Advertisement

வெங்கியைக் கேளுங்க

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

எறும்பு வாழ்நாள் முழுவதும் தூங்குவதே இல்லையாமே! இது போன்று தூங்காமல் இருக்கும் வேறு உயிரினங்கள் உண்டா?
எம்.முகம்மது இஸ்மாயில், 11ஆம் வகுப்பு, பண்ருட்டி.

தூங்காமல் இருக்கும் உயிரினங்கள் என்று எவையும் இல்லை. இரவு, பகல் என, எந்த நேரத்திலும் சுறுசுறுப்பாகத் திரியும் எறும்புகளைப் பார்த்தால் அவை ஓய்வு, தூக்கம் ஏதுமில்லாமல் இயங்குகின்றன என்ற எண்ணம் ஏற்படும். உண்மையில், எறும்புகளும் தூங்குகின்றன. கோட்டல் (Cottell), ஜேம்ஸ் (James) எனும் இரு விஞ்ஞானிகள், 1983இல் ஓர் ஆய்வு நடத்தினார்கள். அதில், ஒவ்வொரு 12 மணிநேரத்திலும், எட்டு நிமிட நேரம் எறும்புகள் தமது இயக்கத்தைக் குறைத்துக்கொண்டு தூங்குகின்றன எனக் கண்டுபிடித்தனர்.
தூக்கத்தின்போது நமக்கு என்ன ஏற்படுமோ அதுபோல எறும்பின் மூளை இயக்கமும் சீராகும். அனைத்து விலங்குகளும் ஏதோ ஒருவகையில் தூக்கம் எனும் உடலியக்கச் செயலைக் கொண்டுள்ளன என, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இந்தியா முழுக்க கடிகாரத்தில் ஒரே நேர அமைப்பு இருக்கிறது. எதை வைத்து இது சரியாகக் கணிக்கப்பட்டது?
ம.மகேஷ்வரன், செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.

பூமி ஒரு முழு சுழற்சிக்கு எடுத்துக்கொள்ளும் நேரமே ஒருநாள். முன்பு சூரிய நிழல்களை வைத்தே நேரம் வகுக்கப்பட்டது. நாகரிகங்கள் வளர வளர, சூரிய கடிகாரங்கள், மணல் கடிகாரங்கள் ஆகியவற்றை வைத்து நேரம் கணக்கிடப்பட்டது.
பிரிட்டிஷ் இந்தியா காலத்தில், மேற்கில் பம்பாய் நேரமும் கிழக்கில் கோல்கட்டா நேரமும் பயன்பட்டு வந்தன. இரயில்வே துறை விரிவடைந்தபோது, இரயில் எத்தனை மணிக்கு வரும், புறப்படும் என கூற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது நேரக் குழப்பத்தைத் தவிர்க்க, பிரிட்டிஷ் அரசாங்கம் பம்பாய், கோல்கட்டா நேரங்களுக்கு நடுவில் இருப்பதுபோல் ஒரு நேரத்தை அமைத்தது. அதுதான் மெட்ராஸ் நேரம்.
அதன் பிறகே, 1947இல் இந்திய சீர் நேரம் (IST - India Standard Time) அறிமுகமானது. இது சற்று ஏறக்குறைய இந்தியாவின் நடுவில் செல்லும் 82.5' E தீர்க்கரேகை எனும் நிலநிரைக்கோட்டின் (Longitude - லாங்கிடியூட்) சூரிய கடிகார உள்ளூர் நேரத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டது. இன்றுவரை ஐ.எஸ்.டி. முறைதான் இந்தியா முழுவதும் பின்பற்றப்படுகிறது.


வானத்தைத் தொட முடியுமா? அது எவ்வாறு இருக்கும்?
கு.சௌ.தேஜ ஸ்ரீநிதி, 4ஆம் வகுப்பு, ஸ்ரீ குப்பாண்டக் கவுண்டர் ஆரம்பப் பள்ளி, பொள்ளாச்சி.

நம் தலைக்கு மேல் இருப்பது எல்லாம் வானம் எனில், எழுந்து நின்று கையை உயர்த்தினாலேயே வானத்தைத் தொட முடியுமே! அல்லது மேகங்கள் உலாவும் பகுதிதான் வானம் என்றால், அதற்கு மேல் எப்படி ஆகாய விமானங்கள் பறக்கின்றன? இதுவும் இல்லையெனில், எதுதான் வானம்? சுமார் நூறு கிலோமீட்டர் பகுதி இருக்கிற, பூமியின் வளிமண்டலம்தான் அது.
பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட தொலைவுக்கு மேலே உள்ள வளிமண்டலம், விண்வெளி ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் வானம் அல்லது வான்கோளம். பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள வான்கோளத்துக்கு விண்மீன் தொகுதிகள் என்று பெயர்.
வானம் என்பது காற்று நிரம்பிய பகுதி. இதில் மேகங்கள், நீர்ப்பசை, பெரும் சூறாவளி வேகத்தில் வீசும் காற்று முதலியவை இருக்கும்.


மனித மூளை 100 சதவீதம் செயற்பட்டால் என்ன நடக்கும்?
ஆர்.நரேஷ், 12ஆம் வகுப்பு, கதிரவன் மெட்ரிக் பள்ளி, திருப்பூர்
.
உண்மையில், நமது உடலில் 100 சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளைதான். ருசி, வாசனை, சிந்தித்தல், பேசுதல் என, நம் மூளை எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. மூளை நோய் அல்லது விபத்தின்போது ஏற்படும் காயங்களால் மூளையின் சிறு பகுதி செயற்படாமல் அல்லது சிதைந்து போனால், கை, கால் பாதிப்பு அல்லது பக்கவாதம் போன்ற நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. ஆயினும் பேச்சுவழக்கில், '100 சதவீதம் மூளை வேலை செய்கிறதா?' என்று யாராவது கேட்டால், அது பகுத்தறிவுடன் நாம் சிந்தனை செய்கிறோமா என்ற கேள்வியையே சுட்டுகிறது.
மேலே சொன்ன சிந்தனைப் பார்வையுடன் நோக்கினால், மனித மூளை 100 சதவீதம் செயற்படும்போது, இதுதான் நடக்கும்... ஆண், பெண் பேதம் அகற்றி, மதம், மொழி, இனம், நாடு என்ற வேற்றுமை கடந்து, வன்முறையைக் கைவிட்டு, சூழலை அழிக்காமல், மனிதத்துவம் போற்றும் முழு மனிதனாக மாறுவோம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement