Advertisement

கனவுகளைத் துரத்த காலம் தடையில்லை!

எத்தனையோ பேர் அதிகாரத்துக்கும், பெரும் பதவிக்கும் வருகின்றனர். ஆனால், அதில் ஒரு சிலர்தான் நம்மை திரும்பிப் பார்க்க வைப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான், சிவகுரு பிரபாகரன், ஐ.ஏ.எஸ். பட்டுக்கோட்டை பக்கத்தில் உள்ள மேலவட்டங்காடு கிராமத்தின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்ப வறுமையால் பிளஸ் 2வுக்குப் பிறகு படிக்க முடியாமல் நான்கு ஆண்டுகள் வேலை பார்த்தார். படித்து எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற தாகம், அவரை இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர வைத்தது. பின்னர், கேட் தேர்வு பாஸ் செய்து, ஐ.ஐ.டி.யில் பொறியியல் முதுகலை படித்தார். அங்கிருந்தபடியே, ஐ.இ.எஸ். தேர்வெழுதி ரயில்வே அதிகாரியாக ஆனார். அத்துடன் விடாமல், குடிமைப் பணித் தேர்வை இரண்டுமுறை எழுதி, தற்போது அனைத்திந்திய அளவில் 101வது ரேங்க் பெற்று ஐ.ஏ.எஸ்.ஆக தேர்ச்சி பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து, சுத்தமாக ஆங்கிலம் தெரியாமல் ஐ.ஐ.டி. வரை சென்று, தற்போது ஐ.ஏ.எஸ். ஆகியுள்ள சிவகுரு பிரபாகரனிடம் பேசினோம்:

பிளஸ் 2வுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் தடைப்பட்டதே? மீண்டும் படிக்க வயது தடைக்கல்லாக இல்லையா?
என்னைப் போலவே, என் நண்பர் ஒருவரும் பிளஸ் 2வுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் படிக்காமல் இருந்துவிட்டார். அதன்பிறகு கெளன்சிலிங்கில் பங்கேற்ற அவருக்கு, கோயம்புத்தூரில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. வயதில் குறைந்த மாணவர்களுடன் எப்படிப் படிப்பது என்ற மனத்தடையால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. படிப்பாலும், உழைப்பாலும் சாதிக்க முடியும் என்று நம்பினேன். என்னைப் பார்க்கும்போது, அவர் தவறான முடிவு எடுத்துவிட்டதாக வருத்தப்படுகிறார்.

பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்துவிட்டு, மேல்படிப்பில் எப்படிச் சமாளித்தீர்கள்?
ஐ.ஐ.டி.யில் சென்று படித்தபோது, ஆங்கிலத்தைத் தப்பும் தவறுமாக எழுதி, அதனால் அவமானமும் பட்டிருக்கிறேன். அதேசமயம், முயற்சி செய்து ஆங்கிலத்தைத் தவறாகப் பேசினாலும் அதை வரவேற்க மற்றவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ். தேர்வில் என்னை ஆங்கிலத்தில் நேர்காணல் செய்தவர்களிடம், ''May i take 30 seconds' என்று கேட்டேன். நிதானமாக யோசித்துவிட்டு பதில் சொல்லுங்கள் என்றனர். அவசரத்துடன் எதையுமே பேச வேண்டியதில்லை. நம் கருத்துகளை வெளிப்படுத்த சாதாரண அளவில் ஆங்கிலத்தில் பேசினாலும் மதிப்பெண் உண்டு.

பயிற்சி நிறுவனங்களுக்கு நிறைய செலவிட வேண்டுமா? எப்படி அதைச் சமாளித்தீர்கள்?
நான் ஐ.ஐ.டி.க்காக படித்த பயிற்சி நிறுவனத்தில் எல்லா பாடங்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியர்தான். சில முன்னணி பயிற்சி நிலையங்களைச் சொல்லி, இங்கு படித்தால்தான் சாதிக்க முடியும் என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. வெற்றி பெற்ற பக்கத்தில் நிற்பதைவிட, எங்கு நிற்கிறோமோ அந்தப் பக்கத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது என் கொள்கை. நான் படித்தகாலத்தில், 13 ஆயிரம் ரூபாய்தான் பயிற்சிக் கட்டணம். ஆனால், என்னால் 5 ஆயிரம் ரூபாய் தான் கொடுக்க முடிந்தது.
அதைக் கொடுத்திருக்கா விட்டாலும் என் ஆசிரியர் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார். இப்படியான அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், நண்பர்கள்தான் என் வெற்றிக்கு பின்புலமாக இருந்தவர்கள். படிக்கும் காலத்தில், என் தேவைகளைச் சுருக்கிக்கொண்டேன். படிப்பில் மட்டும்தான் என் முழுக்கவனமும் இருந்தது. பயிற்சிக்காகச் சென்னை வரும்போதெல்லாம், இரவு நேரத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் தான் தூங்குவேன். முயற்சியின் பாதையில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த பிறகு உங்கள் லட்சியம் என்ன?
பெண்கள் முன்னேற்றம் மற்றும் அடிப்படைக் கல்விக்கான ஊக்கம். குடிப்பழக்கம் காரணமாக என் தந்தை குடும்பத்தைக் கவனிக்கவில்லை. அம்மா, பாட்டி, அக்கா போன்றோர் எனக்கு ஆதரவாக இருந்த காரணத்தினாலேயே என்னால் படிக்க முடிந்தது. அதனால், பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். இரண்டாவது, கல்வி. அதுதான், வறுமை நிலையிலிருந்த என்னை உயர்த்தியது.

நீங்கள் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?
என் வாழ்வில் பல நல்ல மனிதர்கள் உதவியுள்ளார்கள். என் குடும்பத்தினர் தவிர, நண்பர்கள், வழிநடத்திய ஆசிரியர்கள் செய்த உதவிகள் கொஞ்சநஞ்சமல்ல; தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, வடமாநில நண்பர்களும் என் மீது அவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறார்கள். பீகாரைச் சேர்ந்த சௌரப், பஞ்சாபைச் சேர்ந்த அம்ரிக் சிங் போன்றோர் எந்த நம்பிக்கையில் எனக்குப் பொருளாதார உதவி செய்திருக்கிறார்கள் என்று எனக்கு நானே கேட்டுப் பார்த்துக் கொள்வதுண்டு. மொழியால் வேறுபட்டிருந்தாலும் எல்லோரும் மனிதர்கள்தான் என்ற உண்மையை இதன் மூலம் புரிந்துகொள்கிறேன்.

மாணவர்களுக்குச் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?
பலரும் குடும்ப பிரச்னையால் கனவுகளை அடைவதில் பின்வாங்கிவிடுகிறார்கள். குடும்பப் பொறுப்பை ஏற்கும் அதேசமயம், உங்கள் கனவுகளுக்காகவும் உழைக்க வேண்டும். நான் பிளஸ் 2வுக்குப் பிறகு மரம் அறுக்கும் வேலை பார்த்தேன். அப்போதும் கூட, என் லட்சியத்தை விடவில்லை. அதை அடைவதில் நிறைய தடைகள் வரும். ஆனால் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, அது தரும் அனுபவங்கள் உங்களை வலிமையாக்கும்.
எல்லோரும் ஐ.ஏ.எஸ். தான் ஆக வேண்டும் என்றில்லை. ஆனால், அத்தகைய வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் தத்துவம் ஒன்றுதான். நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் செய்யப்படுகிற தொடர் உழைப்புதான் வெற்றி என்பது. பலனை உடனுக்குடன் எதிர்பார்க்காமல் உங்கள் குறிக்கோளை நோக்கி நகர்ந்துபோக வேண்டும். குறிக்கோளை அடைய காலம் அதிகமாகலாம். ஆனால், கனவுகளைத் துரத்திச் செல்ல வயதோ, காலமோ ஒரு தடையல்ல.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement