Load Image
dinamalar telegram
Advertisement

திட்டமிட்டால் திருமணம் தித்திக்கும்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத இனிய தருணம் - திருமணம் தான். 'வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்' என்பார்கள். சிறப்பாக ஒரு திருமணத்தை நடத்துவது அவ்வளவு எளிதானதல்ல. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் கூட சரியான முறையில் திட்டமிடாவிட்டால், திருமணத்தைப் பலர் போற்ற சிறப்பாக நடத்துவது சாத்தியமில்லை. உறவுகளும், நட்புகளும் குற்றம் குறை காணாதபடி திருமணத்தை நடத்தி முடிப்பது இந்தக் காலத்து பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவால் தான்

'கவலையை விடுங்க, எங்களைப்போல இருக்கிற வெட்டிங் பிளானர்ஸ்கிட்டே உங்க வீட்டு திருமண ஏற்பாடுகளை ஒப்படைச்சுட்டு நிம்மதியா இருங்க' என்று உதவிக்கரம் நீட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா கிருஷ்ணன். கடந்த 5 ஆண்டுகளாக ஈவன்ட் அன்ட் வெட்டிங் பிளானராக இருக்கும் இவர், 'அதுல்'யா என்ற தனது நிறுவனத்தின் மூலம் திருமணம், பிறந்தநாள், சஷ்டியப்த் பூர்த்தி, கார்ப்ரேட் நிகழ்வுகள் என்று பல நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருகிறார், தமது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் ஸ்ரீவித்யா.

'தங்களோட பிள்ளைகளின் திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்தணும்கிறதுதான் ஒவ்வொரு பெற்றோரோட விருப்பமா இருக்கு. திருமணத்தை எங்கே நடத்துறதுங்கறதுல தொடங்கி, சாப்பாடு, மணப்பெண் அலங்காரம், ஜானவாசம், ஊஞ்சல்னு பலவித சம்பிரதாயங்கள், சடங்குகள், கடைசியா தாம்பூலம் கொடுக்கறது வரை ஒவ்வொண்ணையும் சரியாக திட்டமிட்டு, செய்தாத்தான் அந்த திருமணம் சிறக்கும். அப்படி துல்லியமா திருமணத்தை திட்டமிட்டு நடத்தி கொடுக்கிறதுல எங்களைப் போன்ற வெட்டிங் பிளானர்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறாங்க. திருமணத்துக்காக ஒதுக்கியிருக்கிற பட்ஜெட்டை பொறுத்தும், ஒவ்வொருத்தரோட தேவைகளுக்கேத்தபடியும் கல்யாணத்தை நடத்த தேவைப்படும் எல்லா ஏற்பாடுகளையும் நாங்க செய்து தர்றோம். இதற்காக திருமணத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடுறோம். இப்பல்லாம் நிறைய பேர் வித்தியாசமான திருமணங்களை நடத்த விரும்புறாங்க. தீம்மாட்டிக் திருமணங்கள், டெஷ்னினேஷன் வெட்டிங்னு பல விதமான திருமணங்கள் இப்ப வந்துடுச்சு, உதாரணமா ராதா - கிருஷ்ணா தீம்ல கல்யாணம் நடத்த விரும்புறவங்களுக்கு ஏத்தபடி, கல்யாண மண்டபத்துல ஆரம்பிச்சு, தாம்பூலப் பை கொடுக்கறது வரை எல்லாமே ராதா - கிருஷ்ணா தீம்ல இருக்கும். சிலர் ஏதாவது ஒரு தீவுல அல்லது மலைவாசஸ்தலத்துல தங்களோட பிள்ளைக கல்யாணத்தை நடத்த விரும்பலாம். அவர்களுக்காக குறிப்பிட்ட இடத்துக்கே எல்லாப் பொருட்களையும் எடுத்திட்டுப் போய் சிறப்பாக கல்யாணத்தை நடத்தி தர்றோம்' என்று விவரிக்கும் ஸ்ரீவித்யா, மும்பையைச் சேர்ந்த ஒரு ஜோடியின் திருமணத்தை பூனாவிலுள்ள மலைவாசஸ்தலத்தில் நடத்தி கொடுத்திருக்கிறார்.

'எனக்குன்னு ஒரு டீம் இருக்கு, ஒவ்வொரு கல்யாணத்தையும் எங்க வீட்டு கல்யாணம் போலவே நான் நினைச்சுக்குவேன். கல்யாணக் குடும்பத்துல நானும் ஒருத்தியா இணைஞ்சிடுவேன். இதனால என் மேல் அந்தக் குடும்பத்துக்கு நல்ல நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கை தான் திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி தர உதவியா இருக்கு. உதாரணமா, ஒரு கல்யாணத்துல கல்யாணப் பொண்ணுக்கு தேவையான ஆடை அலங்கார பொருட்கள், சடங்குகளுக்கான பொருட்கள் பத்தி அவளோட அம்மாவுக்குத் தான் தெரியும். ஆனா, கல்யாண நேரத்துல அம்மா மணப்பெண் கூட மணமேடையில இருப்பாங்க. ஒவ்வொரு சடங்குக்கும் தேவையான பொருட்களை ஒருத்தரோட பொறுப்பில் விட்டா தான் பொண்ணோட அம்மா நிம்மதியா இருக்க முடியும், கல்யாணத்தை ரசிக்க முடியும். அந்த நேரத்துல நானே எல்லா பொறுப்பையும் ஏத்துப்பேன். எதேது எப்பப்பத் தேவைனு முன்கூட்டியே தெரிஞ்சுக்கிட்டு உடனடியாக எடுத்துக் கொடுப்பேன். இப்படி பெர்சனலாவும் அந்த குடும்பத்தோட இணைஞ்சு செயல்படறதால எங்க டீமோட செயல்பாடுகள் மேல மக்கள் ரொம்பவும் நம்பிக்கை வச்சிருக்காங்க, எதையும் ஆத்மார்த்தமா செய்யறது தான் என் பலம். நாம செய்யற வேலைய பார்த்து, சம்பந்தப்பட்ட மணமகளும், பெற்றோரும் அடையற திருப்தி மட்டும் தான் நம்மளோட பிஸினைஸ வெற்றிகரமாக்கும்' என்கிற ஸ்ரீவித்யா 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி கொடுத்திருக்கிறார்

உங்க பிசினஸ்ல நீங்க சந்திக்கிற சவால் என்ன?

'கல்யாணத்துல சில சடங்குகள் செய்யனும்னு சொல்வாங்க. நாம் அதற்குரிய சாமான்களை தயார் பண்ணிட்டிருக்கும் போதே. எங்க வீட்டு பெரியவங்க இப்படி பண்ணலாம்னு வேறொரு திட்டத்தை சொல்லுவாங்க. அதையெல்லாம் பொறுமையாக கேட்டு, அவங்களோட விருப்பத்துக்கேத்த மாதிரி செய்து கொடுக்கணும்.

அதே போல, முதல்ல ஒரு பட்ஜெட் நிர்ணயிச்சிருப்பாங்க. அதை திடீர்னு குறைக்கச் சொல்லுவாங்க. எந்தச் செலவுல எதைக் குறைக்கலாம்னு அவுங்க கூட உட்கார்ந்து பேசி முடிவு செய்யணும். சில திருமணங்கள்ல சமையல் காண்ட்ராக்டரே எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துடுவார். நாம தலையிடக் கூடாதுன்னு நினைப்பார். அப்ப வெளிப்படையா அவங்ககிட்ட நாம என்ன செய்யப்போறோம், அவங்க என்ன செய்யப் போறாங்ககங்கறதை கேட்டு தெளிவுபடுத்திக்கணும். தரமாகவும் கிரியேட்டிவிட்டியாகவும் இருக்கிறதோட க்ளைன்டோட பட்ஜெட்டுக்கு ஏற்றபடி நிகழ்ச்சிகளை நடத்தி தர்றது தான் வெற்றிகரமான வெட்டிங் பிளானர் முன்னால இருக்குற சவால். ஏத்துக்கிட்ட நிகழ்ச்சி நல்லபடியா முடிஞ்சு, ‛ரொம்ப நல்ல படியா நடத்தி கொடுத்தீங்கன்னு' சம்பந்தப்பட்டவங்க பாராட்டும் போது கிடைக்கிற நிறைவு இருக்கிறதே.... அது தான் இந்த பிஸினஸோட சக்ஸஸ்' என்று புன்னகைக்கிறார் ஸ்ரீவித்யா.

- ஜி. மீனாட்சி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement