Advertisement

வாச மலர்கள்!

''இந்த அக்கிரமம் எங்கயாவது நடக்குமாம்மா...'' வாயில் கை வைத்தபடி, என் வீட்டில் வேலை செய்யும் வள்ளி ஆரம்பிக்க, இன்று கேட்க ஒரு சுவாரஸ்யமான விஷயம் கிடைத்து விட்டது என்ற அல்பத்தனத்துடன் மனதிற்குள் மகிழ்ந்தவளாக, ''என்ன வள்ளி!'' என்றேன்.
''உங்களுக்கு அந்த கோடி வீட்டு லதாவை தெரியும் தானே!''
''ஆமா... எனக்கும் நல்ல பிரெண்ட் தான்... அக்கா அக்கான்னு உரிமையா நம்ம வீட்டுக்கு வந்தா, எடுத்துக்கட்டி செய்வா... நல்ல மாதிரி... என்ன, அவ பொண்ணு சினேகாவ பாக்கறப்ப தான் மனசெல்லாம் என்னமோ பண்ணும்... பொறக்கறப்பவே மன வளர்ச்சி இல்லாம, ஒரு சிறப்புக் குழந்தையாத்தான் பொறந்தா...
''ஆனா, நம்ம லதா கொஞ்சம் கூட வேதனை படலையே... லதாவோட தைரியமும், பொறுமையும் தான் சினேகாவை நல்லா வெச்சிருக்கு...
''பதினெட்டு வயசானாலும் இன்னும் அஞ்சு வயசு குழந்தையாட்டம் மனசும், அந்தப் பொண்ணோட கள்ளமில்லாத சிரிப்பும், வெள்ளந்தியான அழகும், தெருவே அவள தெய்வக் குழந்தையாத்தான் பார்க்கறோம்... சரி சரி... என்ன ஆச்சு, ஏன் கேட்கறே?''
''அதை ஏன்மா கேட்கறீங்க... வயித்துல பிள்ளைய தாங்கியிருக்கு அந்தப் பொண்ணு.''
கேட்டதும், மனசு, 'திக்'கென்று அதிர்ந்து, விதிர் விதிர்த்துப் போனது. வெட்டிக்கொண்டிருந்த வெண்டைக்காய் கை நழுவி, சிதறின. மேலண்ணத்தில், நாக்கு ஒட்டிக்கொண்டது.
''என்ன சொல்றே வள்ளி... பார்த்து பேசு, நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தத பேசாதே.''
அந்த விஷயத்தை ஒப்புக்கொள்ள மறுத்த மனது, வள்ளியை அவசரமாக சாடியது.
''எனக்கென்னம்மா... பாவம்... அந்த பச்சப்புள்ள மேல பழி போட... அவ்வளவு தரம் தாழ்ந்தவ இல்ல... நேத்து, அந்த பொண்ண கூட்டிக்கிட்டு, அடுத்த தெருவுல இருக்கிற டாக்டரம்மாகிட்ட வந்தாங்க... நான், அப்ப அங்கு வீட்டு வேலை செய்துட்டு இருந்தேன்.
''பாவம்... லதாம்மா... அழுது அழுது முகமெல்லாம் வீங்கியிருந்துச்சு... அந்தம்மா புருஷன் முகத்த கடுகடுன்னு வெச்சுகிட்டு, வெறப்பா நின்னாரு... நான் கண்டுக்காம போய்ட்டேன்... அப்புறம் தான் டாக்டரம்மா, எங்கிட்ட இந்த விஷயத்த சொன்னாங்க...
''பொதுவா, சிகிச்சைக்கு, அவங்ககிட்ட வர்றவங்களப்பத்தி யாருகிட்டயும் அவங்க சொல்ல மாட்டாங்க... ஆனா, இந்தப் பொண்ணு மேல, நாம பிரியமா இருக்கோம்ன்னு, விஷயத்த சொன்னாங்க... படுபாவி எவனோ ஒருத்தன், ஒண்ணும் அறியாத பச்ச மண்ணை சீரழிச்சுருக்கான்... நல்லா இருப்பானா?'' வள்ளியின் வாயிலிருந்து அடுத்து வந்த வசவின் ஒலி, காதுகளில் ஏறவில்லை.
'எப்படி சாத்தியமாகும் இது... காமப்பேய் பிடித்து ஆட்டும்போது, எதிரில் பெண்ணுருவில் கடவுள் இருந்தால் கூட விடமாட்டார்களா இந்த காமக்கொடூரன்கள்...
'தினம் தினம் எங்கோ நடக்கும் பாலியல் வன்கொடுமை செய்திகளை, சற்றே வருத்தத்துடன், 'உச்' கொட்டி கடந்து போகும் என்னால், என் தோழியின் விஷயத்தில், அப்படி நடந்து கொள்ள முடியுமா?
'இந்த விஷயம் தெரிந்த தோழி நானாகத்தான் இருப்பேன். ஆறுதல் தருவேன் என்பதற்காகவே, வள்ளி இதை முதலில் என்னிடம் கூறியுள்ளாள். இனி, என்ன செய்வது... இது கேட்கக் கூடியதோ அல்லது ஆறுதல் தரக்கூடிய விஷயமோ இல்லையே...' மனம் குழம்பினாலும், வள்ளியிடம் தீர்க்கமாக சொன்னேன்.
''வள்ளி... இந்த விஷயத்தை, என்கிட்டே சொன்ன மாதிரி, வெளியே எல்லார்கிட்டயும் உளறிகிட்டு இருக்காதே... நம்மால நல்லது பண்ண முடிஞ்சா, பண்ணுவோம்... இல்லைன்னா ஒதுங்கிடுவோம்!''
''ஆமாம்மா... இங்க இருக்கறவங்களுக்கு, நீங்க அக்கறையோட உதவி செய்யறீங்க... அதனால, உங்ககிட்ட மட்டும் இந்த விஷயத்த சொன்னேன்... பாவம்... நீங்களாவது லதாம்மாவுக்கு ஆறுதல் சொல்லி, தைரியம் சொல்லுங்க... அந்த நாசமாப் போனவன் மேல கோபம் தான்... கையில கிடைச்சா, செத்தான்...'' கோபப்பட்டவள், வேலையை முடித்து, கிளம்பினாள்.
நீண்ட நேரமாகியும் என் கொந்தளிப்பு அடங்கவில்லை.
பிரச்னைக்கு தோள் தருபவளே நல்ல நட்புக்கு அடையாளம்... முடிவெடுத்தேன்.
நேராக லதா வீட்டுக்கு சென்றேன். கதவை திறந்த லதா, என்னை கண்டதும், எனக்கு விஷயம் தெரிந்தே வந்துள்ளதை புரிந்து, ''அக்கா...'' என, கதறியபடியே ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.
''எப்படி நடந்தது இது... உன் கண் பார்வையை விட்டு, அவள் இருக்க மாட்டாளே!''
''ஆமாக்கா... பொண்ணா பொறந்த அழகு சிலைன்னு பூப்போல பொத்திப் பொத்தி வெச்சேனே... இப்ப, வாடிப்போய் நிக்கறாளே... வெறும் சதைப் பிண்டமா இருந்தவள, எவ்வளவோ மருத்துவம், பயிற்சின்னு தந்து, உலவ வெச்சேனே... எல்லாம் இதுக்கா, ஐயோ...'' என, புலம்பியவள், ''கொஞ்ச நேரம் இவள பார்த்துக்க சொல்லி, நம்பி விட்டுட்டு போன தோஷம்... அவன், தன் நாய் புத்திய காட்டிட்டானே... அவனுக்கும், கல்யாணம் ஆகப்போற பொண்ணு இருக்காளே... அறிவுகெட்ட அரக்கனா எம்பொண்ண சீரழிச்சுட்டானே... இவன் இப்படி பண்ணுவான்னு கொஞ்சம் கூட நினைக்கலையே...''
''யார் லதா?''
''என் ஒண்ணுவிட்ட துாரத்து அண்ணன் முறை... பாவி... அவன, அண்ணன்னு சொல்ல நா கூசுது... வெளியே சொல்ல முடியாதுன்ற தைரியத்துல தான் அவன் இப்படி பண்ணியிருக்கான்...
''அன்னிக்கு நான் வீட்டுக்குள்ள வந்ததுமே, 'வரேன் லதா'ன்னு... என் முகத்தை கூட பாக்காம, அவசரமா போனதுமே, எனக்கு சந்தேகம் வந்துச்சு... நேரா சினேகாகிட்ட போனேன்... என்னிக்கும் அழாத என் பொண்ணு, அன்னிக்கு கண்ணுல தண்ணி மிதக்க... தனக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லக் கூடத்தெரியாம, வலியில சிரிச்சா பாருங்கக்கா, ஒரு சிரிப்பு... என் உசிரே போயிடுச்சு... பாவி... எம்பொண்ண சீரழிச்சுட்டானே...'' கதறினாள்.
அம்மாவின் அழுகையைப் பார்த்து மிரண்டு நின்ற சினேகாவை பார்க்கையில், என் கண்களிலும் நீர் முட்டியது.
''நிச்சயம் அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்... லதா, நீ சொன்னால், அவன் மேல் புகார் தர, நான் உதவி செய்யறேன்.''
''வேணாம்க்கா... இந்த விஷயம் வெளியே போய், என் பொண்ணு மேல ஆயிரக்கணக்கான கேடு கெட்ட காமப் பார்வைகள் விழறதை என்னால சகிக்க முடியாது... ஒருமுறை அவ கெட்டுப்போனது போதும்... அந்த கடன்காரன் பொண்டாட்டி, பிள்ளைகளும் ரொம்ப நல்லவங்க... அவங்களால இந்த விஷயத்த தாங்க முடியாது... கண்டிப்பா குடும்பம் சிதறிப்போகும்... கடவுள் என்ன முடிவெடுக்கிறானோ அப்படியே நடக்கட்டும்...
''ஆனா, ஒண்ணு... இனி, எம்பொண்ணு தான் என் வாழ்க்கை... எம் புருஷனுக்கு இதை தாங்கிக்கிற சக்தி இல்லை... பரவாயில்லை... அவர், எங்கள விட்டுட்டுப் போனாலும் போகட்டும்... ஒரு பொண்ணா, என் மகளின் வேதனையை பங்கு போட்டுக்கற வலிமை என்கிட்டே இன்னும் அதிகமாகிருச்சு.''
ஆவேசத்துடன், அதே சமயம் உறுதியுடன் சொன்ன லதாவின் மன தைரியத்தை மனதுக்குள்ளேயே பாராட்டி, ''எந்த உதவின்னாலும் கேளு லதா... நான் உடனே வரேன்!'' என்றேன்.
''ரொம்ப நன்றிக்கா... பக்கத்து வீட்டுல ஒரு உசிர் போச்சுனாலே, நமக்கென்னன்னு ஒதுங்கிப்போற இந்தக் காலத்துல, வீட்டுப் படியேறி வந்து, ஆறுதல் சொல்றீங்க... கண்டிப்பா ஏதாவது உதவி வேணும்ன்னா வரேன் அக்கா.''
சிறிது நேரம் இருந்து, அவளுக்குத் தைரியமும், ஆறுதலும், ஆலோசனையும் சொல்லி, வீட்டுக்கு வந்தேன்.
இது, நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. சினேகாவின் கருவைக் கலைத்து விட்டதாக போனில் தகவல் சொன்னாள், லதா. போய்ப் பார்த்தேன். அதோடு சரி, தினம் சினேகாவைக் கூட்டிட்டு, 'வாக்கிங்' செல்லும் லதாவைக் காணவில்லை. வேலைப்பளுவில், எனக்கும் அவளிடம் பேச முடியவில்லை.
இதோ இன்று, லதா, என் முன் சினேகாவோடு நிற்கிறாள்; கூடவே மீசையில்லாமல் பழைய இந்திப்பட ஹீரோ சாயலில் இளைஞன் ஒருவன்.
''அக்கா... இவன் பேரு ஜீவா... எனக்கு தெரிந்த பையன் தான்... என் வீட்டுக்காரரோட அக்கா முறை உறவினரோட மகன்... சின்ன வயசுல இருந்தே தெரியும்... போன மாசம் வந்தப்ப, சினேகா பத்தி எப்படியோ தெரிஞ்சுகிட்டான்... இப்ப, 'இவளை, நானே கல்யாணம் பண்ணி காப்பாத்தறேன்'னு ஒத்தக்காலில நிக்கறான்...
''நான் என்ன செய்யறது... அவங்க வீட்டுல யாரும் இவனுக்கு ஆதரவில்லை... நாளைக்கு எனக்கப்புறம் என் பொண்ண யார் பார்த்துப்பா... அதான், 'சரி'ன்னு சொல்லிட்டேன்... நாளைக்கு ரெண்டு பேருக்கும், 'ரிஜிஸ்டர் மேரேஜ்!' நீங்க தான், சாட்சி கையெழுத்து போடணும்!''
மனசெங்கும் மத்தாப்பூ பூத்தது.
ஜீவாவின் கைகளை பற்றி விளையாடியபடி இருந்த சினேகாவின் முகத்தில் புதுப்பொலிவை பார்த்தேன். 'நிச்சயம் வருகிறேன்!' என சொல்லி, அவர்களை அனுப்பி விட்டாலும், பாழாப்போன மனுஷ மனசில், 'எப்படி இந்த இளைஞன், சிறப்பு குழந்தையா இருக்கும் சினேகாவை மனைவியா ஏத்துக்கிறான்...' எனும் குடைச்சல் வந்தது. என் எண்ணம் எனக்கே வெட்கத்தை தந்தது. ஆனால், அதற்கான விடை, அடுத்த நாள் கிடைத்தது.
சார் - பதிவாளர் அலுவலகம்.
காலையிலேயே வந்துட்டேன். என்னுடன், 'அம்மா அம்மா'ன்னு நெருக்கமாகி விட்டான், ஜீவா. கூர்ந்து கவனித்ததில், அவனின் நடவடிக்கைகளிலும், குரலிலும் ஏதோ ஒன்று நெருடியது. ஆனாலும், அதை கண்டுகொள்ளாமல், ''என்ன ஜீவா... உன், அப்பா - அம்மா வர மாட்டாங்களா?'' எனக் கேட்டேன்.
''அட போங்கம்மா... என் குடும்பம், என்ன வெறுத்து, ஒதுக்கி, எவ்வளவோ வருஷமாச்சு... லதா அத்தை தான் இந்த உலகத்துல என் நிலமைய புரிஞ்சு, எனக்கு ஆறுதல் தந்தார்.''
நான் புரியாமல் விழிக்க, அப்போது அங்கு வந்த லதா, ''ஜீவா... நான், உன்ன பத்தி, அக்காகிட்ட இன்னும் ஏதும் சொல்லல,'' என, சொல்ல...
''ஓ... அப்படியா... அப்ப நானே சொல்றேன், 'அம்மா... நான் பிறப்பால் ஆண்தாம்மா. ஆனால், சமயத்தில் என்னை அறியாமலே பொண்ணு மாதிரியும் நடந்துப்பேன்... எனக்கே என் மாற்றம் தெரிய, ரொம்ப நாள் ஆச்சு...
''என் மாற்றத்தைப் பார்த்த அப்பா, நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு, என்ன வீட்டுல வெச்சுக்க பயப்பட்டு, 'ஹாஸ்டல்'ல சேர்த்திட்டார்... ஆணுமில்லாத, பெண்ணுமில்லாத என்னோட இயற்கையான சுபாவம் என்னன்னு புரியாத நிலை தான். என்னால, 'ஹாஸ்டல்'லயும் இருக்க முடியாம, யார்கிட்டயும் சொல்லாம, ஆந்திராவுக்கு போய்ட்டேன்... அங்க, என்ன மாதிரி இருக்கறவங்கள பார்த்ததும் தான் எனக்கு வாழணும்ன்னு ஆசையே வந்தது...
''நம்ம சமூகத்துல, திருநங்கை, திருநம்பின்னு எங்கள மாதிரி பாலின வேறுபாடு உள்ளவர்களை இன்னும் சக மனுஷனா பாக்க மாட்டேங்கறாங்க... எங்கள மாதிரி ஒதுக்கப்பட்ட உயிர்கள் எங்கதான் போறது, சொல்லுங்க... ஒரு உயிர், படைக்கப்படறது வாழவா அல்லது சாகவா... நான் தினம் விழிக்கறப்ப, ஒரு ஆணாகவும், பெண்ணாகவும் தான் விழிக்கிறேன்... இந்த மாறுதலான மனநிலையும், உடல்நிலையும் நாங்களா விரும்பி கேட்டு வாங்கினோம்...
''பொண்ணும், ஆணும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர கருவறையில வெச்சு ஆராதனை பண்றவங்க, எங்களைப் போன்றோருக்கு வீதியில கூட இடம் தர நினைப்பதில்லை... கிண்டல்களும், ஏளன பார்வைகளும்... வருத்தமா இருக்கும்மா... எங்களுக்கும் மனசு இருக்குங்கறத யாரும் புரிஞ்சிக்கறதே இல்லை...
''என்னையும் ஒரு உயிரா நினைச்ச, லதா அத்தைதான் என் தெய்வம். அவங்க பொண்ண, நான் கல்யாணம் செஞ்சு, அந்த தெய்வ மகளுக்கு, வாழ்க்கை முழுவதும் என் மனைவியா பாதுகாப்புத் தரணும்ன்னு நினைச்சேன்... அத்தைகிட்ட சொன்னேன், அவங்களும் ஏத்துகிட்டாங்கம்மா!''
என் கண்களில் வழிந்த நீரை துடைத்தேன்.
இதோ, சினேகா, திருமதி ஜீவா ஆகி விட்டாள். எத்தனையோ தெய்வங்களின் திருமண கதைகளை வாசித்து மகிழ்ந்துள்ளேன். உண்மையான தெய்வங்களின் திருமணத்துக்கு சாட்சியாக இருந்து, நேரில் கண்டு வாழ்த்தும் வாய்ப்பை தந்த லதாவை அணைத்து, பெருமையுடனும், நன்றியுடனும் என் அன்பை காட்டினேன்.
என் வீட்டில், இன்று ஒரே கலகலப்பு. புதுமண தம்பதிகளுக்கு, விருந்துக்கான ஏற்பாடுகளை வள்ளி தான் கவனிக்கிறாள். மனங்கள் இணைந்த மணம் அங்கு நிறைந்திருந்தது.
தன் கழுத்தில் கிடந்த புது தாலியைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தாள், எங்கள் தெருவின், 'தேவதை' தன், ராஜகுமாரனுடன்.

சுபா தியாகராஜன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement