Advertisement

கேள்வியே ஆரம்பம்; விவாதமே திறவுகோல்!

உமா மிஸ் தன் வகுப்பறைக்கு என்னை அழைத்திருந்தார். நானும் என் நண்பர்கள் சிலரோடு அவரது வகுப்பறைக்குப் போனேன். வழக்கம்போல் இன்று வேறு ஏதோ ஒரு விஷயத்தை உமா மிஸ் செய்யப் போகிறார் என்பது மட்டும் உள்மனத்தில் தோன்றிக்கொண்டே இருந்தது.
அது என்ன புதுமை என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு வகுப்பறைக்குள் நுழைந்தேன். வகுப்பையே இரண்டாகப் பிரித்து ஒருபக்கம் ஓர் அணியும் எதிர்பக்கம் மற்றோர் அணியும் நின்றுகொண்டிருந்தன. துருதுருவென பேச்சு, கையில் இருந்த காகிதத்தில் என்னவோ திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டு, பேசிக்கொண்டு, பட்டாம்பூச்சிகள் போல் பரபரத்துக்கொண்டு, பார்க்கவே அழகாக இருந்தார்கள்.
நாங்கள் மற்ற மாணவர்களோடு, பார்வையாளர்கள் மாடத்தில் உட்கார்ந்துகொள்வது மாதிரி சுற்றி இருந்த இருக்கைகளில் அமர்ந்துகொண்டோம். அது அறிவியல் வகுப்பு.
உமா மிஸ் ஆரம்பிக்கச் சொல்ல, ஓர் அணியில் இருந்த பெண், விருட்டென்று எழுந்து, “நம் வீட்டு வாசல் கதவுகளில் கைப்பிடி ஏன் ஓர் ஓரமாக வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்.
ரொம்ப புதிதாக இருந்தது கேள்வி. எதிர் அணியில் இருந்த பையன் ஒருவன் எழுந்து பதில் சொன்னான். இல்லை, விளக்கம் சரியில்லை என்பது போல் இந்தப் பக்கம் பெண் மறுக்க, இன்னொரு பையன் விளக்கம் சொன்னான்.
எதிர் அணியில் இருந்த பையன் ஒருவன் எழுந்துகொண்டு, “மழை வருவதற்கு முன்பு ஈசல் ஏன் வருகிறது? அது ஏன் போய் டியூப்லைட்டை போய் முட்டிக்கொண்டே இருக்கிறது?” என்று ஆரம்பித்தான்.
இந்தப் பக்க அணியில் இருந்த ஒரு பெண், “ஈசல்களுக்கு பூமியில் நல்ல ஈரமும் சீரான காற்றும் நல்ல நிலா ஒளியும் இருந்தால் போதும். அவை வெளியே வரும். கூடவே அதற்கு வெளிச்சத்தின் மேல் ஓர் ஈர்ப்பு இருக்கும். அதாவது வெளிச்சத்தில் கொஞ்சம் வெப்பமும் இருக்கும் இல்லையா? அந்த வெப்பத்தை அனுபவிப்பதற்காக டியூப்லைட்டைப் போய் முட்டி முட்டி மோதுகின்றன….”
ஓ! அப்படியா விஷயம்!
இன்னொரு பையன் எழுந்துகொண்டு அடுத்த கேள்வி கேட்டான், “பூமிக்குக் கீழே சுரங்கப் பாதை கட்டி மெட்ரோ ரயில் போகிறதே. மேலே எவ்வளவோ வாகனங்கள் போகின்றன. ஆனால், சுரங்கம் சரிவதில்லையே. ஏன்?”
இத்தனை நாள் நான் யோசித்த கேள்வி இது. என்னைப் போலவே இவர்களுக்கும் அந்தக் கேள்வி தோன்றியுள்ளதே!
எதிர்பக்கம் இருந்த பையன் ஒருவன் எழுந்துகொண்டான். “சுரங்கப் பாதையைப் பார்த்திருக்கிறீர்களா? ஓரங்கள் எப்படி இருக்கும்?”
“வட்டமாக இருக்கும்.” முதலில் கேள்வி கேட்ட பையன் பதில் சொன்னான்.
“அதுதான் காரணம். அதாவது மேலே போகும் அத்தனை வாகனங்களின் எடையையும் சுரங்கம் தன் மீதே ஏற்றிக்கொள்வதில்லை. அதைப் பகிர்ந்து கொண்டுவிடுகிறது. அதனால் தான் சுரங்கத்துக்குள் மூலைகள் இருக்காது. வட்ட வடிவில் இருக்கும். இதற்கு இன்னொரு உதாரணம் சொல்லட்டுமா?”
“சொல்லு.”
“சோப் குமிழி எப்படி உடையாமல் அப்படியே இருக்கிறது? இத்தனைக்கும் சுற்றியிருக்கும் வளிமண்டல அழுத்தம் வேறு இருக்கிறதே?”
இந்தப் பக்க பையன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தான். நானும் தான். குமிழ் கொஞ்சநேரமேனும் இருக்கிறது. ஒருசில நொடிகள் தான் என்றாலும், அதனால் எப்படி தாக்குப் பிடிக்க முடிகிறது?
“தெரியலை.”
“அதுவும் அட்மாஸ்ஃபியரிக் பிரஷரை டிஸ்டிரிபியூட் செய்துவிடுகிறது. அதாவது, குமிழ் வட்டமாக இருப்பதால், அந்த அழுத்தம் சுற்றி பகிர்ந்துகொள்ளப்படுகிறது. அதனால், ஒருசில நொடிகளேனும் சோப் குமிழ் உயிர்வாழ்கிறது…”
சே! இதுதான் காரணமா? கிட்டத்தட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் இதுபோல் சுமார் 25, 30 கேள்விகள், பதில்கள். அன்றாட வாழ்வில் நடைபெறும் அத்தனை விஷயங்களுக்கும் அறிவியல் விளக்கங்கள். எல்லாமே மாணவர்களே எடுத்துச் சொன்னார்கள்.
உமா மிஸ் நடுநடுவே தலையிட்டார்கள். அறிவியல் விளக்கம் தப்பாக இருந்தாலோ, பேச்சு திசை மாறிப் போனாலோ, மிஸ் தான் அதைச் சரிசெய்தார்கள். அறிவியல் போல் தோன்றிய விளக்கங்களை எல்லாம்கூட மிஸ் ஒதுக்கிவிட்டார்கள்.
அறிவியல் ரீதியாக விளக்கம் தெரியவில்லை என்றால், அப்போது உமா மிஸ் முழுமையாக விளக்கம் கொடுத்தார்கள். வெளியே பிரீயட் முடிந்ததற்கான பெல் அடித்த பிறகும் மாணவர்கள் கேட்பதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொருவரும் அவ்வளவு ஆக்ரோஷத்துடன் விளக்கம் சொல்வதும் கேள்வி கேட்பதுமாக இருந்தனர். நான் தான் அடுத்த வகுப்புக்குப் போகவேண்டும் என்று கிளம்பிவந்துவிட்டேன்.
மாலை வீடு திரும்பும்போது, உமா மிஸ் விளக்கம் அளித்தார்கள். “நாம் எதெதுக்கோ விவாதம் செய்யறோம். ஒருத்தரோடு அறிவு அடுத்தவர் கிட்ட போய் சேருவதற்கு விவாதம் ஒரு முக்கியமான வழிமுறை. விவாதத்தையே ஒரு கல்விமுறையா வளர்த்தெடுத்து இருக்காங்க. நாம காலையில் பார்த்தது அப்படித்தான். நான் ஏற்கெனவே என்னென்ன கேள்விகள் கேக்கணும்னு இரண்டு பக்கமும் சொல்லிட்டேன். ஆனால், அதுக்கான பதில்களை அவங்களே தேடிக் கண்டுபிடிக்கணும். அதை அடுத்தவங்களுக்குப் புரியறா மாதிரி விளக்கணும். கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியணும். பயப்படக் கூடாது. மாற்று விளக்கம் வந்தா, அது சரியா இருந்தா, ஏத்துக்கணும். இன்னிக்கு சுமார் 30 கேள்விகள் எடுத்துப் பேசினோம். எல்லாமே நம்மைச் சுத்தி நடக்கிற விஷயங்கள். இதுகளை நாம ரொம்ப சாதாரணமாக எடுத்துக்கிட்டிருக்கோம். ஆனால், எல்லாத்துக்கும் ஓர் அறிவியல் விளக்கம் இருக்கு. காரணம் இருக்கு. அதை அவங்களே கண்டுபிடிச்சு சொன்னாங்க. பதில் சொன்னவங்க, அதுக்காகப் படிச்சாங்க, கேள்வி கேக்கறவங்களும் அதுக்காகப் படிச்சாங்க. எல்லோருக்கும் எப்படி கேள்வி கேக்கணும்னு தெரிஞ்சுபோச்சு. இனிமே அவங்ககிட்ட இந்த அறிவியல் ஆய்வு மனப்பான்மை இயல்பாவே வளர்ந்துடும் இல்லையா?” என்றார்.
ஆம், கேள்விதான் விடைக்கான ஆரம்பம். விவாதம்தான் தெளிவுக்கான திறவுகோல். இனிமே நிறைய கேள்விகள் எழுப்பவும், மற்றவர்களோடு விவாதம் செய்யவும் வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement