Advertisement

ஆச்சி மனோரமா! (27)

பிரசவம் முடிந்து,மருத்துவமனையில் இருந்த மனோரமாவை அழைத்து போக வந்தார், அவரது கணவர் ராமநாதன். பச்சை உடம்புக் காரியை உடனே அனுப்ப முடியாது எனக் கூறிவிட்டார், மனோரமாவின் அம்மா ராமமிர்தம்.
தன்னோடு உடனே புறப்பட்டு வருமாறு வற்புறுத்த ஆரம்பித்தார், ராமநாதன்.
அம்மாவின் பேச்சை மீறியதன் பலனை உணர்ந்ததால், இப்போதும் அம்மாவின் பேச்சை மீறினால், அது மிகப்பெரிய தவறாக முடியும் என்பதோடு, பச்சை உடம்புகாரி என்றும் பார்க்காமல், பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு பண வெறிபிடித்து அலையும் தன் கணவரை நம்பி, அவருடன் செல்ல விரும்பவில்லை, மனோரமா. அதனால், 'என்னால் இப்ப வர முடியாது...' என்று உறுதியாக கூறிவிட்டார்.
இதற்கு மேலும் வற்புறுத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை தெரிந்து கொண்டதும்,'போய் வர்றேன்' என்று கூட சொல்லாமல், அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். அன்று போனவர் தான், அப்புறம், திரும்பி வரவே இல்லை.
இருப்பினும், மனோரமாவிற்கு மனதில் கவலையும், துயரமும் இருந்து கொண்டே தான் இருந்தது. என்றாவது, மனம் திருந்தி கணவர் தன்னை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை அவருக்குள் ஊசலாடிக் கொண்டே இருந்தது. பின், சென்னை திரும்பி, நாடகங்களோடு, சினிமாவிலும் பிரபலமானார்.
அப்போது, தீப்பொறி பறக்கும் வசனங்களை பேசி, நடிக்க, பொருத்தமான நடிகையை, தேடிக் கொண்டிருந்தது, தி.மு.க., இதையடுத்து மனோரமாவை கண்டுபிடித்து அவரை பயன்படுத்தினர்.
தி.மு.க.,வின் கட்சி பிரசார நாடகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டார், மனோரமா.
உதயசூரியன் எனும் நாடகத்தில், கருணாநிதிக்கு ஜோடியாக, 'கண்ணம்மா' எனும் வேடத்தில் நடித்தார் மனோரமா.
சில நாட்கள் கழித்து, கணவரிடம் இருந்து கடிதம் வந்தது.
சந்தோஷத்தில் சிறகடித்து பறந்தார். தன் கணவர் மனம் திருந்தி விட்டார் என்றே அவர் நினைத்தார். கடிதத்தை பிரித்து படித்தபோது, மொத்த உலகமும் வேகமாக சுழல்வதுபோல், காலுக்கடியில் பூமி நழுவியது போல் இருந்தது.
அது -
மீண்டும் இருவரையும் இணைக்கும் கடிதம் இல்லை; விவாகரத்து கடிதம்.
இதன்பின், தன் கணவரை பற்றிய நினைவுகள் அனைத்தையும் மனதிலிருந்து துடைத்தெறிந்தார், மனோரமா.
தன் தாய் மற்றும் மகன் ஆகியோர் மட்டுமே இனி தன் வாழ்க்கை என்பதை மனதில் அழுத்தமாக பதிவு செய்து கொண்டார்.
இனிமேல் இவர்களுக்காகவே வாழ வேண்டும் என்றும் முடிவெடுத்தார்; 1966ல், இருவரும் பிரிந்தனர்.
இந்த விவாகரத்துக்கு பின்னணியில் ஒரு மோசமான காரணமும் உண்டு...
மனோரமாவின் மகன், பூபதியின் ஜாதகத்தை ஒரு பிரபல ஜோதிடரிடம் கொடுத்து, பார்க்க சொல்லி கேட்டாராம் ராமநாதன். அந்த ஜோதிடரும் நன்றாக பார்த்து, 'இந்த குழந்தை, தன் தாயை மிகப்பெரிய மனிதராக்கும்; ஆனால், தகப்பனை விழுங்கி விடுவான்...' என்று சொன்னாராம்.
இதைக் கேட்டதும், பதறிப்போனார், ராமநாதன். மனோரமாவை பிரிவதற்கு இதுதான் முக்கிய காரணம் என்றும் சொல்வர்.
ராமநாதன் - மனோரமா திருமணத்திற்கு சாட்சி கையொப்பமிட்ட, சக நடிகர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தங்கை பங்கஜம் என்பவரை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார், ராமநாதன்.
வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம் அன்பு மட்டுமே என்று நினைத்து, உலகில் உள்ள அனைவரிடமும் அன்பை மட்டுமே அள்ளி அள்ளிக் கொடுத்த மனோரமாவை, போலியான அன்பினால், ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்தது, சகித்துக் கொள்ள முடியாத உண்மை.
தன் இல்லற வாழ்க்கை தோற்றுப் போனது பற்றி ஒருமுறை, மடை திறந்த வெள்ளமாக கொட்டினார், மனோரமா...
'நான் கொண்டது உண்மையான காதல்; அவரும் அப்படித்தான் இருப்பார் என்று நம்பினேன். எங்கள் பிரிவு தற்காலிகமானது என்றும் நினைத்தேன். ஆனால், என் நம்பிக்கை வீணாயிற்று. இடி விழுந்தது போல, ஒருநாள் அவரிடமிருந்து, 'விவாகரத்து நோட்டீஸ்' வந்தது. அந்த நோட்டீஸ், என் நம்பிக்கையை பொய்யாக்கி, எதிர்காலம் பற்றிய கனவுகளை பொடிப் பொடியாக்கி விட்டது. சோகமும், கஷ்டமும், கவலையும் எனக்கு புதிதல்ல; இவற்றை தாங்கி பழக்கப்பட்டவள் நான்.
'எனவே, இந்த இழப்பை தாங்கிக் கொண்டேன்; ஆனால், அதன்பின் தான், எனக்கொரு உண்மை புரிந்தது... அந்த நாடக சபாவை விட்டு, வேறு சபாக்களின் நாடகங்களில் நடிப்பதை நிறுத்தி, அந்த நாடக கம்பெனியின் நிரந்தர நடிகையாக இருக்கச் செய்வதற்காக அவர் நடத்திய நாடகம் தான், இந்த காதல் திருமணம் என்பதை அறிந்து கொண்டேன். வெறும் நாடகத்திற்காக, ஒரு நிஜ நாடகத்தை நடத்தி விட்டார். அதில், நான் ஒரு ஏமாந்த பாத்திரமாகி விட்டேன். இது, என் தலையெழுத்து அவ்வளவு தான்...' என்று மன வேதனைப்பட்டு பேசினார்.
அப்புறம் மனோரமா, நாடகம் தாண்டி, சினிமா உலகிற்குள் பிரவேசித்து, எட்டாத உயரத்திற்கு சென்றார்.
ஆனால், எஸ்.எம்.ராமநாதன் யாரென்று கேட்கும் நிலையில்தான் அவரது வாழ்க்கை அமைந்தது. சென்னை, மயிலாப்பூரில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார், ராமநாதன். பக்கத்தில் தியாகராய நகரில் மனோரமா.
ஆனாலும், ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 18, 1990ல், திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்தார், ராமநாதன்.
இந்த தகவல் மனோரமாவிற்கு தெரிவிக்கப்பட்டது. அவரது மகன் என்ற முறையில், தன் மகன், பூபதி தான் இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து, மகனுடன் ராமநாதன் வீட்டிற்கு செல்ல தீர்மானித்தார்.
மனோரமாவின் இந்த முடிவை, அவரது அம்மா ஏற்றுக்கொள்ளவில்லை; தடுத்தார்.
'உனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவனின் சாவுக்கு, நீ எதற்காக போக வேண்டும்?' என்று கேட்டார்.
'அது, அவரது குணம்; ஆனா, நான் அவரை மனப்பூர்வமா காதலிச்சது உண்மை. அந்த காதல், இந்த கட்டை வேகும் வரை போகாது...' என்று கூறி, சென்றார்.
வேறு குழந்தைகள் இல்லாத ராமநாதனுக்கு, பூபதி தான் இறுதிச் சடங்குகளை செய்தார்.
இது தான் மனோரமா!
— தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com

- குன்றில்குமார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement