Advertisement

தூக்கம் வரல!

சிங்கராஜாவுக்கு, பல நாட்களாக, இரவில் சரியாக துாக்கம் வருவதில்லை. எல்லா விலங்குகளும், இது பற்றி தான் பேசிக்கொண்டன.
அமைச்சர் யானைக்கு, இது பெரும் தலைவலியாக இருந்தது. எதை கேட்டாலும், சிங்கம், சிடுசிடுத்து, எரிந்து விழுந்தது. இதற்கு தீர்வு காண, தீவிரமாக முயன்ற யானைக்கு, திடீரென, ஒரு யோசனை தோன்றியது. 'சிங்கராஜாவை உறங்க வைத்தால் பரிசு அளிக்கப்படும்...' என, அறிவித்தது. இதை கேட்ட விலங்குகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
'முயற்சி செய்து பார்க்கலாம்' என்று, காட்டெருமை வந்தது.
''ராஜா... இந்த சூடான பாலை குடியுங்க... துாக்கம், கண்ணை சுழற்றி வரும்...'' என்று, ஒரு குவளை பாலை கொடுத்தது. வாங்கி குடித்த சிங்கம், மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தது.
அடுத்து வந்த குரங்கு, ''சிங்க ராஜா உடலெங்கும், இந்த தைலம் தடவி, இளஞ்சூடான வெந்நீரில் குளிங்க... நல்லா துாக்கம் வரும்...'' என்று, ஒரு பாட்டில் தைலத்தை கொடுத்தது.
அதை, சிங்கத்தின் உடலெங்கும், தேய்த்து விட்டது, யானை. சற்று நேரத்தில், வெந்நீரும் தயாரானது; சுகமான குளியல் போட்டு, கட்டிலில் படுத்தது சிங்கம். உடலுக்கு புத்துணர்ச்சி வந்தது போல் இருந்ததே தவிர, உறக்கம் வரவில்லை; குரங்கின் முயற்சியும், பலன் கொடுக்கவில்லை.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த மயில், தோகையால் மிருதுவான விசிறி ஒன்றை தயாரித்தது. அதை எடுத்து வந்து சிங்கத்திடம் கொடுத்து, ''மன்னா... இந்த விசிறியால் விசிறிக் கொள்ளுங்கள்; நன்றாக துாக்கம் வரும்...'' என்று சொன்னது.
மயில் தோகை விசிறியால், நன்கு விசிறியது சிங்கம்; பலனளிக்கவில்லை. இரவெல்லாம் கொட்ட கொட்ட விழித்திருந்தது.
அடுத்தடுத்து, விலங்குகள் தெரிந்த யோசனைகளையும், மருந்துகளையும் சொல்லின. 'நிம்மதியாக சிலமணி நேரம் துாக்கம் வராதா' என்று தவித்த சிங்கம், அவற்றை கடைப்பிடித்து பார்த்தது. எதுவும் பலன் தரவில்லை. இதனால், கடும் கோபம் கொண்டது.
''எவராலும், பிரச்னையை தீர்க்க முடியவில்லை... இனி என் கண் முன் யார் வந்தாலும் அடித்துக் கொன்று விடுவேன்...'' என்று, கர்ஜித்த சிங்கம், குகைக்குள் போய் விட்டது.
வெளியூர் சென்றிருந்த நரி, சில மாதங்களுக்குப்பின் அன்றுதான் திரும்பி வந்தது. நரியை கண்ட விலங்குகள், சிங்க ராஜாவின் துாக்கமின்மை பற்றி கூறின.
சிறிதுநேரம் அப்படியும், இப்படியும் உலாவிய நரி, நிதானமாக யோசித்து, ''சரி... சிங்கராஜாவின் பிரச்னையை தீர்க்கிறேன்...'' என்று கூறியது. பின் மெதுவாக சிங்கம் தங்கியிருந்த குகை வாசலுக்கு சென்று, பவ்யமாக அழைத்தது. கோபத்தில் உறுமியபடி வந்த சிங்கம், ''எதற்காக வந்தாய்... ஓடிப்போயிடு'' என்று கர்ஜித்தது.
அதற்கு அஞ்சாத நரி, மிகவும் பணிவாக, ''மன்னா... இன்று தான், வெளியூரிலிருந்து திரும்பி வந்தேன்; உங்க பிரச்னையை கேள்விப்பட்டேன்; அதை தீர்க்கும் உபாயத்துடன் வந்திருக்கிறேன்...'' என்றது.
பல நாட்கள் துாங்காததால், கண்கள் சிவந்து வெறி கொண்டு இருந்த சிங்கம், ''சரி... உன் மருத்துவம், வேலை செய்யாவிட்டால், கொன்று விடுவேன்...'' என்றது.
''மன்னா... உங்களுக்கு, நான் மருத்துவம் செய்ய போவதில்லை; என் தாத்தா இந்த மலை உச்சியில் வசிக்கிறார்; அவர் அனுபவமுள்ள மருத்துவர். எந்த நோயையும் குணமாக்கி விடுவார்! நீங்கள் சம்மதித்தால், அவரிடம் அழைத்து செல்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை; நீங்க தனியாகத்தான் வர வேண்டும்...'' என்றது நரி.
'எப்படியேனும், இரவில் துாங்கினால் போதும்' என்று நினைத்த சிங்கம், சம்மதித்தது.
மறுநாள் -
அதிகாலை, சிங்கமும், நரியும் நடந்தே மலையடிவாரத்தை அடைந்தன; பின், செங்குத்தான மலை மீது ஏறின. எந்த வேலையும் செய்யாமல் ராஜபதவியை சிங்கம் அனுபவித்ததால், மலையேற மிகவும் சிரமப்பட்டது; பலமணி நேரம் போராடி, உச்சி நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்தது.
உச்சியை அடைந்ததும், ஒரு மரம் அருகே சென்ற நரி, அப்போது தான் நினைவுக்கு வந்தது போல, ''ஐயோ... மறந்தே போய் விட்டேன்... என் தாத்தா வெளியூர் சென்றுவிட்டார். சிரமம் பார்க்காமல், நாளை வரலாமா... கோபப்படாதீங்க சிங்க ராஜா... நாளை வந்தால் நிச்சயம் மருந்து வாங்கலாம்,'' என்றது.
சிங்கத்திற்கு, கடுங் கோபம் வந்தது. நரியை கடுமையாக திட்டியது. பின், மலையிலிருந்து இறங்கி, காட்டிற்கு வந்து சேர்ந்தன. சிங்கம் குகைக்குள் சென்றது. மறுநாள் வருவதாக கூறி புறப்பட்டது நரி.
மறுநாள் -
அதிகாலை, சிங்க ராஜாவை தேடி வந்த நரிக்கு, குகைக்குள் குறட்டை சத்தம் கேட்டது. ''மன்னா... மருத்துவர் தாத்தாவை பார்க்க போலாமா...'' என்று உரக்க கூவியது நரி; பதில் எதுவும் வரவில்லை. மீண்டும் குரலை உயர்த்தி அழைத்தது, நரி.
அப்போது தான் சோம்பல் முறித்த சிங்கம், ''வேண்டாம்... வேண்டாம்... இரவு என்னை அறியாமலேயே, நன்றாக உறங்கி விட்டேன். மலை ஏறியதால் கடும் களைப்பாக இருக்கிறது. சரி... உண்மையை சொல்! மலை உச்சியில், உன் தாத்தா இருக்கிறாரா...'' என்றது.
''மன்னா... என்னை மன்னித்து விடுங்கள்... எனக்கு தாத்தா எவரும் இல்லை! பொய் சொல்லித் தான், மலை உச்சிக்கு அழைத்துப் போனேன். நீங்கள் மன்னர் பதவியில் இருப்பதால், உடல் களைக்க வேலை செய்வதில்லை... சும்மா சாப்பிட்டு உட்கார்ந்திருந்தால், எப்படி துாக்கம் வரும். இதை, சொல்ல பயந்து கொண்டிருந்தனர். நான், துணிச்சலுடன் முயன்றேன்; அதற்கு வெற்றி கிடைத்து உள்ளது...'' என்று பணிவுடன் கூறியது.
''நரியாரே... மன்னிக்க வேண்டிய அவசியமே இல்லை! என் சோம்பலையும், கர்வத்தையும் புரிய வைத்த உனக்கு, நான்தான் நன்றி சொல்ல வேண்டும். இனி, நானும் உழைக்கப் போகிறேன்...'' என்று கூறிய சிங்கம், நரிக்கு, மதிப்புமிக்க பரிசுகள் கொடுத்து பாராட்டியது.
குட்டீஸ்... எப்போதும் உண்மையை உணருங்கள்; மற்றவர்களுக்கும் உணர்த்தி வாழுங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement