Advertisement

அறிவியல் பேச்சு!

உமா மிஸ் வகுப்பறை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. வகுப்பறை ஜன்னல் கம்பிகளை இணைத்து கயிறுகள் கட்டப்பட்டு இருந்தன. அதில், பல்வேறு தமிழ்ச் சொற்கள், மேலேயும் கீழேயும் ஆடிக்கொண்டு இருந்தன. சுவர்களிலோ பல்வேறு அறிவியல் செய்முறை விளக்கங்கள், கருத்துகளைச் சொல்லும் சார்ட்டுகள் ஒட்டப்பட்டு இருந்தன.
நடுவில் மேடை போன்ற உயரமான மேஜை. இரண்டு மூன்று மாணவர்கள், தங்கள் கைகளில் இருந்த காகிதங்களைப் பார்ப்பதும், மனத்துக்குள்ளேயே ஒத்திகை பார்த்துக்கொள்வதுமாக இருந்தார்கள். இன்னும் சிலர், முன்னே பின்னே நடந்து, வாய்விட்டு, மனனம் செய்தவற்றை ஒப்பித்துக்கொண்டு இருந்தார்கள்.
ஒருசில நிமிடங்களில் வகுப்பறையில் ஒழுங்கும் அமைதியும் ஏற்பட்டது. உமா மிஸ், ஆரம்பிக்கலாம் என்பது போல் தலையசைக்க, மேடையில் ஒரு பெண் தோன்றினாள். கையில் வைத்திருந்த காகிதத்தை மறைத்துக்கொண்டு கணீர் குரலில் ஆரம்பித்தாள்:
“நான் யார் தெரியுமா? மேரி க்யூரி. ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தவள். கதிரியக்கம் என்று நீங்கள் இன்று சொல்லும் சொல்லை அறிமுகப்படுத்தியவளே நான் தான்….”
நிறுத்தி, நிதானமாக, மேரி க்யூரியின் வரலாற்றைத் தெளிந்த தமிழில் அந்தப் பெண் சொல்லிக்கொண்டே போனாள். ஆம், எல்லாமே தமிழில். அறிவியல் சொற்கள் உட்பட எல்லாமே தமிழில். வித்தியாசமான சொற்கள். இத்தனை நாள் கேட்ட சொற்கள் அல்ல அவை.
அப்பெண் முடித்தவுடன், இரண்டு மாணவர்கள் மேடையில் தோன்றினார்கள். ஒருவர் ஐன்ஸ்டீன் என்றும் மற்றொருவர் நியூட்டன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். இவருடைய உரையாடலும் எழுதிக் கொடுக்கப்பட்டதுதான் என்றாலும் அவ்வளவு சுவாரசியமாக இருந்தது.
இருவரும் தத்தமது கண்டுபிடிப்புகளைப் பற்றி விரிவாக விவாதித்தார்கள். சந்தித்த சிரமங்களை அடுக்கினார்கள். உணர்வுப்பூர்வமான பேச்சாக அந்த உரையாடல் இருந்தது. அதற்குமேல், இருவரும் எல்லோருக்கும் புரியும்படி, தங்கள் கண்டுபிடிப்புகளை எடுத்துச் சொன்னார்கள்.
இதுவும் முற்றிலும் தமிழில். திசைவேகம், முடுக்கம், புவியீர்ப்பு விசை என்று புதுப்புதுச் சொற்கள். அவர்கள் பேசிய வேகத்தில், அந்தச் சொற்கள் எல்லாம் இயல்பாக வந்து விழுந்தன. அவர்கள் தந்த விளக்கத்தில் இச்சொற்களுக்கான பொருள் என்ன என்பது தெளிவாகப் புரியத் தொடங்கியது.
அடுத்தாக மேடைக்கு வந்த மாணவன், கரும்பலகையைப் பயன்படுத்த ஆரம்பித்தான். ஒரு பக்கம் 'டெலி' என்ற சொல்லை எழுதினான். இதனை முன்னொட்டாக வைத்து உருவாக்கப்பட்ட சொற்களைப் பட்டியல் இடும்படி, மாணவர்களைக் கேட்க, ஒருசில நொடிகள் தயக்கம். அப்புறம் வேகவேகமாகப் பல சொற்கள் வந்து விழத் தொடங்கின.
டெலிபோன், டெலிகிராப், டெலிபிரிண்டர், டெலஸ்கோப், டெலிமெட்ரி, டெலிபோட்டோ, டெலிவிஷன்….
இதேபோல், 'பெரி', 'ஐசோ', 'பையோ' என்றெல்லாம் தொடங்கும் சொற்களைப் பட்டியலிடச் சொன்னான். பின்னர் 'மீட்டர்', 'கிராஃப்', 'போர்ட்' போன்ற பின்னொட்டுச் சொற்களோடு முடியும் சொற்களை வரிசைப்படுத்தச் சொன்னான்.
எத்தனை சொற்கள்! அப்பப்பா! அத்தனையும் அந்த மாணவர்களுக்குத் தெரிந்து இருந்தது.
ஒரு சில நிமிடங்களில் உமா மிஸ் மேடை ஏறினார். ஏற்கெனவே கரும்பலகையில் எழுதப்பட்டு இருந்தவற்றையெல்லாம் அழித்தார்.
பெரிய வட்டம் ஒன்றை வரைந்தார். நான்கு பகுதிகளாக அதனைப் பிரித்தார். ஒரு பகுதியில் வேகம், இன்னொரு பகுதியில் காலம், இன்னொரு பகுதியில் இடம், வேறொரு பகுதியில் திசைவேகம் என்று எழுதினார். பின்னர், பக்கத்தில் எண்ணற்ற சொற்களை எழுதினார். மாணவர்களை அழைத்து, ஒவ்வொரு சொல்லையும் எடுத்து, அதற்குப் பொருத்தமான பகுதிக்குள் எழுதச் சொன்னார்.
ஆச்சரியம். எந்தச் சொல் என்ன அடிப்படையில் உருவானது, அது எதைத் தெரிவிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கான பகுதிகளில் மாணவர்கள் எழுதினார்கள். தவறு செய்தவர்களும் உண்டு. உமா மிஸ், அதற்கான அர்த்தங்களைத் தெளிவுபடுத்த, பின்னர் சரியாகப் எழுதினார்கள்.
எல்லாமே விளையாட்டுப் போன்று இருந்தது. ஒவ்வொன்றிலும் மாணவர்கள் பங்குபெற்றார்கள். கொஞ்சம் நிதானமாக யோசித்தபோது, அன்றைய அந்த 45 நிமிடநேர வகுப்பில், நான் சுமார் பத்துப் புதிய சொற்களையேனும் தெரிந்துகொண்டிருப்பேன். என் மண்டைக்குள் அவை வளைய வந்தன. 'அதிர்வெண்', 'குறுங்கோள்', 'அலைநீளம்', 'அனைத்துண்ணி' - என்ன அழகு! என்ன எளிமை! என்ன கவர்ச்சி!
சொல்லிப் பார்க்கும்போதே, இவையெல்லாம் நான் பேசும் மொழியின் கொடை, என் சொந்த வளம் என்ற பெருமை எனக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவையெல்லாம் அறிவியல் சார்ந்த சொற்கள் என்பதுதான் இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனை நாட்களாக நான் அவற்றைப் பயன்படுத்தியதில்லை என்பதும் ஏனோ ஞாபகம் வந்தது.
மாலை வீடு திரும்பும்போது, வழக்கம்போல், உமா மிஸ் விளக்கம் சொல்லத் தொடங்கினார்.
“அறிவியல் படிப்புல முக்கியமானவை கலைச்சொற்கள். நாம் எப்படி ஒரு மொழியைக் கத்துக்கும்போது, அதுல உள்ள சொற்களையெல்லாம் கத்துக்கறோமோ, அதுபோல அறிவியலைக் கத்துக்கும்போது, அதற்குண்டான கலைச்சொற்களையும் கத்துக்கணும். ஆனால், பெரும்பாலும், அதைப் படிக்கிறோமே தவிர, பயன்படுத்தறதில்ல.
இதுதான் பிரச்னை. பயன்பாட்டில இல்லைன்னா, அது நினைவுலேயும் இல்லாமல் போயிடும். மறந்துபோயிடும். அடிப்படைக் கருத்துகள் புரிஞ்சு இருக்கும். ஆனால், அதற்குண்டான சரியான கலைச்சொல் ஞாபகமே வராது. பல மாணவர்கள், சரியான கலைச்சொல்லைப் போடாமல், சுத்திச்சுத்தி விஷயங்களை விளக்கி எழுதுவாங்க.
இங்கிலீஷ்லேயே இதுதான் பிரச்னை. நமக்கோ இன்னொரு சிரமமும் இருக்கு. அந்தக் கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் நாம தெரிஞ்சுக்கணும். அப்படின்னா, முதல்ல ஆங்கிலக் கலைச்சொல், அதற்குப் பிறகு அதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் இரண்டையும் கத்துக்கணும்.
கத்துக்கணும்னா என்ன அர்த்தம்? அதைப் பயன்படுத்தணும். பேசணும். புழக்கத்துக்கு கொண்டுவரணும். பாடப் புத்தகத்துலேயும் நோட்டுப் புத்தகத்துலேயும் மட்டும் இருந்தாப் போதாது.
அடிப்படையில, அறிவியல் அறிவைக் கொண்டுசேர்க்கறதுல கலைச்சொல் பயன்பாடு முக்கியமானது. எங்கே எந்தச் சொல்லைப் போடணும்னு தெரியணும். அதுக்காகத்தான் காலையில் பயிற்சி கொடுத்தேன். அந்தச் சொற்களோட அர்த்தத்தையும் புரிஞ்சுக்கிட்டு, பயன்படுத்தினா இன்னும் தெளிவு கிடைக்கும். தொடர்ச்சியாக இது மாதிரிப் பயிற்சிகள் கொடுத்தா, ரொம்பச் சுலபமா கொண்டு சேர்த்துடலாம்” என்றார்.
ஆம், என் மனத்திலும் பல சொற்கள் பதிந்துவிட்டன. இனிமேல் அவற்றை நானும் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement