Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா —
என் வயது: 33, கணவர் வயது: 38. நான், டிப்ளமோ படித்துள்ளேன். கணவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். எங்களது நடுத்தர குடும்பம். கணவரின் சம்பளத்தில், சிக்கனமாக இருந்து, குழந்தைகளின் எதிர் காலத்துக்காக, சேமித்து வருகிறேன். வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம்.
கணவரது தம்பி, சுயதொழில் செய்து, லட்சம் லட்சமாக சம்பாதித்தார். அவருக்கும் திருமணமாகி விட்டது. சொந்த பங்களா கட்டினார்; புதுப்புது மாடல் கார்களை வாங்குவார்; ஆண்டுக்கு ஒருமுறை, வெளிநாடு, 'டூர்' சென்று வருவார்; ஆடம்பரமாக வாழ்ந்தார்.
திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட, நொடிந்து போனார். அவ்வப்போது என் கணவரிடம் வந்து, இரண்டாயிரம், ஐயாயிரம் என, வாங்கிச் செல்வார். மீண்டும் தொழில் செய்ய, என் கணவரிடம் பணம் கேட்டார். நான் எவ்வளவோ தடுத்தும், 'என் தம்பி கஷ்டப்படும்போது, பார்த்துக் கொண்டிருக்க முடியுமா... நீ இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம்...' என்று கூறி, வங்கி சேமிப்பு, என் நகைகள், குழந்தைகள் பேரில் இருந்த இன்சூரன்ஸ் மற்றும் ஆபிசில், பி.எப்., லோன் போட்டு அனைத்தையும் கொடுத்தார்.
இத்தனைக்கும், தம்பி, தன் பங்களா, நகைகள், அவரது பங்கு சந்தையில் உள்ள பணம் எதையும் எடுக்கவேயில்லை.
எந்த ஆதாரமும் இல்லாத, நாங்கள் மட்டும் எதற்கு கஷ்டப்பட்டு, அவருக்கு கொடுக்க வேண்டும். என்ன சொல்லி, கணவருக்கு புரிய வைப்பது என்று தெரியவில்லை. 'தொழிலில் லாபம் வந்தால், நிச்சயம் நம் பணத்தை திருப்பி தந்து விடுவான்...' என்கிறார், கணவர்.
எங்களது எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் என்று, நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —
கடன் வாங்குவது ஒரு சாகச கலை... யாரிடம் கடன் கேட்பது... எப்படி கடன் கேட்பது... எவ்வளவு தொகை கேட்பது... எவ்வளவு தொகை கடனாய் கேட்டாலும், சளைக்காமல் கொடுப்பது யார்... கொடுத்த கடனை, கறார், கண்டிப்பாய் வசூலிப்பானா, மாட்டானா கடன் கொடுப்பவன்... கடன் தேவைக்கு என்ன கூறுவது... உடல் மொழியை எப்படி அமைத்து, கடன் கேட்பது...
- இப்படி பல கேள்விகளுக்கு, தகுந்த பதில் தெரிந்தவனே, கடன் வாங்குவதில் மேதையாக இருப்பான். கடன் வாங்க, பொய்களையும், வாக்குறுதிகளையும், அடாவடி பேச்சுகளையும் அள்ளிவீச தெரிந்திருக்க வேண்டும்.
அண்ணனிடமிருந்து, 10 பைசா கூட வாங்க முடியாது என்கிற நிலை இருந்தால், உன் கணவரிடம் வந்து கடன் கேட்டிருக்க மாட்டார், கொழுந்தனார். அண்ணனின் பாசமும், இளகிய மனதும் கொழுந்தனாருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அண்ணனின் பலவீன புள்ளியை, 'சென்டிமென்ட்' வசனத்தால் தாக்கி, கடன் பெறுகிறார்.
உன் கொழுந்தனார், அவரது தொழிலில் நொடித்து போக என்ன காரணம் என ஆராய்ந்தாயா... குடிப் பழக்கம், சூதாட்டம், கூடா நட்பு மற்றும் நிர்வாக திறமையின்மை இவைகளில் ஏதாவது ஒன்று அல்லது அனைத்துமே காரணங்களாய் இருக்கலாம்.
உங்களுடைய வங்கி சேமிப்பு, நகை, இன்சூரன்ஸ், பி.எப்., லோன் எல்லாவற்றையும் தம்பிக்கு கொடுக்கும்போதே, நீ குறுக்கே புகுந்திருக்க வேண்டும். கொழுந்தனார், தன் சொத்துகளை அடமானம் வைத்து, கடன் பெற்றிருக்கலாமே என, நீ வாதிட்டிருக்க வேண்டும்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
'பண உதவிகள், இரு வழி பாதையாக இருக்க வேண்டும். நமக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர் காலத்திற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஆடம்பர தம்பிக்கு தரலாமா? தம்பிக்கு, 1,000 - 2,000ம் கடன் கொடுங்கள்; திருப்பி தராவிட்டாலும் பரவாயில்லை. இனி, உதவி என்று கேட்டால், நிர்தாட்சண்யமாக மறுத்திடுங்கள்...' என, உன் கணவரை மூளையை சலவை செய்.
நீயும், உன் கணவரும், செயற்கையாய் மிகப் பெரிய பணத் தேவை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குங்கள். அழுது அரற்றி, கொழுந்தனார் வீட்டுக்கு ஓடி, கொடுத்த பணத்தை திருப்பி கேளுங்கள்... கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருப்பி கொடுத்தாலும் பரவாயில்லை, என்று புலம்புங்கள்.
கடனை திருப்பி தரும் மனம் இல்லாதவருக்கு, கடனை கொடுத்து, நாம் ஏன் அல்லலுற வேண்டும்!
ஒரு பிச்சைக்காரன் இரண்டு வீடுகளில் பிச்சை எடுப்பான். ஒரு வீட்டில் எப்போதுமே பிச்சை போடுவர். இன்னொரு வீட்டில், பிச்சை போட மாட்டார்கள். ஒரு நாள், எப்போதும் பிச்சை போடும் வீட்டிலும், எதுவும் இல்லை என, கூறி விடுகின்றனர்.
அதற்கு அந்த பிச்சைக்காரன், 'எப்போதுமே பிச்சை போடும் மூதேவி, இன்னைக்கு எதுவும் போடல, என்னைக்குமே பிச்சை போடாத ஸ்ரீதேவி மகராசி, இன்னைக்கும் பிச்சை போடல...' என்றானாம்.
தகுதி இல்லாத நபருக்கு, முதல் தடவையே கடன் தர மறுத்து விட்டால், ஒரே வசவுடன் தப்பிக்கலாம்.
இப்போது, காலம் கடந்து விட்டது. புலம்பி பிரயோஜனம் இல்லை.
நைச்சியமாக பேசி, கொடுத்த கடனை வசூலிக்க வேண்டும்.
பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, கணவரிடமிருந்து, வலுக்கட்டாயமாக நீயே பறித்துக் கொள்.
கொழுந்தனாரிடமிருந்து, சாம, தான, பேத, தண்ட முறைகளில், கொடுத்த பணத்தை வசூல் பண்ணு. பணத்தை வசூலித்த பின், கொழுந்தனார், உங்களுடனான உறவை முறித்துக் கொண்டாலும், நீயும், உன் கணவரும் முறித்துக் கொள்ளாதீர்.
பிறர் உங்களை, நக்கி தின்னும் தேனாகவும் இருக்க வேண்டாம்; கசந்து துப்பும் வேம்பாகவும் இருக்காதீர்... இரண்டுக்கும் நடுவே மத்திம நிலையை தேர்ந்தெடுங்கள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement