Advertisement

கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா?

பள்ளி மற்றும் நுாலகங்களில் மட்டுமே இருந்த கல்வி, இன்று, கணினி மற்றும்- கைபேசி ஆகியவற்றின் மூலம், உலக தகவல்கள் அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படுகிறது.
இருந்தும், கல்வியின் நிறைவான தெளிவை, தேட வேண்டிய நிலையில் அரும் பொருளாகி விட்டது.
ஏறத்தாழ, 350 ஆண்டு களுக்கு முன் நடந்த நிகழ்வு இது...
சிவ பூஜைக்கு உண்டான முறைகளை விவரிக்கும், 'அனுஷ்டான விதி' எந்தெந்த தெய்வ வழிபாட்டிற்கு, எந்தெந்த மலர்கள், அவற்றை எடுக்க வேண்டிய காலம், ஆகியவற்றை விவரிக்கும்,'புட்ப விதி' மற்றும் மலர்களால் தொடுக்கப்படும் பலவகை மலர் மாலைகளின் தன்மைகளை விவரிக்கும், 'பூமாலை' போன்ற பல நுால்களையும் எழுதியவர், -கமலை ஞானப்பிரகாசர்.
திருவாரூர் எனும், கமலையில் அவதரித்ததன் காரணமாக, இவர், கமலை ஞானப்பிரகாசர் என, அழைக்கப்பட்டார். மகா ஞானி; தெய்வத்திருவருள் முழுமையாகக் கைவரப் பெற்றவர்.
இவர் வாழ்ந்த காலத்தில், ஸ்ரீவில்லிப்புத்துாரில் வாழ்ந்து வந்தான், குருபாலன் எனும் வியாபாரியின் மகனான தனபதி. கலைகளில் சிறந்த இவன், சிறந்த அறிவாளி. இவன், ஊர் ஊராக தனக்கான குருநாதரைத் தேடி அலைந்தவன், மதுரைக்கு வந்தான்.
சொக்கலிங்கப் பெருமானையும், அன்னை மீனாட்சியையும் மனமாற வழிபட்டு, 'தகுந்த குருவை அடியேனுக்கு காட்டி அருளுங்கள்...' என, வேண்டினான்.
அன்றிரவு துாங்கும்போது, தனபதியின் கனவில் வந்த சொக்கநாதர், 'பக்தா... நம் வழிமுறையில் வந்த ஒருவன், ஞானப்பிரகாசன் எனும் பெயருடன் திருவாரூரில் இருக்கிறான். அவனிடம் அருளுரை பெறுவாயாக...' என்று கூறி, மறைந்தார்.
கனவு கலைந்த தனபதி, இறைவனையும், அம்பாளையும் வழிபட்டு, மதுரையிலிருந்து புறப்பட்டான்.
ஞானப்பிரகாசர் கனவிலும் எழுந்தருளினார் சொக்கலிங்கர், 'மதுரையிலிருந்து, பக்தன் ஒருவன், நாளை வருவான்; அவனுக்கு தீட்சை செய்வித்து, அருள் உரை வழங்குவாயாக...' என்று கூறி, மறைந்தார்.
சிவபெருமான் சொன்னபடியே, தனபதி வந்து, ஞானப்பிரகாசரை வணங்கி, 'அடியேனை சீடனாக ஏற்று, ஞான உபதேசம் செய்ய வேண்டும்...' என, வேண்டினான்.
அவனை, ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த ஞானப்பிரகாசர், அவன் நிலையை சற்று ஆராய எண்ணி , 'சரி... இங்கேயே இரு...' என்றார். அதன்பின் தன் வழக்கமான அலுவல்களை முடித்துக் கொண்ட ஞானப்பிரகாசர், வழக்கம் போல மாணவர்களுடன் கோவிலுக்கு சென்றார்.
வழிபாட்டை முடித்து, இல்லம் திரும்பிய ஞானப்பிரகாசர், 'இங்கேயே இருங்கள்...' என்று தன்னுடன் வந்தவர்களிடம் சொல்லி, இல்லத்திற்குள் சென்றார்.
வந்த அனைவரும், 'உத்தரவு பெற்று விட்டோம்' என்ற எண்ணத்தில், தங்கள் இருப்பிடம் திரும்பினர்.
தனபதி மட்டும், குரு உத்தரவை மீற அஞ்சி, அங்கேயே நின்றான். அன்று இரவு முழுதும் பெருமழை பெய்தது. ஆனால், ஒரு துளி கூட தனபதியின் மீது விழவில்லை.
மறுநாள் காலை அங்கு வந்த மற்ற மாணவர்கள், இந்த அதிசயத்தை பார்த்து குருநாதரிடம் சொல்ல, அவர் தனபதியின் மன பக்குவத்தை புரிந்து கொண்டார். அதன்பின், தனபதிக்கு தீட்சை அளித்து, 'ஞானசம்பந்தர்' என்ற, திருநாமமும் வழங்கினார்.
விஷயத்தை தெரிவிக்குமே தவிர, தெளிவை வழங்காது கல்வி. தெளிவை வழங்கக்கூடியவர் குருநாதர் மட்டுமே. நல்ல குரு கிடைக்கவும், தெளிவை வழங்கவும், இறைவனையும், இறைவியையும் வேண்டுவோம்!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!
பஞ்சமுக விநாயகர் என்பவர் யார்?
மகா கணபதி, சித்தி கணபதி, வித்யா கணபதி, சக்தி கணபதி, மோட்ச கணபதி ஆகிய ஐந்து கணபதிகளும் ஒன்றாக சேர்ந்ததே பஞ்சமுக விநாயகர். அதாவது, பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பே பஞ்சமுக விநாயகர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement