Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 30, கணவர் வயது, 34. கணவர், வங்கியில் பணிபுரிகிறார்; நான் வேலைக்கு செல்லவில்லை. கணவருடன் கூட பிறந்தவர், ஒரே தங்கை; நல்ல அழகி. நகைச்சுவையாக பேசுவதில் கெட்டிக்காரி. ஆனால், அவள் ஒரு ஆடம்பர பிரியை. தினம் ஒரு டிரஸ், ஹேன்ட் பேக், செருப்பு என்று போட விரும்புவாள். எனக்கு உட்பட, குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே, அவள் செல்ல பிள்ளை தான்.
நான் திருமணமாகி, புகுந்த வீட்டுக்கு வந்த போது, அவள் கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்தாள். அதன்பின், வெளியூர் ஒன்றில் அவளுக்கு வரன் பார்த்து, திருமணம் செய்து வைத்தோம். நாத்தனார் கணவர், சிறிய பிசினஸ் செய்து வந்தார். திடீரென, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நாங்கள் தான், அவரது கடனை அடைத்து, வேறு வேலைக்கு செல்ல அறிவுறுத்தினோம். தற்சமயம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இது, நாத்தனாருக்கு பெரிய இடியாகி விட்டது.
நினைத்தால் டிரஸ் வாங்குவது, நகை வாங்குவது, ஓட்டலுக்கு செல்வது என்று இருந்தவருக்கு, தற்போது அனைத்தையும் மறந்து விட வேண்டும் என்ற நிலையில், மிகவும் மனம் நொந்து போனார்.
தன் ஆடம்பர செலவுக்கு, வேறொரு விபரீதமான வழியை கண்டுபிடித்துள்ளார், நாத்தனார். தன் வீட்டுக்கு அருகில் உள்ள அக்கம், பக்கத்து வீட்டு பெண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். இவரது அழகும், பேச்சுத் திறமையும் அவர்களை, இவள் பக்கம் இழுத்தது.
யாருக்காவது உதவி தேவைப்பட்டால், அவர்கள் கேட்காமலே செய்து கொடுத்து, நல்ல பெயரை வாங்கினாள்.
ஒரு கட்டத்தில், அப்பெண்களின் கணவன்மார்களிடம் பேச துவங்கி, அவர்களை தன் வசப்படுத்தி விட்டாள். அதன் விளைவு, பழையபடி நாளொரு டிரஸ், ஹேன்ட் பேக், செருப்பு என, தாராளமாக பணம் புழங்கியது அவளுக்கு.
இவளால் பாதிக்கப்பட்ட பெண்களில், என் தோழியும் ஒருத்தி; அவள் சொல்லித்தான் எனக்கு இதெல்லாம் தெரியும்.
அவளை கூப்பிட்டு கண்டித்தால், தப்பாக எடுத்துக் கொண்டு, என் மீது பழி சுமத்துவாளோ என்று பயமாக இருக்கிறது. என் கணவரிடமோ, மாமனார் - மாமியாரிடமோ சொல்லலாம் என்றால், அவள் மீது அதிக பாசம் வைத்துள்ளதால், நம்ப மாட்டார்கள் என்றும் தோன்றுகிறது. இருதலை எறும்பாய் தத்தளிக்கிறேன்.
இது எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாதவராக, விட்டதை பிடிக்க வேண்டும் என்ற வெறியில், மும்முரமாக வேலை செய்து வருகிறார், நாத்தனாரின் கணவர்.
நாத்தனாரை திருத்த ஒரு வழி சொல்லுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —
வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற குறிக்கோளுடன் வாழும் நன்னெறி பெண்கள், 95 சதவீதம். வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற சுயநல எண்ணத்துடன் வாழும் பேராசை பெண்கள், 5 சதவீதம். இதில், இரண்டாம் வகை பெண், உன் நாத்தனார்.
உன் நாத்தனாரை திருத்த விரும்புகிறாயா அல்லது நாத்தனாரிடமிருந்து தோழியின் கணவரை காப்பாற்ற விரும்புகிறாயா அல்லது இரண்டுமா?
நாத்தனாரிடம் நேரடியாக பேசி, அவளை திருத்தி விட முடியாது. அது, சிறுகதைகளிலும், சினிமாக்களிலும் மட்டுமே சாத்தியம். நிஜத்தில், உன் நாத்தனாரிடம் நிரந்தர பகையாளி ஆகி விடுவாய். உன்னை கவிழ்க்க, இழிவுபடுத்த, சொல்லாலும், செயலாலும் காயப்படுத்த, தகுந்த சந்தர்ப்பம் எதிர்பார்த்து நிற்க ஆரம்பித்து விடுவாள், நாத்தனார்.
உன் கணவரிடம் நைசாக விஷயத்தை போட்டு உடை.'உங்கள் தங்கை மீது நான் வீண் பழி சுமத்தவில்லை. தன் குடும்பத்தையும் கெடுத்து, தோழி மற்றும் அவரைப் போன்றோரின் குடும்பங்களையும் நிர்மூலமாக்குகிறாள். அதை, நீங்கள் சாதுரியமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக கூறுகிறேன். உங்கள் பெற்றோரிடமோ, தங்கையிடமோ அல்லது உங்கள் தங்கை கணவரிடமோ பேசி, பிரச்னையை தீர்க்க பாருங்கள். நான் சொன்னதாக உங்கள் தங்கைக்கு தெரிய வேண்டாம். வெளியாள் மூலம் விஷயத்தை தெரிந்து கொண்டதாக கூறுங்கள். மனைவியின் போக்கை நெறிபடுத்தாமல், விட்ட பணத்தை சம்பாதிப்பதில் குறியாய் இருந்து பயனில்லை...' என்பதை, தங்கை கணவருக்கு இடித்துரைக்க சொல்.
நாத்தனாரின் நடவடிக்கை, அவளது கணவருக்கும், நாத்தனாரின் பெற்றோருக்கும் ஏற்கனவே தெரிந்தும் தெரியாதது போல நடிக்கின்றனரோ என்னவோ? இப்போதெல்லாம் குடும்பங்களில் பிரச்னைகள் வந்தால், பெரும்பாலும் தீர்க்க யாரும் முயற்சிப்பதில்லை. அதை, மூடி மறைக்கவே பார்க்கின்றனர். உன் நாத்தனாரை அவளது பெற்றோர் கண்டித்ததால், 'என் அழகுக்கும் அறிவுக்கும் பொருத்தமான, பொருளாதாரத்தில் உயர்ந்த மாப்பிள்ளையை எனக்கு திருமணம் செய்து வைத்தீர்களா? நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, எனக்கு பாடம் நடத்த வராதீர்கள். அவரவர் வேலையை பாருங்கள்...' என, அவள் கடிந்து கொள்ள வாய்ப்புள்ளது. கண்டிக்க போய், மூக்கறுபட்டு திரும்புவர்.
உன் தோழிகள், அவரவர் கணவன்மார்களை அக்கம்பக்கத்து தோட்டங்களை மேய விடாமல் பார்த்துக் கொள்ளட்டும். நன்னடத்தை காவல் அதிகாரியாக நீ செயல்படாதே. தவறு செய்யும் உன் நாத்தனாரை நல்வழிபடுத்த, உன்னையும், உன் குடும்பத்தையும் பாதிக்காத வகையில் முயற்சி செய்து பார். உன் நாத்தனார் திருந்தினால் சந்தோஷம்; திருந்தாவிட்டால், விலகி நில்.
கணவரையும், குழந்தைகளையும் கவனி. தீமையை நேரடியாக தலையிட்டு, தட்டி கேட்க முடியவில்லை என்றால், தீமைக்கு எதிரான மனநிலையை மட்டுமாவது கடைபிடி; அது போதும்.
நீ ஒரு வாகனத்தை செலுத்துகிறாய்... அதே சாலையில் ஒரு வாகனம் தறிகெட்டு வந்து உன் வாகனம் மீது மோதாமல் விலகி ஓட்டு. உன் வாகனத்தின் மீதான பாதுகாப்பை உறுதி செய்த பின், தறிகெட்ட வாகனம் வேறெந்த வாகனத்தின் மீதும் மோதி விடாமல் குரல் எழுப்பு. உன்னால் எது சாத்தியமோ அதை மட்டும் செய். உன் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பற்றி அலட்டிக் கொள்ளாதே.
நாத்தனார் விஷயம், ஏதாவது ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிதாய் வெடித்து சிதறும். அப்போது, ஒரு தடாலடி தீர்வு கிடைக்கலாம். அபாய சங்கை முன்பே ஊதி விட்டோம், விழித்துக்கொள்ள வேண்டியவர்கள், காலத்தில் விழித்துக் கொள்ளவில்லை என தெளிவு பெறு.
விட்டில் பூச்சி பெண்களுக்கு ஒரு வார்த்தை: ஆடம்பரத்துக்கு மயங்காதீர். ஆண்களுடன் வார்த்தை தாம்பத்யம் செய்து, பணம், புகழ், அதிகார சலுகைகள் பெறாதீர். கிடைத்த இல்லற வாழ்க்கையில் திருப்திபடுங்கள். தோழிகளின் கணவன்மார்களை களவாடாதீர்கள். உறவுகளை மதியுங்கள், கண்ணியப்படுத்துங்கள். குழந்தைகளின் நலனுக்காக, உங்கள் சந்தோஷங்களை கட்டுக்குள் வையுங்கள். மொத்தத்தில் மனசாட்சியின் குரலை மதித்து நடங்கள்.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement