Advertisement

இரண்டு மார்பிலும் மனைவியை சுமப்பவர்!

மனைவியிடம் அன்பு காட்டும் கணவன், தன் மனைவியிடம், 'உன்னை, என் நெஞ்சில் குடி வைத்திருக்கிறேன்...' என்பான்.
இந்த சொல் வழக்கு, எப்படி பிறந்தது தெரியுமா? மகாலட்சுமியை நெஞ்சில் சுமப்பவர் பெருமாள். அவரது வலது மார்பில் அவள் வாசம் செய்வதாக ஐதீகம்.
ஆனால், தன் மார்பின் இரு பக்கமும், பெருமாள் அவளைத் தாங்கியிருக்கும் கோவில், செங்கல்பட்டு அருகிலுள்ள திருமலைவையாவூரில் இருக்கிறது. இங்குள்ள பிரசன்ன வெங்கேடசப் பெருமாள், தன் மனைவியை இரண்டு மார்பிலும் தாங்கியிருக்கிறார்.
'பிரசன்னம்' என்றால், மனதுக்குள் தோன்றுதல் அல்லது எதிர்காலம் பற்றி சொல்லுதல் என்று அர்த்தம்.
கடவுள் மீது அன்பு கொண்டவர்கள், அவரை ஊனக் கண்ணால் தரிசிக்க முடியாவிட்டாலும் மனக் கண்ணால் தரிசித்து விடுவர். திருமலை நாயக்கர், தன் மனக் கண்ணால் தரிசித்த பிரசன்ன வெங்கடேச பெருமாளை, மதுரை தல்லாகுளத்தில் ஸ்தாபித்தார்.
அதுபோல், திருமலைவையாவூரில், தொண்டைமான் என்ற மன்னர், தன் நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டி, திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டினார்.
அவர், இங்குள்ள ஒரு மலைக்கு தேரில் வந்து, கையில் செங்கோலுடன், மன்னரின் மனக்கண் முன் காட்சி கொடுத்தார். எனவே, 'பிரசன்ன வெங்கடேசர்' என்ற திருநாமம் பெற்றார்.
தொண்டைமான் இந்த மலை மீது சுவாமிக்கு கோவில் கட்டினார். பக்தர்களின் எதிர்காலத்தை நல்லபடியாக செய்பவர் என்ற பொருளிலும் பிரசன்ன வெங்கடேசர் என்ற பெயர் வந்தது.
திருப்பதி செல்வோர், அங்குள்ள வராக சுவாமியை வணங்கிய பின், வெங்கடாஜலபதியை தரிசிப்பர். அதே விதிப்படி, இங்கும், லட்சுமி - வராகர் சன்னிதி அமைக்கப் பட்டுள்ளது.
இவரது சன்னிதி முன் கொடி மரம் இருக்கிறது. வலது காலை ஆதிசேஷனின் வால் மீதும், இடது காலை தலை மீதும் வைத்து, மடியில் லட்சுமியை அமர்த்தி, அவளை அணைத்த கோலத்தில் இருக்கிறார். இவருக்கே முதல் தீபாராதனை நடக்கிறது.
பிரசன்ன வெங்கடேசருக்கு விழா நடக்கும்போது, இவரது சன்னிதியில் தான் கொடி ஏற்றப்படும்.
பிரசன்ன வெங்கடேசர் செங்கோலுடன், ராஜகோலத்தில் இருக்கிறார். இவரது இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகளும், திருவாசியில் ஆதிசேஷனும் இருக்கின்றனர்.
இவருக்கு, அஷ்டலட்சுமி மாலை, சகஸ்ரநாம மாலை, தசாவதார ஒட்டியாணம் அணிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை லட்சுமிகள் உள்ள சன்னிதி என்பதால், செல்வ வளத்துக்காகவும், காலம் முழுவதும் தம்பதியர் பிரியாமல் இருக்கவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் இவரை வேண்டுகின்றனர்.
வியாழக்கிழமைகளில் அலங்கார மில்லாமல், 'நேத்திர தரிசனம்' (அருட்பார்வை) தருகிறார்.
இவரது சன்னிதியைக் காக்கும் ஜெயன், விஜயன் என்ற காவலர்களில் ஒருவரது காதில், சிம்ம குண்டலம், மற்றொருவர் காதில், கஜ (யானை) குண்டலம் இருப்பது வித்தியாசமான அம்சம்.
அலர்மேலுமங்கை தாயாருக்கு தனி சன்னிதி உள்ளது.
இங்கு, ஒவ்வொரு மாத திருவோண நட்சத்திரத்திலும் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. அன்று காலையில் உற்சவர் சீனிவாசர், யாக மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு யாகம், திருமஞ்சனம், திருக்கல்யாண வைபவம் நடக்கும்.
பெருமாள் சன்னிதி அகண்ட தீபத்தில் இருந்து நெய் விளக்கேற்றி அதை சுவாமி பாதத்தில் வைப்பர். இந்த தீப தரிசனம் மிகவும் விசேஷமானது.
திருமண, புத்திர தோஷம் உள்ளோர் இந்த வழிபாட்டை செய்வர்.
புரட்டாசி திருவோணத்தன்று, ஏழுமலைகள் போல அன்ன நைவேத்யம், ஏழு நெய் தீபம், ஏழு வகை பலகாரம் மற்றும் காய்கறிகள் படைத்து பூஜை செய்வர்.
இங்கு சீனிவாசர் மற்றும் கள்ளபிரான் என இரண்டு உற்சவர்கள் இருக்கின்றனர். மலை அடிவாரத்தில் வீர ஆஞ்சநேயர் இருக்கிறார்.
இவரது சன்னிதியில், தங்கள் கோரிக்கையை எழுதி, மட்டைத் தேங்காயுடன் மஞ்சள் துணியில் கட்டி, வேண்டிக் கொள்கின்றனர். அருகில் லட்சுமிகணபதி சன்னிதி இருக்கிறது.
செங்கல்பட்டு - திருச்சி சாலையில், 20 கி.மீ., சென்றால் படாளம் கூட்டு ரோடு வரும். இங்கிருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில், 4 கி.மீ., துாரத்தில், திருமலைவையாவூர் இருக்கிறது.

தி.செல்லப்பா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement