Load Image
dinamalar telegram
Advertisement

அந்த நாளும் வந்திடாதோ!

“இந்த வீட்டுப் பாடத்தை யார் மிஸ் கண்டுபிடிச்சது. என் கையில அவன் கிடைச்சான்னா, பீஸ் பீஸா ஆக்கிடுவேன்.” என்று ஓவியா உமா மிஸ்ஸிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோது, நான் அருகே இருந்தேன். அவளது கோபத்துக்குக் காரணம் எனக்குத் தெரியும்.
தொடர்ச்சியாக நான்கைந்து நாட்களாக அவளது வகுப்பு ஆசிரியர் நிறைய எழுதும் வேலை கொடுத்திருந்தார். அதையும் அடுத்தடுத்த நாட்களே எழுதிக் கொண்டு வந்து வகுப்பில் சமர்ப்பிக்க வேண்டும். ஒருநாள் ஒரு கட்டுரை, அடுத்த நாள் ஒரு கடிதம், மற்றொரு நாள் புவியியலில் நான்கைந்து கேள்விகள்.

இதையெல்லாம் எழுதிவிட்டு, படுக்கப் போவதற்குள் இரவு பதினொன்று ஆவதாகச் சொன்னாள். வீட்டுப் பாடங்களை எழுதவேண்டும் என்பதற்காக, அவள் வழக்கமாகப் போய்க்கொண்டிருந்த வயலின் வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டாள். இரண்டு திருமணங்களுக்குப் போக முடியவில்லை. அவளை வீட்டில் தனியே விட்டுவிட்டுப் போக முடியாது என்பதால், அப்பா மட்டும் திருமணத்துக்குப் போனார். அம்மா, ஓவியா அருகிலேயே அமர்ந்துகொண்டிருந்தார். தன்னால் தான் அம்மாவால் திருமணத்துக்குப் போக முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி வேறு ஓவியாவைச் சிரமப்படுத்தியது.
எரிச்சல் வராமல் என்ன செய்யும்?
“எப்போ வீட்டுப் பாடம் ஆரம்பிச்சதுன்னு தெரியலை. ஆனால், அதைப் பத்தி நிறைய ரிசர்ச் நடந்திருக்கும். உதாரணமாக, 1957இல் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை அமெரிக்கா விண்ணில் ஏவியது. அதிலிருந்து கணிதத்தின் மீதும், அறிவியலின் மீதும் அமெரிக்கர்களுக்கு திடீர் ஆர்வம் தோன்றியது. இந்தத் துறைகளில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. நிறைய பேர் படிக்க வந்தார்கள். போட்டி மிகுந்தது. அப்போது, இன்னும் கூடுதலாக நேரம் செலவிட ஆரம்பித்தார்கள். அதுதான் 'ஹோம் ஒர்க்' ஆரம்பித்ததற்கான தொடக்கப் புள்ளி என்று 'டைம்' பத்திரிகை ஒரு கட்டுரையே போட்டிருக்கு.”
“ஓ! இதுவும் அமெரிக்காவுலேருந்துதான் இறக்குமதி ஆச்சா மிஸ்?” என்றேன் நான். உமா மிஸ் சிரித்துக்கொண்டே, வேறு சில விஷயங்களைச் சொல்லத் தொடங்கினார்.
''வீட்டுப் பாடம் செய்வதால் கூடுதல் மார்க் கிடைக்குமா? நன்றாகப் படிக்க முடியுமா? என்று நடந்த ஆராய்ச்சிகளில் முக்கியமான விஷயங்கள் வெளிவந்துள்ளன. நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு வரை, வீட்டுப் பாடத்தால் எந்தப் பயனும் இல்லை. அங்கே அவர்கள் கற்றுக்கொள்வது எல்லாம் சுற்றி இருக்கும் இயற்கையிடமிருந்தும், ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதில் இருந்தும்தான். எழுதிப் பார்த்து, புரிந்துகொள்வதற்கான தேவை அங்கே இல்லவே இல்லை. இதனால் தான் பல நாடுகளில், ஆரம்ப வகுப்புகளில் வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்று சட்டமே இருக்கிறது.''
“நம்ம சென்னை உயர் நீதிமன்றம்கூட சமீபத்தில் ஒன்றாம், இரண்டாம் வகுப்புகளுக்கு ஹோம் ஒர்க் கொடுக்கக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறதே, தெரியுமா?”
“பிரகாஷ் ஜவடேகர்கூட வரவேற்றிருக்காரே மிஸ். விரைவில் அதற்கான நெறிமுறை ஏற்படுத்தப்படும் என்று சொல்லியிருக்கார்.”
“ஆமாம். ஆனால், 6ஆம் வகுப்புலேருந்து வீட்டுப் பாடங்களுக்கு ஓர் இடம் இருக்கு. பொதுவாக, ஒரு மணிநேரம் வரை வீட்டுப் பாடம் செய்யலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கு. பல பள்ளிகளில், இந்த வரைமுறை பின்பற்றப்படுவதில்லை. இரண்டு, மூன்று மணிநேரங்கள் ஹோம் ஒர்க் செய்ய வைத்துவிடுகிறார்கள்.” என்றார் உமா மிஸ்.
“அவ்வளவு நேரம் செய்தால், மனசில் பதியுமா மிஸ்?”
“அதுதான் முக்கியமான கேள்வி. ஹோம் ஒர்க்கோட நோக்கமே, மனத்தில் ஆழமாகப் பதிய வேண்டும் என்பதுதான். ஆனால், பல மணிநேரங்கள் வீட்டுப்பாடங்களை எழுதினால், மாணவர்கள் மனத்தில் அது பதிவதே இல்லை. அவர்கள் கடனே என்று எழுதிக் கொடுத்துவிடுகிறார்கள். அல்லது, வேறெங்கோ இருந்து, காப்பி அடித்து, மெக்கானிக்கலாக எழுதிவிடுகிறார்கள். உரிய பலன் கிடைப்பதில்லை என்பது இன்னொரு கண்டுபிடிப்பு.''
அதைவிட, ஹோம் ஒர்க் அதிகம் கொடுப்பதால் ஏற்படும் இதர பாதிப்புகள் தான் அதிகம். மாணவர்கள் வேறு வேலையே செய்வதில்லை. வீட்டுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்வதோ, அம்மாவோடு கூடமாட ஒத்தாசை செய்வதோ இல்லாமலே போய்விட்டது. வெளியே கடைகண்ணிக்குப் போவதில்லை. சமூக ரீதியாக அவர்களுக்கு இருந்த சின்னச்சின்ன தொடர்புகளைக்கூட வீட்டுப்பாடம் விழுங்கிவிட்டது. எப்போதும் எழுத்து, படிப்பு என்று முடங்கிப் போகிறார்கள். இதனால், உடல்நல பாதிப்புகளும் அதிகம். விளையாட்டு சுத்தமாக மறந்தே போய்விட்டது என்பதுதான் சோகம்.
இன்னொரு பெரிய சோதனை, பெற்றோர்களுக்கு. ஓர் ஆய்வு முடிவு சமீபத்தில் வந்திருக்கிறது. இந்தியப் பெற்றோர்கள்தான் வாரத்துக்கு 12 மணிநேரம் வரை, பிள்ளைகளோட ஹோம் ஒர்க் செய்ய உதவுகிறார்களாம். ஜப்பானில் உள்ள பெற்றோர் வாரத்துக்கு 2.30 மணிநேரம் தான் பிள்ளைகளோடு வீட்டுப்பாடம் செய்ய உதவுகிறார்கள்.”
“அப்ப இதுக்குத் தீர்வே இல்லையா மிஸ்?” மிகவும் நொந்து போய் கேட்டாள் ஓவியா.
“எதை வீட்டுப் பாடமாகக் கொடுக்கணும்ங்கறதுலதான் சுவாரசியம் இருக்கு. நீங்களே விருப்பத்தோடு ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சு எழுதறது, தேடித் தொகுத்து எழுதறது மாதிரியான கிரியேட்டிவ் வேலைகளை ஹோம் ஒர்க்கா கொடுத்தா, உங்களுக்குச் சுவாரசியமா இருக்கும். சிரமம் பார்க்காமல் அதை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வீர்கள்.
அறிவுத் தேடலும் இருக்கும். மறுநாள் அதன் மூலம் ஓர் அங்கீகாரமும் வகுப்பறையில் கிடைக்கும் என்றால், இன்னும் கூடுதல் உற்சாகமும் ஏற்படும். பல சமயங்களில், வீட்டுப் பாடம் என்பது ரிபிடிஷனாக, செஞ்சதையே திரும்பத்திரும்பச் செய்வதாக இருக்கும்போது தான் 'போர்' அடிக்கிறது, எரிச்சல் ஏற்படுகிறது.”
வீட்டுப் பாடங்களும் சுவாரசியமாக இருக்க முடியும் என்பதே எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த நாளும் வந்திடாதோ என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன்!

அட, ஆச்சரியப் பள்ளி

இயற்கையோடு கல்வி!
உங்கள் வகுப்பறைக்குப் பக்கத்திலேயே பெரிய தோட்டம் இருந்தால் எப்படி இருக்கும்? அறிவியல் வகுப்பில் படிக்கும் தாவரங்களை அங்கேயே விதைத்து, வளர்த்து, பார்த்துக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? எல்லாமே நேரடி அனுபவமாகவே இருக்கும் இல்லையா? இதைத்தான் டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் உள்ள நியூ ஐலண்ட் பிரிக்கே பள்ளி, மாணவர்களுக்குச் செய்து கொடுத்துள்ளது. இயற்கையோடு இணைந்த கல்வி என்பது இதுதானோ?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement