Advertisement

இதோ ஒரு பெரிய கோவில்!

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலிலுள்ள லிங்கத்தையும், கலையம்சத்தையும் அடிப்படையாக வைத்து, 'பெரிய கோவில்' என்கிறோம். ஆனால், முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடி, சிவனின் அருளைப் பெற்றனர் என்ற வகையில், அருளில் பெரிய கோவில் ஒன்றும் தமிழகத்தில் இருக்கிறது. அதுதான், கும்பகோணம் அருகிலுள்ள திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோவில்!
லோககாந்தா என்பவள், உடல் இச்சை மிக்கவளாக இருந்தாள். திருமணமான பின், பல ஆண்களுடன் தொடர்பு கொண்டாள். இதை, அவளது கணவன் கண்டித்தான். தன் செயலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்று, விலைமாதாகவே மாறினாள். ஆனால், உடலும், அழகும் எத்தனை நாள் நிலைக்கும்...
காந்தாவின் அழகு குறைந்தது, யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை; வறுமையில் தவித்தாள். கணவனை கொன்று, இஷ்டப்படி நடந்து கொண்டதன் விளைவே, தன் கஷ்டத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தாள். கஷ்டம் வரும்போது தானே கடவுளின் நினைவு வரும்... முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒன்று கூடி, சிவனை வழிபட்ட பெருமைக்குரிய தலமான திருக்கோடிக்காவலுக்கு வந்தாள்.
சிவனை வணங்கி, உருகி உருகி அழுதாள்; பாவத்துக்கு மன்னிப்பு கேட்டாள்; அங்கேயே இறந்தும் போனாள். எம துாதர்கள் அவளுக்கு தண்டனை கொடுக்க, அங்கு வந்தனர். அதற்குள், அவளை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்று விட்டன, சிவகணங்கள். பாவியான அவளை சிவலோகத்திற்கு கொண்டு வர என்ன காரணம் என்று சிவனிடம் கேட்டான் எமன். அதற்கு சிவன், 'பாவம் செய்த உயிர்கள், உண்மையிலேயே மனம் திருந்தினால், அவர்களுக்கு மன்னிப்பு உண்டு; இது, காசியை விட மேலான தலம் என்பதோடு, தன் தவறு உணர்ந்து கண்ணீரால், அவள் மனதை புனிதப்படுத்தியதால், அவளது பாவம் மன்னிக்கப்பட்டது...' என்றார்.
ஒரு சமயம், கைலாய மலையையும், திருக்கோடிக் காவலையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, திருக்கோடிக்காவல் உயர்ந்து, கைலாயம் கீழே போய் விட்டது. கைலாயம் செல்ல முடியாதோர், திருக்கோடிக்காவல் சிவனை வணங்கினாலே, கைலாயம் சென்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசையன்று இங்கு செல்வது சிறப்பு.
இங்குள்ள சிவனை, கோடீஸ்வரர் என்பர்; சதுர பீடத்திலுள்ள இந்த லிங்கத்தின் பாணம் உயரமாக இருக்கிறது. இங்குள்ள கரையேற்று விநாயகரை சதுர்த்தி திதி நாளில் வழிபட்டால், நம் கஷ்டங்களை களைந்து கரையேற்றுவார். பிரம்பு மரம், தல விருட்சமாக இருக்கிறது. சிருங்க தீர்த்தம் மற்றும் காவிரி நதி, தல தீர்த்தங்களாக உள்ளன.
இங்கு, சிறிய வடிவில் பால சனீஸ்வரர் என்ற பெயரில் உள்ளார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது விசேஷத்திலும் விசேஷம். காக வாகனத்திற்கு பதில், கருட வாகனம் இருக்கிறது. லட்சுமியின் சகோதரியான ஜேஷ்டாதேவி, துர்வாசர், எமதர்மன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. மூலவரின் கருவறை வெளிச்சுவரில், கூத்தபிரான் எனப்படும் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் இருக்கிறார். அவரது வலதுபுறம் பேய் உருவில் காரைக்கால் அம்மையார் தாளமிடும் சிற்பம் உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை, சூரியனார்கோவில், கஞ்சனுார் வழியாக, 24 கி.மீ., கடந்தால் திருக்கோடிக்காவலை அடையலாம். சூரியனார்கோவிலும், கஞ்சனுார் சுக்கிரபுரீஸ்வரர் கோவிலும் நவக்கிரக தலங்களாகும். ஒரே நேரத்தில் மூன்று கோவில்களையும் தரிசித்து வரலாம்.

தி.செல்லப்பா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement