம் என்ன தெரியுமா? பிறருக்கு உதவுவது தான்” என்கிறார் சுபாஷ் காடம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement