Advertisement

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: அள்ளி தரும் அக் ஷய பாத்திரம்!

Share

ஆரோக்கியம் என்பது, வசதி உள்ளவர்களுக்கு மட்டும் என்ற நிலை கண்டிப்பாக மாற வேண்டும் என்று நினைப்பேன். அதனாலேயே பொருளாதார வசதி குறைந்த சூழலில் வளரும் குழந்தைகள் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தேன்.
இதில் நான் தெரிந்த கொண்டது, இந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்தது.
காரணம், அவர்களுக்கு உணவு இருக்கிறது; ஆனால், ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைப்பதில்லை. உங்களுக்கும், எனக்கும் சளித் தொந்தரவு இருந்தால், குறைந்தது மூன்று நாட்கள் இருக்கும்.
அதிகபட்சம் ஒரு வாரம் இருக்கும். ஆனால், இவர்களுக்கு ஆறு மாதங்கள், ஓர் ஆண்டுக்கு மேலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், வைட்டமின் - சி குறைபாடு தான்.
வயதுக்கு ஏற்ற வளர்ச்சியுடன் குழந்தைகள் இல்லை; தோல், பல் வளர்ச்சியிலும் நிறைய பிரச்னைகளை பார்க்க முடிந்தது; இருமும் போது, நீண்ட நாட்களாக சளி நெஞ்சிலேயே கட்டி இருப்பதை உணர முடிந்தது.
பொருளாதார நிலையில் பின்தங்கிய, கிராமம், நகரம் என்று வேறுபாடு இல்லாமல், எல்லாக் குழந்தைகளுக்கும் சளி, காய்ச்சல் தொடர்ந்து இருக்கிறது.
பெரும்பாலும் அரசு பள்ளிகளில் படிக்கும் இவர்களுக்கு, அவசியமான ஊட்டச்சத்து மிக்க உணவை எப்படி தரலாம் என, தமிழக சுகாதாரத் துறை செயலர், டாக்டர் ராதாகிருஷ்ணனுடன் ஆலோசித்த நேரத்தில், 'அக் ஷய பாத்ரா' என்னை தொடர்பு கொண்டு, அவர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பரத் துாதராக இருக்க முடியுமா என்று கேட்டனர்.
எந்த லாப நோக்கமும் இல்லாமல், குழந்தைகளுக்கு மதிய உணவு தரும் அமைப்பு இது. என் ஆய்வு மொத்தமும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியது மட்டுமே.
அவர்கள் கேட்டவுடன் கொஞ்சமும் யோசிக்கவில்லை. காரணம், உலகப் புகழ் பெற்ற ஒபாமா போன்ற தலைவர்கள் பாராட்டிய, மதிய உணவுத் திட்டம் வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இது; நம் தமிழக குழந்தைகளுக்கு இதை முறையாக எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்தேன்.
இந்த குழந்தைகளுக்கு இருக்கும் இன்னொரு பிரச்னை, காலை உணவு சாப்பிடாததால் ஏற்படும், 'கிளாஸ் ரூம் ஹங்கர்!' காலை உணவு இல்லாமல், பசியோடு வகுப்பிற்கு வரும் குழந்தைக்கு கவனச் சிதறல் ஏற்படும்; அறிவுத் திறன் குறையும்.
கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்துப் பேசியதில், காலை உணவாக பால் தரும் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கலை கூறினார். பால், ஒரு நாளில் கெட்டு விடும் பொருள் என்பதால், கொள்முதல் செய்து, பதப்படுத்தி குழந்தைகளுக்கு தருவதில் சிரமம் இருப்பதாக சொன்னார்.
வாழைப்பழம், சத்து மாவு தருகின்றனர்; இதில் பொட்டாஷியம், புரதம், இரும்புச் சத்து உள்ளது. ஆனால், பாலுக்கு நிகர் எதுவும் இல்லை; வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு, பால் மிகவும் அவசியம்.
தினமும் பால் தர வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி, 'டெட்ரா பேக்'கில் அடைத்த, பல சுவைகளில் உள்ள பாலை தரலாம் என்று நான் சொன்ன யோசனையை, அமைச்சர் ஏற்று, அதற்கான வரைவு அறிக்கையை கேட்டுள்ளார்.
சமீபத்தில், சிறுதானிய உணவு தரும் திட்டம் ஒன்றை, 'அக் ஷய பாத்ரா' ஆரம்பித்து, முதலில் கேழ்வரகில் தயாரித்த உணவை தருவதாக உள்ளனர்; இதில் கால்ஷியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது; உடல் எடையும், ஆரோக்கியமாக அதிகரிக்கும். பாலுடன், கேழ்வரகு உணவையும் காலையில் தரும் திட்டம் உள்ளது.
படிப்படியாக, தமிழகம் முழுவதும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்தான, முழுமையான காலை உணவு தரும் திட்டத்தை, 'அக் ஷய பாத்ரா' உதவியுடன் செயல்படுத்த உள்ளோம்.
இயற்கையிலேயே, நோய் எதிர்ப்பு சக்தியுடன் தான் பிறக்கிறோம். அந்த சக்தியை மேம்படுத்திக் கொள்ள சாப்பிடும் உணவு, ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அன்றாடம் சாப்பிடும் உணவை திட்டமிட்டு, முறையாக சாப்பிட்டாலே, ஊட்டச்சத்து குறைபாடு வராது.

திவ்யா சத்யராஜ், நியூட்ரிஷனிஸ்ட், சென்னை.
divyasatyaraj@yahoo.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement