Advertisement

அறிவுக்கான அகலப்பாதை!

உமா மிஸ் வீட்டுக்கு எல்லோரும் போயிருந்தோம். வழக்கம்போல், நிறைய நிறைய பேச்சு. ஒரு கட்டத்தில், அவர் ஒரு விளையாட்டை ஆரம்பித்து வைத்தார்.
“நீங்கெல்லாம் காதுகளை எவ்வளவு சரியா பயன்படுத்தறீங்கன்னு பார்க்கப் போறேன்.” என்று ஆரம்பித்தார். “காதுகளையா மிஸ்?”
“ஆமாம். காதுகள் தான். இத்தனை நாள் அதைப் பற்றி எத்தனை பேர் யோசிச்சிருக்கீங்க?”
காதுகளைப் பற்றி நான் என்றுமே யோசித்ததில்லை. முடிவெட்டிக்கொள்ளும்போது, இரு காதுகளுக்கும் மேல் இருக்கும் முடியை வெட்டி, சீர்படுத்துவார் முடிதிருத்துநர். முகம் ஞாபகம் இருக்கும் அளவுக்குக் கூட காதுகள் ஞாபகம் வரவில்லை. உமா மிஸ்ஸுக்குத் தெரியாமல், வலது காதை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.
“யோசிச்சதில்லை மிஸ்.”
“காதுகளைப் பத்தி மட்டுமில்ல, காதுல விழுற செய்திகளைப் பத்தியும் நீங்க யோசிச்சிருக்க மாட்டீங்க. பரவாயில்லை. நான் இப்போ ஒருசில விஷயங்கள் சொல்லப் போறேன். அதைக் கவனமா கேட்டு நீங்க சொல்லணும், எழுதணும். ஓகேவா?”
“சரி மிஸ்.”
“குட். முதல்ல ஒரு பக்கத்தைப் படிக்கிறேன். கவனமா கேளுங்க.”
பக்கத்தில் கிடந்த புத்தகத்தில் இருந்து ஒரு முழுப் பக்கத்தையும் வாசிக்க ஆரம்பித்தார். நிறுத்தி, நிதானமாக. ஏற்ற இறக்கங்களோடு. அந்தப் பக்கத்தில் ஓர் உரையாடல் வந்தது. ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டார்கள். அதற்கு இருவேறு குரல்களை மாற்றி மாற்றி வாசித்தார். இவ்வளவு அழகாக வாசிக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது. பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். கண்முன்னே ஒரு நாடகம் நடந்ததுபோல இருந்தது.
“கேட்டீங்களா?” நானும் இன்னும் சிலரும் தலையாட்டினோம். என்ன கேள்வி வரப் போகிறது என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
“நான் படிச்சதுல உங்களுக்கு ஞாபகம் இருக்கும் வார்த்தைகளைச் சொல்லுங்க.”
என் ஞாபகத்தில் துழாவத் தொடங்கினேன். 'ஒவ்வாமை', 'புளகாங்கிதம்', 'வாய்க்கரிசி' என்று நினைவுக்கு வந்த சொற்களைச் சொல்லத் தொடங்கினேன். ஓவியாவுக்கு ஞாபகம் வந்தததைச் சொன்னாள். மற்றவர்களும் இதேபோல் இரண்டு அல்லது மூன்று சொற்களைச் சொன்னார்கள்.
“குட், நான் படிச்சதுல எத்தனை முறை 'திருத்தம்'ங்கற சொல் வந்தது?”
திருத்தமா? அந்தச் சொல் வந்ததா என்ன?
“எத்தனை முறை பெண் பாத்திரம் பேசிச்சு?”
சட்டென்று கணக்குப் போடத் தொடங்கினேன். நான்கு முறை? ஐந்து முறையா?
“எந்த ஊர்லேருந்து வந்தேன்னு அந்த ஹீரோ சொன்னார்?”
“நாக்பூர்.”
உமா மிஸ், புன்னகையைப் பரிசளித்தார். “ இந்தக் கதை எந்த ஊர்ல நடக்குது?”
திடீர் மெளனம். அதன்பிறகு, உமா மிஸ் கேட்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் எங்களுக்குப் பதிலே தெரியவில்லை.
“ஏன் ஞாபகம் இல்லையா? மறந்துபோயிட்டீங்களா?”
“நீங்க படிச்சபோது, நல்லா இருந்துச்சு மிஸ். இப்போ ஞாபகம் வரமாட்டேங்குது.”
“அப்புறம் எப்படி கிளாஸ்ல நடத்துறதையெல்லாம் ஞாபகம் வெச்சுப்பீங்க?”
பதில் தெரியவில்லை. ஒவ்வொருமுறையும் தேர்வு வரும்போது, திண்டாடுவதற்குக் காரணங்களில் ஒன்று, ஞாபகமறதி. வகுப்பில் சொன்ன பல விஷயங்கள், மறந்துபோய்விடுகின்றன.
“நாம முன்னாடியே ஞாபக மறதி பத்தி பேசியிருக்கோம். ஆனால், இது இன்னும் முக்கியமான விஷயம். கேட்டல்திறன்னு சொல்றோமே, அதுதான் இது. நம்மோட காதுகளை நாம சரியாகவே பயன்படுத்தலன்னு புரியவைக்கத்தான் டெஸ்ட் வெச்சேன்.”
“கேட்டல்னா லிசனிங்தானே மிஸ். நாங்க தான் நல்லா லிசன் பண்றோமே!”
“இல்ல. நீங்கள் சரியா லிசன் பண்ணல. உங்க காதுல ஓசைகள் வந்து விழுது. அவ்வளவுதான். அது உங்க மூளையைப் போய் எட்டவே எட்டல. கேட்டல்ங்கறது அங்கே நடக்கல.” என்றவர், கேட்டல் திறன் பற்றி விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்.
ஒருவர் பேசினால், அது அடுத்தவர் காதுக்கு வரும். ஆங்கிலத்தில் அதை 'ஹியர்' என்று சொல்வார்கள். அதாவது அதை நாம் கவனிக்க மாட்டோம். காற்றோடு காற்றாக நகரும் ஒலித்துணுக்கு அது. இதற்கு அடுத்த நிலை, 'கவனித்தல்'. அதாவது, சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கவனிப்பது. அதற்கு அடுத்துதான் 'புரிதல்.' சொல்லப்பட்ட சொற்களைப் புரிந்துகொண்டால்தான் 'பதில்சொல்ல' முடியும். அதற்குப் பிறகுதான் அதை 'ஞாபகம்' வைத்துக்கொள்ளுதல்.
நான்குவகையான கேட்டல்முறைகள் உள்ளன. ஒன்று, தகவல் சார்ந்த கேட்டல். இரண்டு, கவனித்துக் கேட்டல். மூன்று, மகிழ்ச்சிக்காகக் கேட்பது. நான்கு, கனிவோடு கேட்பது. அதேபோல், நான்கு விதமான கேட்பவர்கள் இருக்கிறார்கள். 'விலகிய' நிலையில் கேட்பவர்கள், 'ஏனோதானோ'வெனக் கேட்பவர்கள், 'ஈடுபாட்டுடன்' கேட்பவர்கள், 'கூர்ந்து' கேட்பவர்கள்.
“கூர்ந்து கேட்பதைத்தான் நீங்களெல்லோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பள்ளிக்கூடத்துல மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கூர்ந்து கேட்கவேண்டும். புத்தியையும் மனத்தையும் தெளிவாக வைத்துக்கொண்டு கேட்கவேண்டும். முன்யோசனைகள் இருக்கக்கூடாது. குழப்பங்களோ, பதற்றமோ கூடாது. தெளிந்த நீரோடை போல் மனசு இருக்கவேண்டும்.
வகுப்புல ஆசிரியர் பேசும்போது, ஒவ்வொரு சொல்லையும் கவனிக்கவேண்டும். அப்பத்தான் அவர் சொல்வதைப் புத்தியில் வாங்கிக்கொண்டு அலசி ஆராய முடியும். தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். ஒற்றுமை வேற்றுமைகளை இனங்காண முடியும். புரிந்துகொண்டதற்கு அத்தாட்சியாக தலை அசைக்க வேண்டும். கேட்டல் புரிதலாகவும் பின்னர் ஞாபகமாகவும் ஆவதற்கு, வகுப்பிலேயே கேள்விகள் கேட்கவேண்டும். எல்லாவற்றுக்கும் ஆரம்ப படிநிலை, கேட்டல்தான். மனித உடலுக்கு சிரசே பிரதானம்னு சொல்வாங்க. கற்றலுக்கு அடிப்படை காதுகள்தான். 'கற்றலில் கேட்டல் நன்று' சும்மாவா சொன்னாங்க பெரியோர்கள்!” என்றார் உமா மிஸ்.
நான் காதுகளை மீண்டும் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். 'தேமே'யென்று சாதுவாக இருந்தது அறிவுக்கான அகலப்பாதை!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement