காட்டாமணக்கு
ஆங்கிலப் பெயர்கள்: 'பெல்லியேக் புஷ்' (Bellyache Bush), 'பிளாக் பிசிக்நட்' (Black Physicnut)
தாவரவியல் பெயர்: 'ஜட்ரோபா கோசிபிஃபோலியா' (Jatropha Gossypifolia)
தாவரக்குடும்பம்: 'ஈபோபியாசியே' (Euphorbiaceae)
வேறுபெயர்கள்: முள் கத்திரி, ஆதாளை, எலியாமணக்கு
பயன்தரும் பாகங்கள் : இலை,பால், பட்டை, எண்ணெய்
பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது காட்டாமணக்கு. செடியாகவும், சிறு மரமாகவும் வளரும். பார்ப்பதற்கு கள்ளிச்செடி போலத் தோற்றளிக்கும். இந்தத் தாவரத்தின் பூர்வீகம் மெக்சிகோ. சுமார் 5 மீட்டர் உயரம் வரை வளரும். வெப்ப மண்டல, மித வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்றாக வளரும். வறட்சியைத் தாங்கி வளரும். தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் வேலிக்காகப் பயிர் செய்யப்படுகிறது. சுமார் 35 ஆண்டுகள் வரை வளர்ந்து பயன்தரக்கூடிய மரம் இது. நுனியில் பிளவுகளை உடைய நன்கு அகலமாக விரிந்த இலைகள் கரும்பச்சை நிறத்தில் காணப்படும். தண்டு மிருதுவாகவும் நீளமாகவும் இருக்கும். கொத்துக்கொத்தாகப் பச்சை கலந்த மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும். வெப்பமான காலங்களில் பூக்கள் தோன்றும். காய்கள் கரு நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். ஒரு கொத்தில் பத்துக்கும் மேலான காய்கள் காய்க்கும். காய்த்து நான்கு மாத காலத்தில் காய்கள் மஞ்சள் நிறமாக மாறி முற்றி வெடிக்கும்.
இந்தத் தாவரத்தின் இலை, பால், பட்டை, எண்ணெய் போன்ற பாகங்கள் மருத்துவப் பயன்களைத் தருகின்றன. இலை, தாய்ப்பாலையும், உமிழ்நீரையும் பெருக்கும் தன்மைகொண்டது. செடியிலிருந்து வரும் பால் ரத்தக்கசிவு நிறுத்தவும், நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படும். இலைகள் பட்டுப்பூச்சிகளுக்கு உணவாகவும் பயன்படும். மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கருநீல வண்ணம் துணிகளுக்கும், மீன் வலைகளுக்கும் நிறம் கொடுப்பதற்கு உதவுகிறது. காட்டாமணக்கு விதையின் உள்ளே இருக்கும் வெள்ளையான பருப்பிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் மாற்று எரிபொருளான பயோ டீசல் தயாரிக்கப் பயன்படுகிறது.
- கி.சாந்தா
இயற்கையான எரிபொருள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!