Advertisement

திண்ணை!

'புதுவையில் பாரதி' என்ற நுாலிலிருந்து: பாரதியார் ஒருநாள், புதுச்சேரி வீதி வழியாக சென்றுக் கொண்டிருந்தார். பள்ளிக்கூட மாணவன் ஒருவன், திண்ணையில் அமர்ந்து, 'இளமையில் கல்; இளமையில் கல்' என்று, சத்தமாக படித்து, மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.
அதைக் கேட்ட பாரதியார் சிரித்த படியே, 'முதுமையில் மண்; முதுமையில் மண்' என்று, தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டே நடந்தாராம்; இதைத் தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிச் சிரிப்பார், பாரதியாரின் உற்ற நண்பரான வ.ராமசாமி.


'அண்ணாதுரையும், தம்பியரும்' என்ற நுாலிலிருந்து: கடந்த, 1953ல், தி.மு.க., மும்முனை போராட்டம் நடத்தியதன் விளைவாக, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கருணாநிதி உட்பட ஐந்து பேருக்கு, மூன்று மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
சிறையில், அண்ணாதுரையும், நெடுஞ்செழியனும் ஒரே அறையில் அடைக்கப்பட்டனர். ஒருநாள், குப்பை கூடையில் ஒரு பழைய புத்தகத்தை கண்டார், நெடுஞ்செழியன். அதை எடுத்து புரட்ட, அதில், நல்ல படங்கள் பல இருக்கவே, ஒவ்வொன்றாக வெட்ட ஆரம்பித்தார்.
அதைப் பார்த்து, 'என்ன செய்கிறாய்?' என்று கேட்டார், அண்ணாதுரை.
விஷயத்தை சொன்னதும், 'எல்லாரும் திருடிவிட்டு சிறைக்கு வருகின்றனர்; நீ திருடிவிட்டு, சிறைக்கு வெளியே போகப்போகிறாயா?' என்று கேட்டார்.
'யாருக்கும் நஷ்டம் ஏற்படாத வகையில் செய்யக்கூடிய காரியம் திருட்டாகாது; இந்த புத்தகம் பயனற்று குப்பையில் கிடந்தது. இப்படங்களை சிறை அதிகாரியின் அனுமதியோடு தான் எடுத்துச் செல்வேன்...' என்றார். உடனே, அண்ணாதுரை, 'தெருவில் ஒரு பிணம் கிடக்கிறது என்று வைத்துக் கொள். அந்த பிணத்தால் யாருக்கும் பயனில்லை; அதற்காக, அந்த பிணத்தின் வேட்டியை அவிழ்த்துக் கொண்டு வந்து விடுவதா?' என்று கேட்டார்.


'பேசும் படம்' இதழில், 'பாடல் பிறந்த கதை' எனும் கட்டுரையில், 1966ல், கண்ணதாசன் எழுதியது: கும்பகோணத்தில் நடந்த ஒரு கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக சென்று கொண்டிருந்தேன். நடு வழியில் கடலுாரில் நின்றது, கார். பசியெடுத்தது; உணவு பொட்டலம் ஒன்றை வாங்கி பிரித்து, மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பொட்டலம் மடித்து வந்த காகிதத்தில், கவிதை உருவில் எதுவோ தென்படவே, அதை படித்தேன்.
கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான்
கற்பித்தானா?
என்று துவங்கும், பழைய பாடல் அதில் அச்சிடப்பட்டிருந்தது.
அதன் தாக்கத்தில், பாவ மன்னிப்பு படத்தில் நான் எழுதிய பாடல் தான்,'அத்தான் - என் அத்தான் - அவர் என்னைத்தான்...' என்ற பாடல்!


'இந்திய விடுதலை போர்!' என்ற நுாலிலிருந்து: இந்திய சுதந்திர போரை துவங்கி வைத்தவர், பாலகங்காதர திலகர். ஆங்கிலேய அரசு, அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க, போலீஸ் ஒற்றனை அனுப்பி இருந்தது. அவனும், அவரை பின் தொடர்ந்து சென்றான்.
ஒருமுறை, நண்பரை பார்க்க சென்ற திலகர், இரவு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்து, விடைபெற்று வெளியே வந்தார். ஓரிடத்தில் ஒற்றன் அயர்ந்து துாங்கிக் கொண்டிருப்பதை கண்டார். அவன் பரிதாப நிலையை கண்டு, திலகருக்கு அவன் மீது இரக்கம் பிறந்தது. அத்தொழிலை செய்வது, அவன் வயிற்றுப் பிழைப்புக்கு தானே... அவன் வாழ்க்கையில் எத்தனை துன்பங்களோ!
அந்த ஒற்றனை அப்படியே அங்கு விட்டுச் செல்ல திலகருக்கு மனமில்லை. அப்படி விட்டுச் சென்றால், அவன் தன் கடமையை சரிவர செய்யவில்லை என்று மேலதிகாரியின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
அவனை எழுப்புவதற்கும், அவர் நெஞ்சம் தயங்கியது. சிறிது நேரத்துக்கு பின், அவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து லேசாக புரண்டு படுத்தான். அவனை தட்டியெழுப்பி, 'என் வேலை முடிந்து விட்டதப்பா... நான் திரும்பி செல்கிறேன்; நீயும், உன் கடமையை செய்ய வேண்டாமா... புறப்படு!' என்றார்.
ஒற்றன் பரபரப்புடன் எழுந்து, தன்னை காப்பாற்றிய திலகருக்கு நன்றி சொல்லி, அதிகார வர்க்கம் தனக்களித்துள்ள கட்டளைபடி, திலகரை பின் தொடர்ந்தான்.

நடுத்தெரு நாராயணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement