மனம் விட்டு பேசுவது மகிழ்ச்சி!
இன்று சின்னத்திரை, சினிமா, பத்திரிகை என்று எல்லா மீடியாவிலும் எழுதி, புகழின் உச்சியில் இருக்கும் எழுத்தாளர் தேவிபாலா அவர்களிடம் அவருடைய சந்தோஷத் தருணங்கள் குறித்து கேட்டபோது முதலில் என்ன சொன்னார் தெரியுமா? எனக்கு சந்தோஷம் தருவது, மங்கையர் மலர் வாசகர்களுடன் என் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதுதான்.அவரிடம் நாம் நன்றி சொன்ன பிறக, ஓர் அற்புதமான தத்துவத்துடன் ஆரம்பித்தார்.
யாராயிருந்தாலும், ஒவவொருவரும் நம்மை நாமே நேசிக்கக் கற்றுக் கொண்டால் சந்தோஷமாக இருக்கலாம்.
கடந்த முப்பது வருடஙகளாக எழுத்துகளோடு இணைந்த என் வாழ்க்கை ஓர் ஆனந்த வம். அப்புறம் கதை டிஸ்கஷன், மீட்டிங் என்று பகல் முழுவதும் பிசியாக இருப்பதால், இரவில் குடும்பத்துடன் ஒன்றாய் அமர்ந்து கலகலப்பாகப் பேசியபடியே சாப்பிடுவது மனநிறைவைத் தருகிறது.
விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு உட்கார்ந்து ஒரு மணி நேரமாவது அரட்டை அடிக்கும்போது, ஆளுக்கொன்று பேசுவதும் கலகலப்பாகச் சிரிப்பதும் ஆனந்தம் தரும் பொழுதுகள் என்கிறார்.
தேவிபாலாவின் மற்றொரு சந்தோஷம் கொஞ்சம் வித்தியாசமானது.
வீட்டில் திருமணம் போன்ற விசேஷங்கள் வரும்போது மனைவி, மகள், சகோதரிகளுடன் புடைவைக் கடைகளுக்குச் செல்வது, கலர், கார்டர், தலைப்பு, யாருக்கு எது பொருத்தம் என்று விவாதித்துத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது ரொம்பப் பிடிக்குமாம். அப்போது சந்தோஷமாக இருக்குமாம்.
அந்த லிஸ்ட்டில் நகைக்கடை உண்டா? கேட்டால்...
நிச்சயமா என்று சிரிக்கிறார். அதனால்தான் பெண்களுக்கு பிடித்த எழுத்தாளர் என்கிறார்களோ?
பொதுவாகப் பயணம் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு ரயில் பயணம்தான் மற்றதைவிட மகிழ்ச்சி தரும் என்கிறார்.
அதுவும் குடும்பத்தில் மகள், மாப்பிள்ளை, சம்பந்திகள், சகோதரிகளின் குடும்பம் என்ற குறைந்த பட்சம் பதினான்கு பேர் சேர்ந்து போவோம். எடுத்துக் கொண்டு போகும் வீட்டுச் சாப்பாட்டைப் பகிர்ந்து சாப்பிட்டு, இரவு பன்னிரண்டு மணி வரை அரட்டை அடித்துக் கொண்டு... ஆஹா ஆனந்தமல்லவா அது...! வருடம் இரண்டு முறையாவது வெளியூர் கிளம்பிவிடுவோம்.
உறவினர் வீட்டு வைபவங்களில் தவறாமல் கலந்து கொள்வோம். ஒரே இடத்தில் எத்தனை பேரைச் சந்திக்க முடிகிறது. நாதஸ்வரம் இசைப் பின்னணியில், மலர்கள் அட்சதை மணத்துடன் எல்லோருடனும் பேசுவது சந்தோஷமான அனுபவமல்லவா? உறவுகள், மனிதர்கள், நட்பு என்று எப்போதும் நம்மைச் சுற்றியிருந்தால் சந்தோஷம்தானே? என்று சிரித்தபடியே சொல்கிறார் தேவிபாலா.
- பத்மினி பட்டாபிராமன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!