Advertisement

ஒரு ஊர்ல ஒரு பாட்டி

'பாண்டி நாட்டுலேயே அஞ்சு தங்க மெடல் வாங்கின வில்லுப்பாட்டுக்காரி நான்தான்! அந்தகாலத்துல, ஆம்பளை பாட்டுக்காரங்க கூட மாட்டு வண்டியில தான் போவாங்க; ஆனா நான், கார்ல போவேனாக்கும்!' - தமிழகத்தின் மூத்த வில்லுப்பாட்டுக்காரரான 82 வயது பூங்கனி பாட்டி, பற்களைத் தான் இழந்திருக்கிறாரே தவிர, உளிபட்ட கல்லாய் மின்னுகின்றன அவரது சொற்கள்.

'பத்து வயசுல வில்லுப்பாட்டு பாட வந்தேன். 16 வயசுல கல்யாணம். நானும் அவரும் சேர்ந்து தான் கச்சேரிகளுக்கு போவோம். அவர் குடம் போடுவார்; நான் வில்லு பூட்டுவேன். விடியற்காலை பாட ஆரம்பிச்சா, அந்தி சாயுற வரைக்கும் பாடுவோம். ம்ஹும்... அந்த காலமெல்லாம் இனி வரவே வராதுத்தா!' - மனமுருகும் பாட்டிக்கு கண் பார்வை கொஞ்சம் மங்கல்! கணவர் தங்கபாண்டி முப்பது ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, உறவென்று யாருமின்றி, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

பாட்டிக்கு என்ன ஆசை?
ஒரே ஒரு ஆசை தான். அதுவும், சின்ன வயசுலேயே நிறைவேறிடுச்சு. 'எம்.ஜி.ஆர்., தங்க நிறத்துல இருப்பார்'னு கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க தோழிகளோட சென்னைக்கு போனேன். பக்கத்துல இருந்து அவரைப் பார்த்தேன். விபரம் கேட்டவர், 'இதுக்காக இவ்வளவு துாரம் வரலாமா; பாதுகாப்பை பத்தி யோசிக்க வேண்டாமா?'ன்னு கேட்டு, எங்களை பாதுகாப்பா கொண்டு வந்து ஊருல விட்டுட்டுப் போனார். குணத்துலேயும் அவர் சொக்கத் தங்கம் தான்!

பாடுறதுக்கு வாய்ப்பு வருதா பாட்டி?
போன வருஷம் சென்னைக்கு வந்து ஒரு காலேஜுல பாடுனேன்... அதான் கடைசி! மாசம் 1,000 ரூபாய் அரசு உதவித்தொகை வருது. அதுல தான் மூச்சு விட்டுட்டு இருக்குறேன். நான் பார்க்காத பணமா, நான் திங்காத பண்டமா... உழைக்கிற காலத்துல அத்தனை செழிப்பா இருந்தோம். சுயநலத்தோட எதையும் சேர்த்து வைக்கலை. எங்களுக்குன்னு குழந்தை குட்டி இல்லாததால எல்லாருக்கும் கொடுத்து வாழ்ந்தோம். இன்னைக்கு, இந்த களிமண் சுவத்துக்குள்ளே தனியா கிடக்குறேன். ஆனாலும், அவரு நினைப்போடவே தான் இருக்குறேன்; இப்படியே தான் கண்ணையும் மூடுவேன்.

மரித்த பின்னும் வாழும் வகையில், பெரும் புண்ணியம் செய்திருக்கிறார் தங்கபாண்டி தாத்தா!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement