Advertisement

மோய் பின் பை (4)

வியட்நாம் நாட்டின், தலைநகரான, ஹனாயில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள் எது என்றால், ட்ரான் க்வாக் பகோடா - புத்த கோவிலை, பகோடா என்பர், இலக்கிய ஆலயம், அருங்காட்சியகம் மற்றும் ஒற்றைத் துாண் ஆலயம்.
ட்ரான் க்வாக் பகோடா, 1,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கோவில் வளாகத்தில், புத்த துறவிகளின் அஸ்தி, பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். சிவப்பு நிறம், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொடுக்கும் என, மக்கள் நம்புவதால், இங்குள்ள, பகோடாக்கள் சிவப்பு நிறத்திலேயே உள்ளன.
அதற்கடுத்ததாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இலக்கிய ஆலயம், நம்மூர் கோவில்களை போன்று, ஐந்து பிரகாரங்களை கொண்டுள்ளது. இக்கோவிலை, புகழ்பெற்ற தத்துவஞானி, கன்பூஷியசுக்கு அர்பணித்துள்ளனர்.
நுழைவு வாயிலின் மேற்புறத்தில், டிராகன் உருவம் பொருத்தப்பட்டுள்ளது.
கி.பி., 1076ல் இக்கோவில் வளாகம், வியட்நாமின் முதல் பல்கலைக் கழகமாக இருந்துள்ளது. 'இம்பீரியல் அகாடமி' என்று அழைக்கப்பட்ட இதில், அரசர் மற்றும் பிரபுகளின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே படித்து, பட்டம் பெற்றுள்ளனர்; சாதாரண மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது.
அதன்பின், 1779ல் இந்த வழக்கம் மறைந்து, சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களும் கல்வி பயிலலாம் என்று அறிவித்துள்ளனர்.
துவக்கப் பள்ளியில், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் மாண்டரின் மொழி கற்பிக்கப்படுகிறது. பள்ளி படிப்புக்கு பின், பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெறுகின்றனர். சுற்றுலா துறை பிரதானமாக இருப்பதால், 'டூரிசம்' பட்டப் படிப்பு படிக்க, நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார், வழிகாட்டி.
கோவில் வளாகத்தினுள், பெரிய பெரிய, கல் ஆமை சிற்பங்களை பார்த்ததும், எதற்கு ஆமை சிலைகளை இங்கு வைத்துள்ளனர் என்ற கேள்வி எழுந்தது. 'உங்கள் ஊரில் பசு எவ்வளவு புனிதமானதோ, அதுபோல் எங்களுக்கு, ஆமை புனித விலங்கு...' என்றார், வழிகாட்டி.
தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், நம்மூரில், தேர்வு எழுதுவதற்கு முன், கூத்தனுார் சரஸ்வதி கோவில் மற்றும் சென்னை அருகே உள்ள செட்டிபுண்ணியம் என்ற ஊரில் அமைந்துள்ள லட்சுமி ஹயகிரீவர் கோவிலுக்கு சென்று, தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்று வழிபடுவர் அல்லவா!
அதுபோல், இக்கோவிலுக்கு வந்து, ஆமை சிலைகளை வணங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர், மாணவர்கள்.
தேர்வில் வெற்றி பெற்று, பட்டம் பெற்ற உடனே, இங்கு வந்து தங்கள் நன்றியை தெரிவித்து, புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
சாலையில் பயணிக்கும்போது, ஏராளமான இருசக்கர வாகனங்களை பார்க்க முடிகிறது. அரசு பஸ் போக்குவரத்து, சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால், 80 சதவீத மக்கள், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். வியட்நாம் ஸ்பெஷல் கூம்பு வடிவ தொப்பிகளை அணிந்தபடி, அதை ஓட்டுவோர் பெரும்பாலும் பெண்கள்.
அதேபோல், சாலைகளில் விலை உயர்ந்த சொகுசு கார்களைப் பார்க்க முடிகிறது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் தயாராகும் சொகுசு கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் இங்கு ஏராளமாக காண முடிகிறது.
பெண்கள், வயது வித்தியாசமின்றி, சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
தெரு ஓர சாப்பாடு கடைகள் முதல், கடை உரிமையாளர்கள் வரை பெண்களே நடத்துகின்றனர். இதுகுறித்து, வழிகாட்டியிடம் கேட்டபோது, 'எங்கள் நாடு பல போர்களை கண்டது. வீட்டு ஆண்கள் போருக்கு சென்று விட்ட நிலையில், பெண்கள், வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இன்றும், பிழைப்புக்காக ஆண்கள் வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று விட, பெண்கள் குடும்ப பாரத்தை சுமக்கின்றனர்...' என்றார்.

ஹனாயில், பலரையும் கவரும் பாரம்பரிய தண்ணீர் பொம்மலாட்டம், 11ம் நுாற்றாண்டிலிருந்து வழி வழியாக நடத்தப்பட்டு வருகிறதாம்.
ஆதி நாளில், அறுவடை முடிந்து, மழை காலத்தில் நிலங்களில் தண்ணீர் நிறைந்திருக்கும்போது, ஊர் மக்களை மகிழ்விக்க, தண்ணீர் பொம்மலாட்டம் நடத்தியுள்ளனர்.
இப்போது, விளை நிலத்துக்கு பதிலாக, அரங்கத்தில், சிறு குளம் அமைத்து, நீர் நிரப்பி, கட்டணம் வசூலித்து இந்த கலைநிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
வியட்நாமுக்கு வரும் சுற்றுலா பயணியரை, தவறாமல் இங்கு அழைத்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்ததால், பொம் மலாட்ட இசைக் கலைஞர்கள் அவர்களது பிரத்யேக இசைக் கருவிகளை இசைத்து, பாட்டு பாடினர். இளம்பெண்கள் சிலரும், இழுத்து இழுத்து பாட்டு பாடி, பொம்மலாட்டத்துக்கு சுருதி சேர்த்தனர்.
முதல் நாள் இரவிலிருந்து சரியாக துாங்காததால், அரங்கத்திற்குள் அமர்ந்த எங்களுக்கு, இப்பாடல் தாலாட்டு பாடுவது போல் இருக்கவே, களைப்பில், துாக்கம் கண்களை சுழற்றியது. 'இவ்வளவு செலவு செய்து, வெளிநாட்டுக்கு சுற்றுலா அனுப்பினால், துாங்கிட்டு வந்தீர்களா...' என்று, கே.ஆர்., கேட்பாரே என்று கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தேன். கல்பனாவும், கலாவும், குறட்டை விடாத குறையாக துாங்கி வழிய, பானுமதி அரைத் துாக்கத்தில் கண்களை திறப்பதும், மூடுவதுமாக இருந்தார்.
திடீரென்று, நம்மூர் நரிக்குறவர்கள், 'சாமியோவ்...' என்று ராகம் இழுப்பது போல், பாடகர்கள் உச்சஸ்தாயில் கூக்குரலிட, திடுக்கிட்டு விழித்துக் கொண்டனர்.
மொத்தம், 12 அடி நீள, அகலம் கொண்ட சதுரமான குளத்தில், 4 அடிக்கு தண்ணீர் நிரப்பி, அதனுள் அழகழகாக வடிவமைக்கப்பட்ட வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட வாத்து, பீனிக்ஸ் பறவை, டிராகன், ஆமை மற்றும் மனித உருவ பொம்மைகளை ஆட்டுவித்து, நம்மை மகிழ்விக்கின்றனர்.
குளத்திற்குள், அழகிய வேலைப்பாடு கொண்ட திரையை தொங்கவிட்டு, அதற்கு பின், இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி, பொம்மலாட்ட கலைஞர்கள், 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம், பொம்மைகளை ஆட்டுவிக்கின்றனர். நவீன தொழில்நுட்பத்துடன், அருமையான, 'லைட்டிங்'கில் நிகழ்ச்சியை பிரமாதப்படுத்துகின்றனர். அவர்களின் திறமையால், பொம்மைகள் தண்ணீரில் மூழ்கி, எழுந்து, குதித்து, நீந்தி அட்டகாசமாய் ஆடுகின்றன.
இந்த பொம்மலாட்டத்தில், மொத்தம், 12 வகைகள் உள்ளன. நிலத்தை உழுது, பயிரிட்டு, அறுவடை செய்வதை ஒரு நடனம் விளக்கியது. அடுத்ததில், கோழிகளை, நரி விரட்டும் காட்சி, தொடர்ந்து தேவதைகளின் நடனம், அவர்களது புனித விலங்குகளான டிராகன், யூனிகார்ன், ஆமை மற்றும் பீனிக்ஸ் பறவை ஆகியவற்றின் ஆட்டம் என, ஒரு மணி நேரம் லயிக்க வைத்தது.
அவ்வளவும் முடிந்து திரைக்குப் பின், தண்ணீரில் நின்ற பொம்மலாட்ட கலைஞர்கள் வெளியில் வந்து, வணங்கியபோது, கரகோஷம் காதை பிளந்தது.
இதை பார்த்தபோது, நம்மூர் பொம்மலாட்டம் நினைவுக்கு வராமல் இல்லை. அழிந்து வரும் அக்கலைக்கு இவர்களை போல், நவீன தொழில்நுட்ப முலாம் பூசினால், எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்றும் தோன்றியது.

அடுத்த நாள், ஹனாயிலிருந்து, 170 கி.மீ., துாரத்தில் உள்ள, 'ஹலாங் பே' என்ற கடற்கரை சுற்றுலா தலத்துக்கு செல்ல, காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று கூறி, எங்களை ஓட்டலில் விட்டு, விடை பெற்றார் வழிகாட்டி.
அதீத களைப்பில் இருந்ததால், இரவு உணவை, மதியம் சாப்பிட்ட அதே, 'நமஸ்தே' ஓட்டலிலிருந்து வரவழைத்து, சாப்பிட்டு துாங்கச் சென்றோம்.
மறுநாள் -
— தொடரும்

வியட்நாம் மக்களுக்கு நுாடுல்ஸ், பிரதான உணவாக உள்ளது. அதை தவிர, காய்கறி மற்றும் பழங்களும் அதிகளவில் உட்கொள்கின்றனர். நாய் கறி, மிகவும், 'பேமஸ்' என்றார், வழிகாட்டி.
இங்குள்ள வீடுகள், அகலம் குறைவாகவும், நீளமாகவும் உள்ளன. கீழ் பகுதி முழுவதும் கடை மற்றும் பார்க்கிங்குக்காக விட்டுள்ளனர். வீட்டினுள் பல அறைகள் இருந்தாலும், நுழைவு வாயிலிலிருந்து ஒவ்வொரு அறைக்கும் செல்ல உள்ளுக்குள்ளேயே வழிகள் உள்ளன.
- ந. செல்வி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement