பன்முகத் தன்மை கொண்ட இசையரசி
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கிணங்க, கருவிலே திருவுடையவளாய் திருமதி. ஷோபனா விக்னேஷ், சிறு வயதிலிருந்தே - ஐந்து வயதிலிருந்தே - ஒப்பற்ற, வியக்கத்தக்க இசைத் திறமையை வெளிக்காட்டினார். மேலும் திரு. ஸ்வாமிமலை ஜானகிராமன் அவர்களும் பேராசிரியர் டி.ஆர். சுப்பிரமணியம் அவர்களும் குருவாய் அமைந்து அவளது இசைத் திறமைக்கு மெருகூட்டினார். தனது அபாரமான இசைப் புலமையால் எல்லோரையும் அதிசயிக்க வைத்தவர் அவர்.
2007ம் ஆண்டு இளஞ்சாதனையாளர் விருது மிகப் பிரபலமான பத்திரிகையான இந்தியா டுடே இவருடைய கர்நாடக சங்கீதப் பணியைப் பாராட்டிக் கொடுத்தது. துள்ளித் திரியும் சின்னஞ்சிறு சிட்டாக - சிறு பெண்ணாக இவர் மகாநதி எனற தமிழ் திரைப்படத்தில் தோன்றி நடித்துப் பாடிப் புகழ்பெற்றதால் இவரை மகாநதி ஷோபனா என்றே பலரும் அழைக்கலாயினர். அந்தப் பட்டத்திற்கு ஏற்றாற்போலவே அவர் சங்கீத மழையாக அருவியாக, நதியாக வௌ்ளமாகப் பொழிந்து தள்ளுகிறார். தன்னார்வமும், பயிற்சியின் உன்னதமும், குருக்களின் வழிகாட்டுதலும் அவருடைய கச்சேரிகளிலே மின்னிப் பிரகாசிக்கின்றன. உன்னத தரத்தையும், ஆராய்ச்சியையும், ஆய்வையும் வெளிக்கொணர்கின்றன.
இசை பற்றி இவர் பல மேடைகளில் பேசுகிறார். பாடிக் காண்பிக்கிறார். பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். கட்டுரைகளைப் பல இசை மேடைகளில் வாசித்திருக்கிறார். தவிர இவரே குருவாகயிருந்து இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல இளைஞர்களை இளம் இசை வல்லுனர்களாக்கிடப் பயிற்றுவிக்கிறார்.
தன்னுடைய 13வது வயதிலேயே இவர் தமது முதல் இசை ஆல்பத்தை வெளியிட்டார். தொடர்ந்து இவர் 120க்ம் மேற்பட்ட ஆல்பங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளார். இவருடைய ஆல்பங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் மற்றும் படுகா என்று பல மொழிகளில் காணக் கிடைக்கிறது. மிகப் பிரபலமான ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ், யூனிக் ரிக்கார்டிங் கம்பெனி, சிம்பனி ரி்கார்டிங், இந்தியன் ரிக்கார்டிங் கம்பெனி, வாணி ரெக்கார்டிங் கம்பெனி என்று இன்னும் பல ஒலிப்பதிவுக் கூடங்கள் இவரது குரலை, பாடலை, இசை மழையைப் பதிவு செய்திருக்கின்றன.
ஷோபனா அவர்கள் கர்நாடக இசை மட்டுமல்லாது, இந்துஸ்தானி இசை, நாட்டுப்புறப் பாடல்கள், இந்து, கிறிஸ்துவ பக்தி பாடல்கள், திரை இசை என்று பன்முகம் கொண்டவர். இன்று உலகின் மூலை முடுக்கிலெல்லாம் அவரின் இசைக் குரல் ஒலிக்கிறது. யாஹூ, எம்.எஸ்.என் ம்யூசிக், ஐ ட்யூன்ஸ் போன்ற புதிய வகை விஞ்ஞான வளர்ச்சியால் இன்று உலகளவில் அவருடைய பாடல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வகை செய்யப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், மறைந்த மாமேதை விஞ்ஞானி, நம் தேசத்தின் ஜனாதிபதியாயிருந்த உயர்திரு அப்துல்கலாம் அவர்கள் எழுதிய பாடலொன்றைத் தன் தேன் குரலில் பாடி - இந்தியா - ஒரு இசைப் பயணம் என்ற புதியதொரு ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்.
- கொடுமுடி ஜெயராமன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!