Advertisement

இதய திருடி!

படைப்பு : ரமாவும் உமாவும்
விலை : ரூ. 195
வெளியீடு: க்ரியா, சென்னை.
95516 61806


காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மட்டுமே ஏற்படக் கூடியதா; இரு பெண்கள் தங்களுக்குள் காதல் வயப்படுவது சாத்தியமா; அது இயல்பா; ஆம் எனில், அந்த நேசம் எப்படிப்பட்டதாக இருக்கும்; ஆணும் பெண்ணும் காதலிப்பது போன்று இயல்பானதாக இருக்குமா அல்லது வேறு மாதிரியானதாக இருக்குமா?
திலீப் குமார் படைத்த சிறுகதை பாத்திரங்களான ரமாவும் உமாவும் தங்களுக்குள்ளான உரையாடல் வாயிலாக என்னுடைய இந்த கேள்விகளுக்கு விடை தந்தனர்.
'வினோதமாக இருக்கிறது எல்லாம்! என் நாற்பதாவது வயதில் காதல் வயப்பட்டிருக்கிறேன். அதுவும் இன்னொரு பெண்ணோடு!' - உமா
'அதற்காக வருத்தப்படுகிறாயா?' - ரமா
'இதன் சிறுமை என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது!'
'இதில் சிறுமை எங்கே வந்தது?'
'எங்கோ ஒரு கடற்கரையோர விடுதியில் இரண்டு வளர்ந்த பெண்கள் காதல் கொண்டது எப்படி மகத்தானதாக இருக்க முடியும்?'
'மகத்தானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது ஒரு அற்புதமான தருணம்!'
உமாவுக்கு ரமா வழங்கிய இந்த விளக்கம் என் சிந்தனையில் இருந்த அடைப்பை நீக்கியது. நமக்கு பரிச்சயமற்றது என்பதாலேயே எதுவொன்றும் சிறுமை ஆகாது தானே! அப்படித்தான் ரமா - உமா இடையிலான காதலும். நம் பார்வையில் பிழையிருக்கும் போது காட்சியை எப்படி நம்மால் சரியாக விவரிக்க முடியும்?
'உனக்கு ஏன் என்னை பிடித்தது?' - உமா
'உன் உயரம், உன் பால் மேனி, மழுங்கிய மூக்கு நுனி, மென்மையான கண்கள், உன் நளினம், உன் குழைவான புன்னகை, நீ அணிந்திருந்த வெளிர் மஞ்சள் புடவை... எத்தனை வசீகரமாய் இருந்தாய் நீ தெரியுமா? பார்த்த முதல் கணத்திலேயே நான் உன்னை காதலிக்கத் துவங்கி விட்டேன். நீ சொல், உனக்கு என்னை பிடிக்கவில்லையா?' - ரமா
'பிடித்திருக்கிறது. உன்னோடு நட்பாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அதற்காக இப்படி ஒரேயடியாக கவிழ்ந்து விடுவோம் என்று நினைக்கவில்லை!'
'நாம் எங்கேடி கவிழ்ந்தோம்! யாரும் கவிழவும் இல்லை; மூழ்கவும் இல்லை. சொல்லப் போனால் இப்போது தான் நிமிர்ந்து நிற்கிறோம்!'
அட... கிட்டத்தட்ட இதே போன்ற பதில் தானே என் காதலனிடத்தில் 'என்னை ஏன் உனக்கு பிடித்தது?' என்று நான் கேட்டபோதும் வந்தது. அவனை பார்த்த கணத்தில் என்னுள் ஏற்பட்ட ஈர்ப்பு தானே பின்னாளில் காதலானது. ரமாவும் உமாவும் எங்களை போன்று தானே காதல் வயப்பட்டு இருக்கின்றனர். தவிர, ரமா அக்கணம் தாங்கள் நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறாள். சுய விருப்பத்தில் வாழும் கணம் நிமிர்ந்து நிற்பதாகத் தானே ஆகும்.
'எனக்கு உன்னைப் பிரியவே மனமில்லை...' - உமா
'எனக்கும்தான். ஆனால், நாம் பிரியத்தான் வேண்டும் இல்லையா?' - ரமா
'நீ என்னை மீண்டும் சந்திக்க விரும்புவாயா?'
'தெரியவில்லை. விரும்புவேன் என்று தான் நினைக்கிறேன். உமா, உண்மையிலேயே நீ ஒரு அற்புதமான பெண்!'
'நீயும்கூட அற்புதமான பெண் தான்!'
'நாம் இருவருமே அற்புதமானவர்கள்!'
'ஆனால், நாம் சாதாரணமானவர்கள்!'
'அதனால் என்ன; உலகமே சாதாரணமானவர்களால் நிறைந்து கிடக்கிறது. சாதாரணமானவர்கள் தான் இந்த உலகத்துக்கே எழில் ஊட்டுகின்றனர்!'
'...'
'என் அருகில் வா. நான் உன்னை ஒரு முறை தழுவிக் கொள்கிறேன்!'
அவ்வளவுதான் ரமாவும் உமாவும் பிரிந்தார்கள். ஒருவரை ஒருவர் பழி சொல்லாமல், வசை பாடாமல் தங்களின் காதலைப் போலவே இயல்பாக பிரிந்தனர். ஆஹா... எவ்வளவு அற்புதமான காதல் இவர்களுடையது. இவ்வளவு நாள் இதையா நான் சிறுமையாக நினைத்து வந்தேன். கூடாது... இனி எந்தவொரு ரமாவையும் உமாவையும் சிறுமையாக கருதக் கூடாது.
'காதலுக்கு சாதி மதம் மட்டுமல்ல; பாலின பேதமும் கிடையாது' என்பதை உணர்த்திய ரமாவுக்கும் உமாவுக்கும் நன்றிகள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement