Advertisement

அந்துமணி பா.கே.ப.,

'ஒரே தண்ணி, 'பிலாப்பளங்க...(பிராப்ளம்) நம்ம வீட்டுப் பக்கம்... 'டேங்கர்' லாரியில தண்ணி வாங்கி, 'செப்டிக் டாங்'கில கொட்டி, பின்னால, மோட்டார் வச்சு மாடித் தொட்டிக்கு ஏத்த வேண்டி இருக்கு...' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
'பெரிசு... இங்கிலீஷுல பேசாதேன்னு எத்தனை வாட்டி சொல்றது? 'செப்டிக் டாங்'ன்னா கக்கூஸ் தொட்டிய்யா...' என, அண்ணாச்சியை நொந்து கொண்ட மாமா, 'என்னாச்சு உம்மோட ஒயிட் அம்பாசிடர்?' எனக் கேட்டார்.
'நல்ல ராசியான வண்டிவே அது... அதுல போனா, போன காரியம் நடக்கும்... என்ன... வண்டி கொஞ்சம் பளசாப் போச்சு... வித்துப் போட்டேன்...' என்றார்.
'இதான் மூட நம்பிக்கையோ, மூடாத நம்பிக்கையோ தமிழர்களின் வாழ்வில் ஒன்றி கலந்து விட்டது அனேக நம்பிக்கைகள்...' என ஆரம்பித்த லென்ஸ் மாமா, நீண்ட லெக்சர் ஒன்றை ஆரம்பித்தார்...
'எண்ணை தேய்ச்சுக் குளிச்சிட்டு, கல்யாண வீட்டுக்குப் போகக் கூடாது...
'சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தலைமுடி வெட்டக் கூடாது... அழுக்குத் துணிகளைக் போடக் கூடாது. ஊசி, உப்பு, மோர், நெருப்பு மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை இரவல் கொடுக்கக் கூடாது.
'விடிந்ததும், முகம் பார்க்கும் கண்ணாடி, நிறை குடம், கொடி, விளக்கு, மஞ்சள், தாமரை, தங்கம், சூரியன், கடல், கோபுரம், மழை, மலை, கன்றுடன் கூடிய பசு, மனைவியின் முகம், பைத்தியக்காரன், கருங்குரங்கு, யானை மற்றும் மிருதங்கம் ஆகியவற்றைக் காண்பது நன்மை தரும்.
'வீட்டுத் தரையைப் பெருக்கி சுத்தம் செய்யும்போது, குப்பை கூளத்தை சேகரித்து வீட்டுக்கு வெளியே கொட்டி விட வேண்டுமென்று தாய், தன் மகளுக்கு அறிவுறுத்துகிறாள். குப்பையை மூலையிலே குவித்து வைத்தால், அவள் ஒரு நல்ல நாளில் - திருவிழா, திருமணம் முதலிய நாட்களில், வீட்டுக்கு விலக்காக இருக்க நேர்ந்து, மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பேற்றை இழப்பாள் என்பதும் ஒரு நம்பிக்கை. வீட்டு மூலைகளில் துாசி சேருவது கடனுக்கும், கவலைக்கும் அறிகுறி.
'உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது. அமாவாசைக்கு நான்காம் நாளில் சந்திரனைப் பார்த்தால் நினைவாற்றல் பாதிக்கப்படும்.
'நகத்தைக் கடிப்பது, தண்ணீரை வீணாக்குவது, கால் ஆட்டுவது, வீட்டுக்குள் ஆமை புகுவது ஆகியவை, வரப்போகும் வறுமைக்கு அறிகுறி, கால்களை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்துக் கொள்வதும், கைகளை முழங்கால் அருகே கட்டிக் கொள்வதும் பிணத்தின் அடையாளங்கள்.
'கோடித் துணிகளை மூலையில் மஞ்சள் தடவிய பிறகே உடுத்த வேண்டும்.
'இடது கையால் எதையும் கொடுப்பதும், வாங்கிக் கொள்வதும் மற்றொரு சாராரை அவமதிப்பதாகும். வடக்கே தலையும், தெற்கே காலும் வைத்துப் படுக்கக் கூடாது. வடக்கு மரணத்துக்குரிய கடவுளின் திக்கு.
'வடகிழக்கு, மூலையில் தான் கிணறு வெட்ட வேண்டும். வெள்ளிக் கிழமையில் பயணம் கிளம்புவது, வீட்டுச் செல்வத்தை பிறருக்குக் கொடுப்பது கூடாது. தானம் மட்டும் இந்த கிழமையில் கொடுக்கலாம்.
'இப்படி எவ்வளவோ நம்பிக்கைகளைக் கடைப்பிடித்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டனர், நம் மக்கள்...' என்று முடித்தார், லென்ஸ் மாமா.
'அந்தக் காலத்துல இருக்கீங்க மாமா... அவனவன், 'சாட்டிலைட்' மூலமா, உலகில், எங்கோ, எவன் வீட்டு, 'பெட் ரூமை'யோ படம் எடுத்து விடறான்... நீங்க என்னன்னா நம்மூர் தொல்பொருள் துறைக்காரங்க, மகாபலிபுரத்திலே கடல் கோவில் பக்கத்துலே, 'இங்கே போட்டோ எடுக்கக் கூடாது'ன்னு பத்தாம்பசலித்தனமா போர்டு வச்சு இருக்கிற மாதிரி இல்லே இருக்கு ஒங்க பேச்சு...' என்றேன்.
'சும்மா நிறுத்து கண்ணு... அந்த, 'சாட்டிலைட்'டை அனுப்பறதுக்கு முன், சூடம் காட்டி, தேங்கா ஒடச்சுத்தான் அனுப்பறான்...' என்றார்.
அதன் பின், நான் எதுவும் பேசவில்லை.


பெண் உரிமை இயக்கங்களின் எதிர்ப்பின் விளைவு. ஆணாதிக்கத்துக்கு எதிராக, இங்கே பெண்களின் குரல், கோஷ்டி கானமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்தியாவில், பெண் கொடுமைக்கு எதிராகப் போராடி, அவர்களை அடிமைத் தளையிலிருந்து விடுபடச் செய்யக் களமிறங்கியவர்கள் ஆண்களே!
பெண்ணியம் பற்றி நுால் ஒன்றில்:
இந்தியா, ஆங்கிலேய அரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் பலர் அரசு அலுவல் காரணமாக இந்தியாவிற்கு வந்தனர். இந்தியாவில் கடைப்பிடிக்கப் பட்ட பெண் சிசு கொலை, உடன்கட்டை ஏறுதல், கைம்மை வாழ்வு போன்ற பழக்க வழக்கங்கள் அவர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தன.
படித்துப் பட்டம் பெற மேலை நாடுகளுக்குச் சென்ற இந்திய இளைஞர்களுக்கு, அங்குள்ள பெண்களின் நிலை வியப்பை அளித்தது. அந்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தோடு இந்தியப் பெண்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தனர். ஆங்கிலக் கல்வி, அந்த ஆண்களுக்கு சமத்துவம், மனித நேயம், சுதந்திரம், ஆராய்ச்சி அறிவு இவற்றைக் கற்பித்தது.
மேலை நாடுகளில், பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பெண்களே உணர்ந்து அவற்றை நீக்கப் போராடினர். ஆனால், இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆண்களே முன்னின்று முயற்சி எடுத்தனர். பெண்களோ கல்வியின்றி அறியாமையில் மூழ்கியிருந்தனர்.
ஆங்கிலக் கல்வி பெற்ற ஆண்கள், தங்கள் குடும்பப் பெண்களை பள்ளிகளுக்கு அனுப்பினர். இள வயதில் திருமணம் செய்து கொடுக்காது, சிறிது காலம் தாழ்த்தி மணம் செய்து கொடுத்தனர். ஆயினும், இந்த ஆண்கள், பெண்களின் முன்னேற்றம் பற்றிய மேலை நாட்டு கருத்துகளை முழுவதும் ஆதரிக்கவில்லை.
இந்திய கலாசாரத்தை உயர்வாகக் கருதி, பெண்களின் கற்பு நெறி, தாய்மை போன்ற மதிப்புகளைப் போற்றிக் காக்கவே முற்பட்டனர்.
மேல்நாட்டினராலும், கிறிஸ்துவ மதத்தினராலும் ஆரம்பிக்கப்பட்ட கல்விக் கூடங்கள், மேல்நாட்டு கலாசாரத்தை பரப்பி, இந்தியர்களை தங்கள் மதத்திற்கு இழுக்க முயன்ற போது, இவர்கள் இந்து மத மறுமலர்ச்சிக்காக, பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், தியாசபிகல் நிறுவனம், ராமகிருஷ்ண மடம் போன்ற அமைப்புகளை உருவாக்கினர்.
-என்கிறது இந்நுால்.
இக்கட்டுரைப் பற்றி லென்ஸ் மாமாவிடம் கூறினேன். அவர் சொன்னது:
'இன்றைய மாதர் சங்கத்தினர், மாதம் ஒரு முறை கூடி, ஆவக்காய் ஊறுகாய் போடுவது பற்றியும், அன்றைய மார்க்கெட்டிற்கு வந்திருக்கும் புது ரக புடவை பற்றியும் பேசிக் கலைகிறார்களே... அரட்டை மடம்! சுத்த அக்கப் போர்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement