Advertisement

பாப்பாக்களுக்கு பிடிச்ச பாப்பா!

குழந்தைகளுக்கு பிடித்த முதல் கடவுள், பிள்ளையார்! எளிமையே வடிவானவர்!
பிள்ளையார் வழிபாடு, எளிமையானது. கல், மண், மரம் மற்றும் செம்பு போன்றவற்றால், இறைவன் திருவுருவங்களை உருவாக்க வேண்டும் என, ஆகமங்கள் கூறுகின்றன.
ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்றவற்றாலும் உருவாக்குகின்றனர்.
முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள் எருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் போன்றவற்றாலும், விநாயகர் வடிவம் அமைக்கலாம்.
இதை தான், 'பிடித்து வைத்தால் பிள்ளையார்' என, வேடிக்கையாக சொல்வர்.
புற்றுமண், அரைத்த மாவு, சாளக்கிராமம் ஆகியவற்றை, ஒரு கைப்பிடி பிடித்தாலே, அது பிள்ளையாராகி விடும்.

மகாராஷ்டிராவில் விநாயகர்!
விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது, மகாராஷ்டிராவில் தான். அங்கு, கணேஷ் சதுர்த்தி என்று, பிரம்மாண்டமாக விழாக் கொண்டாடுவர். 10 நாட்களுக்கு மேல், பக்திப் பரவசத்தில் மிதப்பர்.
இங்கு, குலதெய்வமாகவும், வெற்றி தரும் கடவுளாகவும், விநாயகர் விளங்குகிறார். திரும்பிய இடமெல்லாம், கோவில், வழிபாடு நிகழ்வதை காண முடியும். மங்கள்வார் என்னும் செவ்வாய்க்கிழமை, உகந்த நாளாக உள்ளது. தரிசனம் செய்ய அன்று திரளாக, விநாயகர் கோவிலுக்குச் செல்வர்.
கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய பிரசாத வகைகளோடு, பர்பி, லட்டு, பால்பேடா போன்றவற்றையும், நிவேதனமாகப் படைப்பர்.
விநாயகர் சதுர்த்தி அன்று, வித விதமான திருவுருவச் சிலையை, மண்ணால் செய்து, வீதிகளில், 10 நாட்கள், வைத்திருப்பர். பின், மேளதாளங்களுடன் ஆடிப்பாடி எடுத்துச் சென்று, கடல், ஆறு, குளம் போன்றவற்றில் கரைப்பர்.


எளிமையான நிவேதனம்!
மோதகம், கரும்பு, அவல், பொரி... இந்த பொருட்களுக்குள், பெரும் தத்துவம் அடங்கியுள்ளது. அதை, தெரிந்து படைத்தால், வாழ்க்கை வளமாகும்.

மோதகம்!
வெளிப்பகுதி, வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் வண்ண இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்தால், கண்ணுக்கு தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவ அடிப்படையில் படைக்கப்படுகிறது.

கரும்பு!
கடிப்பதற்கு கடினமானாலும், இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான்... 'கஷ்டப்பட்டால், இனிமை காணலாம்' என்ற தத்துவப்படி படைக்கப்படுகிறது.

அவல், பொரி!
ஊதினாலே பறக்க கூடியவை. வாழ்க்கையில், சந்திக்கிற துன்பங்களை, ஊதி, தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


எப்படி வந்தது...
விநாயகர் சதுர்த்தி விழா, மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜி ஆட்சி காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாசார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும், தொடர்ந்துள்ளது.
பின், மகாராஷ்டிரா மாநிலத்தில், குடும்ப விழாவாக மாறி விட்டது. வீடுகளிலும், பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்தனர். தேசிய விடுதலை போராட்ட காலத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான, பாலகங்காதர திலகர், பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.
அதன்பின் தான், வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை வைத்து, பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடுகின்றனர். ஏழைகளுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும் வழங்குகின்றனர்.
தமிழகத்தில், விநாயகர் சதுார்த்தி குடும்ப விழாவாகவே மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது.
வெகு காலத்திற்கு பின், பொது விழாவானது. களிமண் சிலைகளை, வண்ண குடையுடன் வாங்கி வந்து, அருகம்புல், செவ்வந்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது, வீடுகளில் வழக்கம்.
ஐங்கரனுக்கு விருப்பமான, கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல் மற்றும் பொரி என, நிவேனதனங்கள் படைக்கின்றனர். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டு மற்றும் ஆப்பிள் என, பிரியமுடன் அளிக்கின்றனர்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement