Advertisement

இளஸ்.. மனஸ்.. (129)

அன்பு சகோதரி ஜெனிபருக்கு, அன்பு அக்கா எழுதிக் கொண்டது. என்னோட மன பாரத்தை யாரிடம் கொட்டுவது என்று தவித்துக் கொண்டிருந்த போது, நீ தான் சரியான நபர் என்பதால், இதை எழுதுகிறேன். தங்கச்சி, நீ மட்டும் அருகில் இருந்தால், உன் மடியில் விழுந்து கதறிடுவேன்.
'என் தம்பி... தம்பி...' என்று உருகிக் கொண்டிருந்த உதவாக்கரையை, என் வீட்டில் வைத்திருந்தேன். என் கணவர் எவ்வளவு சொல்லியும் பாசத்தில் கேட்காமல் இருந்தேன். அந்த நாய், என், 11 வயது மகளை... இதற்கு மேல் என்னால் சொல்ல முடியவில்லை...
என் மகள், அவனைப் பற்றி சொல்ல வரும்போதெல்லாம், அவளைத் திட்டி துரத்தினேன். பிறகு, உண்மை அறிந்து, துடித்து, தவித்துப் போனேன்.
மகளை, மருத்துவரிடம் அழைத்துச் சென்று, உறுதியும் செய்துக் கொண்டோம். அவளுக்கு, பல ஆலோசனைகள் கூறினர். நானும், 'நடந்த விஷயத்தை மறந்துடு மகளே... நீ மிகவும் பரிசுத்தமானவள்...' என்று சொல்லி, மிகவும் பாதுகாத்து வருகிறோம்.
தற்போது, மகளின் வயது, 15; பத்தாம் வகுப்பு படிக்கிறாள்; அடிக்கடி சோர்ந்து போகிறாள்; எதையோ பறிகொடுத்தவள் போல் இருக்கிறாள். பள்ளியிலும் அப்படித் தான் நடந்துக் கொள்கிறாளாம்... தோழிகளிடம், 'சிடு...சிடு...ன்னு விழறாள்...' என்கின்றனர். ஏன், என்று கேட்டால் பதிலே சொல்வதில்லை. எதற்கெடுத்தாலும் கோபப்படுறா... படிப்பில் ஆர்வமே இல்லை.
அவள் மனதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நான் என்ன பண்ணட்டும் சகோதரி. இதனால், எங்கள் இருவருக்கும் இடையில் சண்டை வருகிறது... 'ஒரே மகளோட வாழ்க்கையைக் கெடுத்துட்டானே உன் தம்பி...' என்று சொல்லி, பயங்கரமாக சண்டை போடுறார் என் கணவர். வாழ்க்கையே வெறுத்துப் போகிறது சகோதரி... என்ன செய்வது என்று சொல்லுடா...

அன்பு அக்கா... முதலில், அழுகையை நிறுத்துங்க... பூ போன்ற மகளோட வாழ்க்கையை, தம்பி பாசத்தால் அலங்கோலமாக்கிட்டீங்க... உங்களை என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியல... இப்படி பிள்ளைகள் மீது கவனமில்லாமல், இன்னும் எத்தனை பெற்றோர் இருக்கிறீர்கள் என்றும் எனக்குப் புரியவில்லை.
இந்த மாதிரி பாதிக்கப்படும் சிறுமிகள், ஒன்று தங்களையே வெறுப்பர், தங்கள் உடலை வெறுப்பர் அல்லது ஆண் இனத்தையே வெறுப்பர்; அவர்களுக்குள், ஒரு விதமான குற்ற உணர்ச்சி சிறு வயதிலேயே வந்து விடும். அதை எல்லாம் நம்முடையை ஆறுதலான வார்த்தைகள் தான் தேற்ற முடியும். காரணம், மனம் சார்ந்த இந்த காயங்கள் அவ்வளவு சீக்கிரம் ஆறுவதில்லை. இது, காலம் காலமாக இருக்கக் கூடியது.
இன்னொரு பக்கம் இந்தச் சிறுமியர் வேறு விதமாக பாதிக்கப்படுவதை நாம் புரிந்துக் கொள்வதில்லை. அதாவது, ஒரு சில குழந்தைகள், 'செக்ஸ்'க்கு அடிமையாகி விடுவர். சிறுவயதிலேயே, இந்த காரியத்தை அடிக்கடி பழகி விடுவதால், அதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகமாகி விடும், அதை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பர் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது எவ்வளவு பெரிய கொடூரம்... பெற்றோரது அலட்சியத்தால், நம் பிள்ளைகளின் வாழ்க்கை, எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை யோசித்துப் பாருங்க. திருமணம் ஆன பின், பல விதமான பிரச்னைகள் வரும். இதை எல்லாம், என்றாவது யோசித்தீர்களா... குற்றவாளிக்கு இதனால் தான், கொடூர தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறோம்.
என் கணிப்பின்படி, உங்கள் மகளுக்கும், அந்த தூண்டுதல் அதிகமாகியிருக்கலாம். அதனால் ஏற்படும் ஆதங்கம், எரிச்சலில் சளிப்புடன் காணப்படுகிறார். அக்கா, உங்கள் மகளை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர்களிடம் மனம் விட்டு பேசுவர். அவர்கள் தான், இதற்கு சரியான ஆலோசனை தர முடியும். அத்துடன், மகளுக்கு திருமண வயது வந்ததும், சீக்கிரமாக திருமணம் செய்து வைத்து விடுவது மிகவும் நல்லது.
பெற்றோரே... மன பாரத்துடன் சொல்கிறேன்... எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது நலம். ஆண் குழந்தை தானே என நினைத்து, அவர்களை, உறவினர், நண்பர்களை நம்பி விட்டுச் செல்லாதீர்கள். எங்குச் சென்று வந்தாலும் என்ன நடந்தது என்பதை பிள்ளைகளிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
'எப்படிப் பட்ட விஷயம் நடந்தாலும், மம்மி, டாடி இருக்கோம்; நாங்க பாத்துக்குவோம்; நீங்க பயப்படாம எது நடந்தாலும் எங்க கிட்ட சொல்லிடுங்க...' என்பதை, குழந்தைகள் மனதில், ஆழ பதித்து விடுவது நல்லது.
உங்கள் பிள்ளைகள் பயமின்றி, எல்லா விஷயங்களையும், உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்; அப்படிப்பட்ட உறவு, உங்கள் இருவருக்கும் இடையில் இருப்பது நல்லது. பிள்ளைகளை வளர்க்க தகுதியில்லையா... அப்போ குழந்தையே பெத்துக்காதீங்க!
- மிகுந்த மன பாரத்துடன்,
ஜெனிபர் பிரேம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement