Load Image
dinamalar telegram
Advertisement

மகிழ்ச்சி (மழலை முதல் முதுமை வரை)

சக்கர வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் சந்தோஷமா? அது எங்கே கிடைக்கும்? கிலோ என்ன விலை? என்று கேட்கும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. துக்கத்தைத் தாங்கும் மனநிலையோ, சோதனைகளை ஏற்கும் பக்குவமோ, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோ எவருக்கும் இல்லை என்றே சொல்லலாம். சரி.. என்ன செய்யலாம்? மழலை முதல் முதுமை வரை அந்தந்தக் கால கட்டத்தில் எது நம்மை சந்தோஷப் படுத்தும்? என்று சிந்தித்துச் செயல்படலாம்.

குழந்தைகள் : அள்ளிக் கொஞ்சுதல்

ஒரு பர்த்டே பார்ட்டி அத்தைகிட்ட, வாடி செல்லம் என்றதும் குழந்தை தாவியது. எத்தனை கிஃப்ட் வாங்கித் தந்திருப்பேன். என்கிட்ட மட்டும் வராளா பாரு? பக்கத்தில் இருந்த பெரியம்மாவுக்குச் செல்லக் கோபம்.
குழந்தைகளுக்குப் பிடித்த பொருட்களை வாங்கித் தந்தாலும், அது அந்த நேர சந்தோஷம் தானே தவிர, நிரந்தர சந்தோஷமாகிவிடாது. அப்ப, குழந்தைகளுக்கு எதுதான் மகிழ்ச்சி? கொஞ்சுதல், உதடு குவித்துப் பேசும் அழகை ரசித்தல், அது சிரிக்கும்போது சிரித்தல்.
ஆனால், இன்றோ குழந்தைக்கு முத்தம் கொடுப்பது கூட ஹைஜீன் பிரச்னை, அள்ளித் தூக்கினால், புடைவை கசங்கி விடுமோ என்ற பயம், அக்கம் பக்கத்தில் குழந்தையைப் பார்த்தாலும், உதடு பிரியாமல் ஒரு ஸ்மைல்... flying kiss.
குழந்தையை அள்ளி அணைத்துக் கட்டிப் பிடிக்கும்போது குழந்தை அளவிட முடியாத சந்தோஷத்தை அடைவது உறுதி. எனவே, அள்ளிக் கொஞ்சுங்கள். ஆரத் தழுவுங்கள். குழந்தையின் முகத்தில் சந்தோஷம் நீடித்து இருப்பது நிரந்தரம்.

மாணவ மாணவிகள் - விளையாட்டும், கொண்டாட்டமும்
13 வயது மகன் ஓடி வந்து, அம்மா நான் கிரிக்கெட்டில் தொடர்ந்து 4 சிக்ஸர் என்றதும், சிறுவனின் அம்மா முகத்தில் அப்படியொரு பெருமிதம்.
வேற என்ன கேம் எல்லாம் விளையாடுவ என்று கேட்டார் வந்திருந்த பெரியவர், பேட்மின்டன், ஹார்ஸ் ரைடிங், செஸ் என்றான். எல்லாத்துக்கும் எங்க நேரம் கிடைக்குது. எங்க போய் கத்துக்கற என்றார், அம்மா. மகன் முகத்தில் நமுட்டுச் சிரிப்பு, போனில் ஆப் டவுன்லோடு பண்ணி கேம் விளையாடுவதைத்தான் அவர்கள் பெருமையாகச் சொன்னார்கள். இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டால், ஒபிசிட்டி, உடல் ஆரோக்கியம் அல்லவா கெடும். வியர்க்க விறுவிறுக்க தினமும் ஒரு மணி நேரம் ஓடிப் பிடித்து விளையாடுவதால் உடலும், மனமும் சந்தோஷத்தில் மிதக்கும்.
கல்லூரியில் படிக்கும் காலம் ஆற்றல் மிகுந்தது. எப்படிப்பட்ட இடையூறுகளையும் உடைத்தெரியும் பலம், புதியது எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் என வேகம் நிறைந்த பருவம். இந்த இளம் பருவத்தில் எப்போதும் கொண்டாட்டம்தான், நட்போடு மட்டுமல்ல.. பெற்றோருடனும் இருக்கட்டும். நல்ல நட்பு வட்டாரத்தைப் பெருக்குங்கள். சந்தோஷத்தைக் கூட்டுங்கள். பலவீனங்களை கழியுங்கள். ஆரோக்கியமான பாதையை வகுத்துக் கொள்ளுங்கள்.

வேலைக்குச் செல்பவர்கள் - அங்கீகாரமே அஸ்திவாரம்
கஷ்டப்பட்டு படித்து, வேலையில் அமர்ந்தவுடன், நம்முடைய எதிர்பார்ப்பு எதுவாக இருக்கும்? படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும், உழைபபுக்கேற்ற ஊதியத்தை தேடுவோம். இதன் மூலம் உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டால், அதைவிட என்ன சந்தோஷம் இருக்க முடியும்? அங்கீகாரம்தான் மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம். போட்டிகள் நிறைந்த உலகமிது. உயர்வுக்கான உச்சத்தை அடைவதில் அதிக இடையூறுகள் இருக்கத்தான் செய்யும் ஆனால், முடியாதது என்று ஒன்றும் இல்லை. உங்களின் ஒவ்வொரு திறமைக்கும் தீனி போடுங்கள். உங்களின் பதவிக்கு வேறொருவர் வரிசையில் நிற்கலாம். அதனால், தக்கவைத்துக் கொள்ளும் வழிகளை தேடுங்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலமே உரிய அங்கீகாரம் கிடைக்கும். எடுத்துச் செய்வது, கற்றுக் கொள்ளுவது, துணிந்து செயல்படுவது, பொறுப்பை ஏற்பது என செய்யும் வேலைகளில் புயலாக சீறிப் பாய்ந்தால் மட்டுமே உரிய அங்கீகாரம் உங்களை வந்து சேரும். இதுவே, சமுதாயத்தில் உங்களுக்கான நல்ல அந்தஸ்தைப் பெற்றுத் தரும்.

கடமையை முடித்தவர்கள் - ஆரோக்கியம்
வேலையிலிருந்து ரிடையர்டு ஆவதற்குள் பிள்ளைகளை ஆளாக்கி, திருமணத்தை முடித்து விடவேண்டும் என்று நினைத்து, காலத்தைக் கடக்க வேண்டிய காலகட்டம் இது. ஏனெனில் 50 வயதைக் கடப்பதற்குள், அத்தனை நோய்களும் வீட்டு வாசல் கதவைத் தட்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். இருபது வயதில் சாப்பிட்டதுபோல், ஐம்பது வயதில் சாப்பிடாதீர்கள். சத்து உணவுகளைத் தேடிப் பிடித்து உட்கொள்ளுங்கள். பெண்களுக்கே உரிய மெனோபாஸ் தருணம் என்பதால், மனநிலையும் ஒரு நிலையில் இருக்காது. பீரியட்ஸ் காலம் முடியும் தறுவாயில், பல்வேறு நோய்கள் நம்மை நெருங்கலாம். அதற்கு வாய்ப்புத் தராமல், மெனோபாஸ் பருவத்தை மென்மையாகக் கடக்கலாம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை சக்கரை, கொலஸ்ட்ரால், ரத்தசோகை போன்ற பரிசோதனைகளைச் செய்து, உங்களின் உடல்நிலை குறித்த விழிப்பணர்வுகளோடு இருங்கள். கோயில், பொது கூட்டங்களுக்குச் செல்லுதல் என ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
மனதை ஒருநிலைப்படுத்த தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். 45 நிமிடங்கள் யோகா செய்வதன் மூலம் மாதவிடாய் சீரின்மையை சரிப்படுத்திவிட முடியும். உடலும் நன்கு வலுப்பெறும். ஆரோக்கியம் கைகூடினால், இருக்கும் காலம் வரை எல்லையில்லா சந்தோஷம் நிச்சயம்.

முதியோர்கள் - அன்பும்... அரவணைப்பும்
இன்றைய வாழ்க்கை முறையில் எதுவும் தவறில்லை என்றாகிப் போனது. பணத்தை நோக்கி, வாழ்க்கை பயணித்துவிட்டத. பணம் எப்போதும், நம்மோடு வரப்போவதில்லை; இரு்கும் காலம்வரை காட்டிய அன்பும், கொடுத்த உதவியும், செய்த பலன்களுமே நம் பின்னால் வரப் போகின்றன என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
ஒருநாளில் 24 மணி நேரமுமா பணியில் இருக்கிறோம்? 8 மணி நேர வேலை முடிந்ததும், சாப்பிடவும், தூங்கவும் பொழுதைக் கழிக்கவும். பீச், சினிமா என குடும்பத்துடன் போகவும் நேரம் செலவழிக்கத்தானே செய்கிறோம். வீட்டிலிருக்கும் பெரியோர்களுக்குச் சரியான நேரத்துக்குச் சாப்பாடு கொடுத்தால் மட்டும் போதாது. தினமும் ஒரு அறை மணி நேரமாவது அவர்களுடன் அன்பாக பேசி நல்ல விஷங்களை நினைவுகூர்ந்து... அவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது ஒன்றே அவரகளின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும். அருகில் இருக்கும்போதே இத்தனை அன்பு காட்ட வேண்டிய அவசியம் இருக்கையில், பணி நிமித்தம் பிள்ளைகளைப் பிரிந்து தனித்த விடப்பட்ட பெற்றோர்களைக் கண்டு கொள்ளாமல் விடுவது மிகவும் பாவமான செயல். வெளியூரில் இருக்கும் பெற்றோர்களிடம் தினமும் போனில் பேசுங்கள். நலம் விசாரியுங்கள். விசேஷ நாட்களில் அவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள்.
பிள்ளைகளின் அன்பும், அரவணைப்புமே வயதான காலத்தில் பெற்றோர்களுக்கு சந்தோஷத்தைத் தரும். நிம்மதியான மனநிலையை உண்டு பண்ணும். இதுவே, அவர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும்.

- ரேவதி சூர்யா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement