Advertisement

இது உங்கள் இடம்!

வாழ்வை எதிர்கொள்ளுங்கள் சகோதரிகளே!
சில மாதங்களுக்கு முன், எங்கள் குடியிருப்பில் வசித்த, 50 வயது பெண்மணியின் கணவர் சமீபத்தில், மரணமடைந்தார். அவருக்கு, குழந்தை இல்லாததால், மனைவி தனித்து விடப்பட்டார். 'தனித்திருக்கிறார்... இவர், எப்படி மீதி வாழ்க்கையை ஓட்டப்போறாரோ...' என, நாங்கள் பேசிக் கொண்டோம்.
அப்பெண்மணிக்கு பணப் பற்றாக்குறை ஏதுமில்லை; பள்ளி இறுதி வரை படித்தவர். வெகு விரைவிலேயே துக்கத்திலிருந்து மீண்டார். ஆடம்பரமில்லா டிரஸ் அணிந்து, சனி, ஞாயிறன்று அண்ணன், அக்கா, கணவர் வீட்டு சொந்தங்கள் மற்றும் ஏதேனும் ஒரு உறவினர் குடும்பத்தை வீட்டுக்கு வரவழைத்து, உணவு சமைத்து, ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, அவர்களுடன் பேசி, துக்கத்தை மறக்கிறார்.
குடியிருப்பில் உள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக பாடம் சொல்லித் தருகிறார். விருப்பப்பட்டோருக்கு, தெரிந்த கைவேலையை சொல்லித் தருகிறார். யாரேனும் குழந்தையை விட்டுச் சென்றாலோ அல்லது யாருக்கேனும் உடல் நலமில்லை என்றாலோ, பார்த்துக் கொள்கிறார்.
சென்ற ஆண்டு வரை, அவர் இருந்த இடம் தெரியாது. இப்போது, எங்கள் குடியிருப்பில், மிக முக்கியமானவர் ஆகி, எல்லாருக்கும் நண்பராகி விட்டார்.
அவரிடம் பேசியதில், 'அவர் போய்ட்டார்; அதுக்காக, உடைஞ்சு போய் உக்கார்ந்துட்டா, யாருக்கு லாபம்... மற்றவர்களுக்கு ஒத்தாசையா இருப்பதால், துக்கம் அடங்கியிருக்கு... உறவினர்கள் வருகை மனசுக்கும் தெம்பாயிருக்கு...' என்றார்.
கஷ்டம் வரும்போது, 'தலையெழுத்தே...' என, முடங்கி விடாமல், செல்ல வேண்டிய பாதையையும், செய்ய வேண்டிய பணிகளையும் கவனமாய் தேர்ந்தெடுத்தால், அடுத்தவருக்கு உபயோகமாக, ஆரோக்கியமான வாழ்வை நம்மால் அமைத்துக்கொள்ள இயலும் என்பதை புரிய வைத்து விட்டார்.
நம் திட்டப்படி, வாழ்க்கையில் எல்லாமும் நடப்பதல்ல. கஷ்டம் வரும்போது, வதங்கி நின்று, நம்மை சேர்ந்தவரையும் துக்கம் பாதிக்க விடாமல், வந்ததை ஏற்று, அடுத்தது என்ன என யோசித்த அவரது சமயோஜிதத்தை எண்ணி, வியந்தேன்.
துக்கத்தால் துவளும் சகோதரிகளே... இனியாவது, எதிர்பாராத இழப்பு ஏற்படும்போது, துவண்டு விடாமல், உங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.
வித்யா வாசன், சென்னை.


உதவும் உதவி எண்கள்!
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.
அவர்கள் வீட்டின் சுற்றுச்சுவரில் அனைவரது பார்வையில் படும்படி காவல், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, எரிவாயு பொது வினியோகம், ஆதார், குழந்தைகள் பாதுகாப்பு, ரத்த வங்கி, செஞ்சிலுவை, நீலச்சிலுவை உள்ளிட்ட, பல உதவி எண்கள் எழுதப்பட்டிருந்தன.
உறவினரிடம் அதைப்பற்றி கேட்ட போது, 'இன்று, மக்கள் பல பேருக்கு காவல், ஆம்புலன்ஸ் தவிர, மற்ற அவசர உதவி எண்கள் தெரியவில்லை.
'அதனால் தான், சுவரில் எழுதி வைத்தாலாவது, வழியில் போகும் பலரில், ஒரு சிலருக்காவது அதைப் பார்க்கும் போது மனதில் பதிந்து அவசரமான, ஆபத்தான நேரங்களில் அது பெரிதும் உதவும்...' என்றார்.
அவரின் சேவை மனப் பான்மையை பாராட்டினேன்.
அதோடு, நானும் எங்கள் வீடு மட்டுமில்லாது. எங்கள் ஊரில், மக்கள் பார்வை படும் சில இடங்களில் எழுதி வைத்துள்ளேன். நீங்களும் இதுபோல் செய்யலாமே!
— வி.சண்முகம்,காஞ்சிபுரம்.


முதுமைக்கு துணை நிற்போம்!
உறவினர் வீட்டுக்கு சமீபத்தில் சென்றிருந்தபோது, கல்லுாரியிலிருந்து வந்த அவரது மகள், அருகிலுள்ள முதியோர் இல்லத்திற்கு அவசரமாய் புறப்பட்டு போனார்.
ஆச்சரியப்பட்டு உறவினரிடம் விசாரித்ததில், வயோதிகம் காரணமாய், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள, படிக்க, நடக்க முடியாதவர்களுக்கு, தினமும், மாலை, 6:00 மணியிலிருந்து 7:00 வரை, தோழியர் நான்கைந்து பேருடன் சேர்ந்து, அன்றைய செய்தித் தாளை வாசித்துக் காட்டுவாராம்.
மேலும், நுாலகத்தில் இருந்து, அவர்களுக்கு பிடித்த, கல்கி, ஜெயகாந்தன் மற்றும் புதுமைப்பித்தன் கதைகள், பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகளையும் வாசித்து காட்ட செல்வதாக, கூறினார், உறவினர்.
இதனால், உறவினர்களால் புறக் கணிக்கப்பட்டு, தனிமை துயரில் வாடும் அவர்களின் மனதுக்கு மகிழ்ச்சியும், புதிய விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரித்து, புது வாழ்வு பெற்றவர்கள் போல் சந்தோஷமாக உள்ளனர் என, மகள் பற்றி பெருமையுடன் கூறினார், உறவினர். அவரது மகளை, நானும் மனமார பாராட்டி வந்தேன்.
படித்த இளம் தலைமுறையினர், ஓய்வு நேரங்களில், அவரவர் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்களில், இப்படிப்பட்ட நற்செயலில் ஈடுபட்டால், கண் மூடும் கடைசி காலத்தில், மன இறுக்கத்திலிருந்து அவர்களை விடுபட வைத்த புண்ணியமாவது கிடைக்கும்.
சி.லிங்கம்மாள், மேட்டுப்பாளையம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement