Advertisement

பேரன்பின் ஒளி!

சமூக நீதி வகுப்பு -
'தனியாக வாழ்வதென்றால் என்னவென்றே எலிகளுக்கு தெரியாது...' என்று குழந்தைகளுக்கு ஒற்றுமையை பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள், பாவை. அப்போது, மொபைல் போன் ஒலித்தது.
அம்மா தான்.
''ஒரு நிமிடம் கண்ணுகளா...'' என்று அவர்களிடம் சொல்லி, போனை எடுத்தாள்.
''என்னம்மா இது... எத்தனை முறை சொல்லியிருக்கேன், வகுப்பு நேரத்துல போன் செய்யக் கூடாதுன்னு... அப்படியென்ன அவசரம்?''
''சாரிம்மா... விடைத்தாள் திருத்தணும்ன்னு போன வாரம் நீ ஊருக்கு வரல... அதான், உன் குரலையாவது கேக்கலாம்ன்னு...''
''இந்த வாரம் சனிக்கிழமை வரேன்ம்மா...'' என்று சொல்லி, போனை வைத்து, பாடத்தை தொடர்ந்தாள்...
''ஒவ்வொரு எலியும், ஒவ்வொரு குழுவில் இணைந்து, மற்ற எலிக்கு உதவி செய்து கொண்டே இருக்கும்... மற்ற விலங்குகளோடும் நெருங்கிப் பழக ஆசைப்படும். தவிர, உதவியை கேட்டு பெறவும் தயங்காது...''
மறுபடி மொபைல் போன் அழைத்தது.
அம்மாவாகத் தான் இருக்கும் என்று கோபத்துடன் பார்த்தபோது, அது, தோழி துளசி!
''கிளாஸ் நடுவுல, 'கால்' பண்றேன்னு கோவிச்சுக்காதே... கொஞ்சம் அவசரம் அதான்...'' என்று படபடத்தாள்.
''என்ன துளசி சொல்லு...''
''நானும், வேணுவும் பதிவு திருமணம் செய்து கொள்ளப் போறோம்... அதுக்கு முன், திருநீர்மலையில மாலை மாத்தி கல்யாணம்... கண்டிப்பா நீ வரணும்; என் ஒரே உயிர்த்தோழி, நீ தான்.''
'என்ன சொல்கிறாள் இவள்... வீட்டிற்கு தெரியாமல் திருமணமா...' என நினைத்து,
''சாயங்காலம் சந்திக்கலாம் பாவை... அஞ்சு மணிக்கு, அவ்வையார் சிலைகிட்ட, 'வெயிட்' பண்றேன் வந்துடு...'' என்று கூறி, வைத்து விட்டாள்.
அவளுக்கும், துளசிக்கும், 20 ஆண்டுகள் நட்பு. பால்வாடி பள்ளியில் துவங்கிய அறிமுகம், 10ம் வகுப்பு வரை, ஒரே வகுப்பு; பிளஸ் 2வில் ஒரே கோச்சிங்; பி.காம் பிசினஸ் மேத்ஸ் என்று ஒரே கோர்ஸில் சேர்ந்த ஆர்வம் என்று நல்ல புரிதலும், கனிவும், மதிப்பும் கொண்ட அழகிய தோழமை.
அரசு பள்ளி ஆசிரியராக, பாவை, சென்னை வந்து சேர்ந்த ஒரே மாதத்தில், துளசிக்கும் தலைமை செயலகத்தில் வேலை கிடைத்தபோது, எல்லாரும் ஆச்சரியப்பட்டனர். துளசி அலுவலகம் அருகே விடுதியில் தங்க, கொட்டிவாக்கத்தில் உள்ள மகளிர் விடுதியில் சேர்ந்தாள், பாவை.
வேணுவை, நான்கைந்து முறை சந்தித்திருக்கிறாள், பாவை. அரசு கான்டிராக்ட் எடுத்து, தார் சாலைகள் போடுகிற வேலை அவனுடையது. சிவில் இன்ஜினியர், கவிதை, உலக சினிமா, மக்கள் இயக்கம் என்று அவன் உலகம், சுவாரஸ்யமானது. துளசியும், பாவையும் கூட அப்படித்தான். எப்போதும் சமூகத்தின் மீது பரிவு கொண்ட பார்வை, செயல்பாடு என்று இருப்பவர்கள். துளசியும், வேணுவும் காதல் வயப்பட்டது கூட ஒரு கவிதை பட்டறையில் தான். இருவரும் மனம் ஒருமித்த நல்ல ஜோடியாக இருப்பர் என்று தான் பாவையும் நினைத்தாள்.
அவர்கள் திருமணத்திற்கு, உலக கவிதை புத்தகங்களை பரிசளிக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தாள். ஆனால், இதென்ன திடீர் பதிவுத் திருமணம்!
பாவையை, கவலை சூழ்ந்து கொண்டது.
எப்போதும் போல மாலை வெயிலின் மஞ்சள் படிந்து கம்பீரமாக காட்சியளித்தது, அவ்வையார் சிலை. சுண்டல் சிறுவனிடம் இரண்டு பட்டாணி சுண்டல்கள் வாங்கி, தோழி இருந்த இடத்தை அடைந்தாள், பாவை.
''இந்தா துளசி,'' என்று நீட்டினாள்.
''வேண்டாம் பாவை... மனசே சரியில்ல,'' என்றாள், துளசி கவலையுடன்!
''என்ன கவலை...''
''என்ன குறை வேணுவுக்கு... படிப்பு, குணம், வேலைன்னு வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா அம்சங்களும் நல்லாத்தானே இருக்கு... ஜாதி, பிரிவுன்னு ஏதேதோ சொல்லி, அப்பா குதிக்கிறாரு... அம்மாவும் ஒத்து ஊதறாங்க. அர்த்தமே இல்லாத இந்த பிரிவினைகளுக்காக, அருமையான ஒரு மனிதரை நான் இழக்கணுமா...''
அவள் சொல்வதை பொறுமையாக கேட்டாள், பாவை.
''நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன்... அவங்க பிடிவாதமா இருக்காங்க. வேற வழி தெரியல. கடினமான மனசோட தான் இந்த முடிவை எடுத்தேன்... வேணுவோட வீடு மாதிரி எங்க வீடு வெளிப்படையா இல்ல...'' கலங்கினாள், துளசி.
பாவையின் விரல்கள், தோழியின் தோளை மெல்ல பற்றின.
'' நீ சொல்றத ஒத்துக்குறேன்... நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு... நாம அஞ்சாவது படிக்கும்போது, வகுப்புல, 'பிக்னிக்' ஏற்பாடு நடந்துச்சு... உங்க வீட்ல உன்னை ஏலகிரி மலை, 'டிரெக்கிங்' அனுப்ப இஷ்டமில்ல. ஆனா, உனக்கு, மலை, அருவி, காடுன்னா ரொம்ப இஷ்டம். நீ என்ன செஞ்சே, பொறுமையா பேசினே... வாக்குவாதம் செஞ்சே... உறுதியா நின்னே. 'பாவையும் கூட வரா, பாதுகாப்பா போயிட்டு வரேன், கவலைப்படாதீங்க'ன்னு எடுத்துச் சொல்லி புரிய வெச்சே... அவங்களும் அனுப்பி வெச்சாங்க...''
''பத்தாவது முடிச்சதும், சயின்ஸ் குரூப் தான் எடுக்கணும்ன்னு உன் அம்மா பிடிவாதமா நிற்க, உனக்கு, 'காமர்ஸ்' தான் வேணும்ன்னு கேட்டே... ஒரு வாரம் மவுனப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம்ன்னு செஞ்சு கடைசியில ஜெயிச்சே... அதேபோல, சென்னையில வேலை கிடைச்சதும், அவ்வளவு துாரம் சின்ன பொண்ணு தனியா அனுப்புறதா வேண்டாம்ன்னு சொன்னாங்க உன் வீட்டுல... 'காம்படீஷன் எக்சாம்ல எழுதி வந்த அரசு வேலை; அதுவும் எடுத்த எடுப்புல அதிகாரி, செகரேட்டரியட்ல... இது, என் வாழ்நாள் சாதனை'ன்னு சொல்லி ஒத்த கால்ல நின்னே... அவங்க சம்மதத்தோட சென்னைக்கு வந்து சக்சஸ்புல் அதிகாரியா வெளுத்து வாங்கிகிட்டிருக்கே...
''இன்னும் கூட சொல்லலாம்... உன் அடர் கூந்தல் மேல உன் அம்மாவுக்கு பெருமை. ஆனா, நீ ஷார்ட்டா, 'கட்' பண்ணிகிட்டு, 'ப்ரென்ச் நாட்' போட்டுக்கிறே... அம்மாவுக்கு இதுதான் வசதின்னு புரிய வெச்சுட்டே... சுரிதார் தான் வாங்கித் தருவார் உன் அப்பா... ஆனா, நீ போடுறதெல்லாம் வெஸ்டர்ன் அவுட்பிட், ஜீன், குர்த்தி தான். கண்ணியமான எந்த உடையும் அழகுதான்னு அப்பாவுக்கு புரிய வெச்சியா இல்லையா... பிடிச்ச உணவு, ஓட்டுற பைக், படிக்கிற புத்தகம்ன்னு எல்லாமே உன் விருப்பம் தான்...
''இது எல்லாம் அவ்வளவு சுலபமாவா உனக்குக் கிடைச்சது... கிராமத்து பெற்றோர்கிட்ட, நீ போராடி போராடி வாங்கினது தானே... வெத்துப் பிடிவாதமா இல்லாம, உன் பக்கத்து நியாயத்தை அவங்களுக்கு புரிய வெச்சு அடைஞ்ச மகிழ்ச்சிகள் தானே... காதலும் அப்படித்தானே கிடைக்கணும்... விடாம போராடு; தொடர்ச்சியா பேசு; தெளிவா எடுத்துச் சொல். ஏன் விரும்பறோம், எப்படி நெருங்கினோம், எது இணைய வெச்சுதுன்னு பொறுமையா சொல்லு... கோபம், ஆத்திரம் எதுவும் வேணாம்; பதிவு திருமணம், கோவில் திருமணம் எல்லாம் சுலபம் தான். அதன்பின், வாழ்க்கையும் சுலபமா இருக்கணும்... அதுக்கு பெத்தவங்க ஆசிர்வாதமும், அன்பும் வேணும்.
''அந்த மனங்களை உடைச்சுட்டு கிடைக்கிற எதுவும் வெற்றியாகாது. தினந்தினம் உன் மனசே உன்னைக் கூறு போடும். பின் எப்படி நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கும்... நானும் வரேன் ஊருக்கு, நாம ரெண்டு பேரும் போய் பேசுவோம்; மறுபடி மறுபடி முயற்சிப்போம்... நிச்சயம், உன் பெற்றோர் மனசு மாறும்... சரியா...''
மெல்ல தோழியை ஏறிட்டுப் பார்த்த துளசி, ''பாவை!'' என்றாள்.
''சொல்லு...''
''உன் பேச்சு, ஏதோ ஒளியை கொடுத்த மாதிரி இருக்கு. சரி, இந்த வாரம் ஊருக்கு போறேன்; பொறுமையா பேசறேன். வேணுவுக்கும், இது மகிழ்ச்சியா இருக்கும். இந்த தெளிவுக்கு நான் எப்படி நன்றி காட்டுவேன் உனக்கு...'' என, தழுதழுத்த தோழியை, அணைத்துக் கொண்டாள் பாவை.

வானதி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement